பொதுமுடக்கத்தால் தொழில் நிறுவனங்கள் மூடிக்கிடப்பதால் வருமானமிழந்து தவிக்கும் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் அவர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியில் இருந்து 75 சதவீதம் அல்லது மூன்று மாத அடிப்படை ஊதியம் இவற்றில் எது குறைவோ அதைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதனைத் திருப்பிச் செலுத்தத் தேவையில்லை என்றும் அரசு கூறியிருந்தது. இதற்காகப் பதிவு செய்த மூன்று நாட்களுக்குள் பணம் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இணையம் மூலம் விண்ணப்பிப்பதில் தொடர்ந்து குளறுபடிகள் நிலவுகின்றன. இபிஎஃப்ஓ இணையதளத்தில் தங்களது யுஏஎன் (UAN) எண்ணைப் பதிவு செய்து ரகசிய பாஸ்வேர்டைப் பதிவு செய்து க்ளைம் விரிவுக்குச் சென்று அவுட்பிரேக் ஆஃப் பேன்டமிக் (Outbreak of pandaemic) என்பதைத் தேர்வு செய்தால் ஓடிபி வரும். அதனைப் பதிவு செய்தால் விதிமுறைகளின்படி தாங்கள் கேட்ட தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்காக வங்கி பாஸ்புக் அல்லது காசோலையை ஸ்கேன் செய்து, பதிவேற்ற வேண்டும் என்றும் அறிவித்திருந்தார்கள்.
ஆனால், இதில் நிறைய குளறுபடிகள் இருக்கின்றன. மொத்த தொழிலாளர்களில் வெறுமனே 44 சதவீதம் பேர் மட்டுமே, வங்கி மற்றும் ஆதார் எண்களை தங்கள் பிஎஃப் கணக்குடன் இணைத்துள்ளனர். இதனால், மற்றவர்கள் இணையம் வாயிலாகப் பணம் பெற முடியாத சூழல் உள்ளது.
இந்தப் பிரச்சினைகள் காரணமாக, நேரடியாக பிஎஃப் அலுவலகத்தை அணுகி, பணத்தைப் பெறுவதற்காகத் தினமும் குறைந்து 100 பேராவது மதுரை பீபீகுளத்தில் உள்ள மண்டல தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனத்துக்குப் படையெடுக்கின்றனர். ஆனால், அந்த அலுவலகம் மூடியே கிடக்கிறது. இதுபற்றி மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த ஏ.சி.ராஜன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.
"எனது மனைவி பணிபுரிந்த தனியார் பள்ளியில் இருந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விலகி வந்துவிட்டார். சுமார் 7 ஆண்டுகள் பணிபுரிந்திருப்பதால், அவரது பிஎஃப் கணக்கை முடித்து, அதில் இருந்து பணப் பயன் பெறுவதற்காக கடந்த 29.04.20 வியாழன் அன்று அரசு அறிவித்தபடி EPFO இணையம் மூலம் விண்ணப்பித்தோம். தொடர்ந்து அதனுடன் பான் கார்டு நகல் மற்றும் படிவம் 15 ஜி (வரி விலக்கு பெறுவதற்கான படிவம்) ஆகியவற்றைப் பூர்த்தி செய்து பிஎஃப் அலுவலகத்தில் நேரில் செலுத்தச் சொன்னார்கள். அதன்படி நேரில் கொண்டு சென்ற போது அலுவலகம் பூட்டப்பட்டே இருந்தது. செக்யூரிட்டியிடம் கேட்டபோது, 'ஊரடங்கு முடிந்த பின்னர்தான் ஆட்கள் வேலைக்கு வருவார்கள்' என்றார்.
‘செய்திகளில் மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் 50 சதவீத ஊழியர்களுடன் வழக்கம்போல இயங்கும் என்று வருகிறதே' என்று கேட்டதற்கு 'எனக்கு அது பற்றியெல்லாம் தெரியாது' என்று கூறிவிட்டார். முதலில், 'மே 4-ம் தேதி வாருங்கள்' என்று சொன்னார். மே 4-ம் தேதி போய் கேட்டால், 'மே 18-ம் தேதி வாருங்கள்' என்று சொல்கிறார்கள்.
இதனிடையே நேற்று (7-ம்தேதி) எனது மனைவியின் அலைபேசிக்கு பிஎஃப் அலுவலகத்திலிருந்து வந்த குறுஞ்செய்தியில் தங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது என்றும் அதற்கான காரணம் என்னுமிடத்தில் பான் கார்டு நகல், படிவம் 15 ஜி பூர்த்தி செய்து இணைக்கப்படாததே என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்று மீண்டும் பிஎஃப் அலுவலகம் சென்ற போதும் அலுவலகம் பூட்டப்பட்டே இருந்தது. செக்யூரிட்டியிடம் எனது நிலையை விளக்கிச் சொன்னேன்.
'ஐயா ஆன்லைனில் விண்ணப்பிக்கச் சொன்னீர்கள். விண்ணப்பித்தால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று வந்துள்ளதே?' என்று கேட்டேன். 'எதுவாயினும் மே 18-ம் தேதிக்கு மேல் வாருங்கள்' என்று கூறிவிட்டார். என்னைப் போலவே தினமும் நூற்றுக்கணக்கானோர் பரிதவிக்கிறார்கள். ஊழியர்கள் தங்கள் பிஎஃப் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று சொன்னதும் மத்திய அரசுதான், மத்திய அரசு அலுவலகங்கள் 50 சதவீதப் பணியாளர்களுடன் செயல்படும் என்று அறிவித்ததும் மத்திய அரசுதான். ஆனால், இந்த இரண்டுமே நடைமுறைக்கு வரவில்லை. யாரிடம் முறையிடுவது என்றே தெரியவில்லை" என்றார் ராஜன்.
உங்கள் வருங்காலத்தை வசந்தமாக்க என்று சொல்லி தொழிலாளர்களிடம் வாங்கிய பணத்தை, அவர்கள் வாழ்வா, சாவா பிரச்சினையில் இருக்கும்போதுகூடத் தராமல் இழுத்தடித்தால் எப்படி? தொழிலாளர் நலனில் அரசின் அக்கறை இவ்வளவு தானா?
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago