பல்வேறு காரணங்களைக் கூறி கள்ளிக்குடி மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் செல்ல மறுத்து வரும் நிலையில், அங்குள்ள 4 பிளாக்குகளில் விவசாயிகளுக்குக் கடைகளை ஒதுக்கீடு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் நிரந்தரக் கடைகள், தரைக்கடைகள், மொத்த மற்றும் சில்லறை விற்பனைக் கடைகள் என சுமார் 3,000 கடைகளுக்கு மேல் செயல்படுகின்றன. இங்கு வந்து செல்லும் வாகனங்களால் மாநகருக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
இதைக் குறைப்பதற்காக மணிகண்டம் அருகே கள்ளிக்குடியில் ரூ.77.6 கோடி செலவில் காய்கறிகள், பழங்கள் மற்றும் மலர்களுக்கான மத்திய வணிக வளாகம் அமைக்க, கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏவாகவும், முதல்வருமாக இருந்த ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
2017-ல் முதல்வரால் திறப்பு
கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், 2017-ம் ஆண்டு செப்.5-ம் தேதி முதல்வர் பழனிசாமி இதனைத் திறந்து வைத்தார். ஆனால் இடவசதி உட்பட பல்வேறு காரணங்களைக் கூறி வியாபாரிகள் அங்கு செல்லத் தயங்கினர். எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில் கள்ளிக்குடி மார்க்கெட்டில் கூடுதல் வசதிகள் செய்து தரப்பட்டன. பின்னர், வியாபாரிகளிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் முதல் கட்டமாக 300 பேருக்குக் கடைகள் ஒதுக்கப்பட்டன.
வியாபாரிகள் செல்ல மறுப்பு
அதைத்தொடர்ந்து, கள்ளிக்குடி மார்க்கெட்டில் கடந்த 30.6.2018-ம் தேதி அப்போதைய எம்.பி.க்கள் ப.குமார், டி.ரத்தினவேல் முன்னிலையில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி ஆகியோர் விற்பனையைத் தொடங்கி வைத்தனர்.
ஆனால், 5 வியாபாரிகள் மட்டுமே அங்கு கடை திறந்தனர். காந்தி மார்க்கெட்டிலுள்ள மற்ற வியாபாரிகளை கள்ளிக்குடிக்கு மாற்ற அமைச்சர்களோ, அதிகாரிகளோ உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வியாபாரமின்றி நஷ்டம் ஏற்பட்டு, அங்கிருந்த 5 வியாபாரிகளும் கடையை மூடிவிட்டு, மீண்டும் காந்தி மார்க்கெட்டுக்கே வந்துவிட்டனர். இதனால் ரூ.77 கோடி செலவில் கட்டப்பட்ட கள்ளிக்குடி வணிக வளாகம் மூடப்பட்டு, பயன்பாடற்றுக் கிடக்கிறது.
விவசாயிகள் அங்காடி திறப்பு
இந்நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக காந்தி மார்க்கெட் வியாபாரிகளை கள்ளிக்குடிக்கு மாற்ற வேண்டும் என பல்வேறு அமைப்புகள், சமூக ஆர்வலர்களிடமிருந்து கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், வியாபாரிகள் உடன்பட மறுத்ததால் பொன்மலை ஜி கார்னரில் தற்காலிக மொத்த காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டது.
இதற்கிடையே, மூடிக் கிடக்கும் கள்ளிக்குடி வணிக வளாகத்துக்கு அருகிலேயே அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தலைமையில் செயல்படும் திருச்சி மாவட்ட மனித வளர் சங்கத்தின் சார்பில் 'கள்ளிக்குடி உழவர் அங்காடி' தொடங்கப்பட்டது.
விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்யும் வகையில் இருப்பதால் இதற்கு பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்தது. எனவே, கள்ளிக்குடி வணிக வளாகத்தின் உள் பகுதியில் விவசாயிகளுக்குக் கடைகளை ஒதுக்கித் தரும்படி ஆட்சியர் சு.சிவராசுவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதில் மாவட்ட நிர்வாகம் என்ன நிலைப்பாடு எடுக்கும் என்பது திருச்சி மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது.
வேளாண்துறை அறிவிப்பு
இந்நிலையில் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண்மைத் துறையின் கூட்டுப்பண்ணைய திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், உழவர் ஆர்வலர் குழுக்களுக்கு கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்தில் பிளாக் எண்கள் சி-4, இ-5, இ-6, இ-7 ஆகிய 4 பிளாக்குகளில் உள்ள கடைகளை ஒதுக்கீடு செய்ய திருச்சி மாவட்ட வேளாண் விற்பனைக்குழு முடிவு செய்துள்ளது.
மாத வாடகை அடிப்படையில் இக்கடைகளைப் பெறுவோர் காய்கறிகள், பழங்கள், மலர்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம் எனவும், விருப்பமுள்ளவர்கள் வரும் மே.22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண் அதிகாரிகளிடம் கேட்டபோது, "கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்தில் விவசாயிகளுக்கு அளிப்பதற்காக கட்டப்பட்ட 4 பிளாக்குகளை அளிப்பதற்கான நடைமுறைகள் தற்போது தொடங்கியுள்ளன. ஒதுக்கீடு பெறும் நபர்கள், உடனடியாக அங்கு கடைகளை அமைத்துக் கொள்ளலாம். அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன" என்றனர்.
சமூக ஆர்வலர்கள் வரவேற்பு
இதுகுறித்து திருச்சி மாநகர மேம்பாட்டு ஆர்வலர்கள் குழு உறுப்பினரான ஜெகன் கூறும்போது, "மாநகருக்கு வெளியே இருப்பதால் கள்ளிக்குடி வணிக வளாகத்துக்கு பொதுமக்கள் வரமாட்டார்கள் என வியாபாரிகள் கூறி வந்தனர். அதைப் பொய்யாக்கும் வகையில் கள்ளிக்குடி உழவர் அங்காடி செயல்பட்டு வருகிறது.
எனவே, உண்மையை நிலையை உணர்ந்து, அந்த வணிக வளாகத்திலுள்ள விவசாயிகளுக்கான கடைகளைத் திறக்க முயற்சி மேற்கொண்டுள்ள மாவட்ட ஆட்சியர் சு.சிவராசுவின் துணிச்சலான இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம். கள்ளிக்குடி வணிக வளாகம் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் மாநகரில் நெரிசல் குறையும். மாநகரின் வளர்ச்சியும் விரிவடையும்" என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago