கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் மக்களின் நலன் காக்கும் வகையில் உயர்நீதிமன்றம் அளித்துள்ளதாக தீர்ப்பை வரவேற்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் முயற்சிகளை அதிமுக அரசு கைவிட்டு, மக்களின் உயிரைப் பணயம் வைக்காமல், உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்று நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் வீரியமாகப் பரவிவரும் நிலையில், அந்த நெருக்கடியிலிருந்து மக்களைக் காப்பாற்ற அதில் முழுக் கவனத்தையும் செலுத்தாமல், மக்களின் உயிர் பற்றிச் சிறிதும் அக்கறையற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக் மதுக் கடைகளைத் திறந்திட உத்தரவிட்டது.
மக்கள் மீதே பழிபோட்டு, அண்டை மாநில எல்லைகளில் போய் வாங்குகிறார்கள் எனக் கூறி, தமிழ்நாட்டில் கடைகளைத் திறந்த நிலையில், முதல் நாளிலேயே எவ்வித சமூக ஒழுங்கையும் - தனிமனித இடைவெளியையும் கடைப்பிடிக்காமல் டாஸ்மாக் கடைகள் முன்பாக பெருங்கூட்டம் கூடியது. உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளும் கடைப்பிடிக்கப்படவில்லை.
அத்தியாவசியப் பொருட்களை வாங்கச் செல்லும் மக்களுக்குப் பல கட்டுப்பாடுகளை விதித்து, கெடுபிடி காட்டிய காவல்துறை, அவர்களைக் கண்காணிக்க “ட்ரோன்“ கேமராக்களைப் பயன்படுத்தி விரட்டியடித்த காவல்துறை, டாஸ்மாக் முன்பு திரண்டவர்களை ஒழுங்குபடுத்த முன்கூட்டியே வகுக்கப்பட்ட எந்த வியூகமும் இல்லாமல், மேலிடத்தின் விருப்பத்திற்கிணங்க, டாஸ்மாக்கிற்கு வந்தவர்களையும் அவர்கள் வாங்கிய மது பாட்டில்களையும் பத்திரமாகப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட நேர்ந்த அவலத்தையும் தமிழ்நாடு பார்த்தது.
மேலதிகாரிகளின் உத்தரவால் பெண் காவலர்களும் அவதிக்குள்ளாயினர். நோய்த் தொற்று அதிகமாகப் பரவுகிற சூழலில், ஊரடங்கு முடிவடையும்வரை டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது என திமுகவும், தோழமைக் கட்சிகளும் மே 7-ம் தேதி காலையில் கருப்புச் சின்னத்துடன் கண்டன ஆர்ப்பாட்டத்தை சமூக ஒழுங்குடன் நடத்தியது.
மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய நிதியைப் பெறுவதற்கான வலிமையின்றி, உரிமையைப் பறிகொடுத்துவிட்டு, அப்பாவி மக்களை நோய்த் தொற்றுக்குள்ளாக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக திமுக கூட்டணி முழக்கம் எழுப்பி போராட்டம் நடத்தியது.
எவர் கருத்தையும் மதிக்காமல், தன் அளவிலும் நிர்வாகத் திறமை இல்லாமல் செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி அரசுக்குத் தக்க பாடம் புகட்டும் வகையில், டாஸ்மாக் கடைகளை ஊரடங்கு காலம் முடியும் வரை மூடவேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுநல வழக்கு ஒன்றின் மீதான விசாரணையில், மக்களின் உயிர் நலன் மீது அக்கறை கொண்டு, அரசின் மோசமான செயல்பாட்டிலிருந்து மக்களைக் காப்பாற்றும் வகையில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள இந்த உத்தரவை திமுக வரவேற்கிறது.
கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் மக்களின் நலன் காக்கும் வகையில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் முயற்சிகளை அதிமுக அரசு கைவிட்டு, மக்களின் உயிரைப் பணயம் வைக்காமல், ஊரடங்கினை நீர்த்துப் போகச் செய்யாமல், உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்று நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago