மின்சார சட்டத்திருத்த வரைவு மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும் அதனால் அதனைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 9) பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "மின்சார சட்டத்திருத்த வரைவு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய மின்துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடமிருந்து கருத்துகளைக் கேட்டுள்ளது. தன்னிச்சையாக இயங்கும் மின்துறையைக் கொண்டுள்ள தமிழக அரசு சார்பாக, இதுகுறித்து சில கருத்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
12.11.2018 அன்று நான் உங்களுக்கு ஏற்கெனவே எழுதிய கடிதத்தில் மின்சார சட்டத்திருத்த வரைவு மாநில அரசின் சில உரிமைகளைப் பறித்துவிடும் என்று கூறியிருந்தேன். இந்த சட்டத்திருத்த வரைவு, மின்விநியோகம் முழுவதையும் தனியார்மயமாக்குதல் போன்ற திருத்தங்களை உள்ளடக்கியுள்ளது. இது பொதுமக்கள் நலனுக்கு எதிரானதாகும்.
இந்த சட்டத்திருத்த வரைவு, விவசாயம் மற்றும் வீட்டுப் பயன்பாட்டுக்கு நேரடி பணப் பரிமாற்றம் (DBT) மூலம் மானியம் வழங்குவதற்கான அம்சத்தைக் கொண்டுள்ளது. மின்சாரத்துறையில் இதனை நடைமுறைப்படுத்துவது சிரமமானது என்றும், இது விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரானது எனவும் ஏற்கெனவே எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன். விவசாயிகள் இலவச மின்சாரத்தைப் பெற வேண்டும் என்பதும், அதற்கான மானியத்தைச் செலுத்தும் முறையைத் தீர்மானிக்கும் உரிமை மாநில அரசிடமே இருக்க வேண்டும் என்பதும் எங்கள் அரசின் நிலையான கொள்கை.
மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டமைப்பை மத்திய அரசு தீர்மானிப்பது, மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்க முயல்வதாகும். இது, அரசியலமைப்பின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாகும். மத்திய மற்றும் மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களால் தீர்வு காணப்பட்ட அனைத்து விதமான ஒப்பந்தச் சிக்கல்களுக்கும், இனி மத்திய அரசால் அமைக்கப்பட உள்ள மின் ஒப்பந்த அமலாக்க ஆணையமே தீர்வு காணும் என சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்யும். மேலும், அந்த அமைப்பையே இல்லாமல் ஆக்கிவிடும்.
அனைத்து மாநில அரசுகளும் கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால், இச்சட்டத்திருத்தம் குறித்து விரிவான பதில்களை அனுப்ப மேலும் கால அவகாசம் வேண்டும். அதேசமயம், மின்சார சட்டத்தில் எந்தவொரு அவசர திருத்தங்களும் சிரமங்களை உருவாக்கக்கூடும். சட்டத்திருத்தத்தில் உள்ள சில அம்சங்கள், பொதுமக்களை இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பாதிக்கும் என்பதால், இந்தத் திருத்தங்களை கொண்டு வருவதற்கான தகுந்த நேரம் இதுவல்ல.
எனவே, இந்த சட்டத்திருத்தங்கள் குறித்து மாநில அரசுகளுடன் விரிவாக விவாதிக்கப்படும் வரை சட்டத்திருத்த வரைவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்" என முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago