டாஸ்மாக் கடைகள் திறப்பு: விபத்துகள், இருதரப்பு மோதல் அதிகரிப்பு; ஒரே நாளில் 150 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி

By அ.வேலுச்சாமி

ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் டாஸ்மாக் திறக்கப்பட்டதால் விபத்துகள், இருதரப்பு மோதல் அதிகரித்து ஒரே நாளில் 150 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி பொதுமக்கள் மற்றும் வாகனங்களின் நடமாட்டம் குறைந்திருந்ததாலும், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்ததாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி போன்ற குற்றச் செயல்கள் பெருமளவில் குறைந்தன. விபத்துகளும் குறைந்ததால் மருத்துவமனைகளில் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்திருந்தது.

இதற்கிடையே, ஊரடங்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் நேற்று (மே 8) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. முதல் நாளிலேயே, திருச்சி மாவட்டத்திலுள்ள 163 கடைகள் மூலம் ரூ.7.20 கோடிக்கு மது வகைகள் விற்பனை செய்யப்பட்டன. அதேபோல மது அருந்தியவர்களால் ஏற்படக்கூடிய சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள், விபத்துகளின் எண்ணிக்கையும் அதிக அளவில் காணப்பட்டது.

ஜீயபுரம் அருகேயுள்ள பேரூரில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் மோதிக் கொண்டதில் ரஞ்சித்குமார் (20) என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கோட்டை பெரியகடை வீதியில், மது அருந்திவிட்டு மயங்கிக் கிடந்த உணவகத் தொழிலாளி சரவணன் (45) என்பவர் உயிரிழந்தார்.

இதேபோல ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம், கே.கே.நகர், துறையூர், உப்பிலியபுரம், லால்குடி, ஜீயபுரம், துவாக்குடி உள்ளிட்ட இடங்களில் நேற்று நடைபெற்ற இருதரப்பு மோதலில் பலர் காயமடைந்தனர். மேலும், திருச்சி மாநகரம், துறையூர், வளநாடு உள்ளிட்ட பகுதிகளில் சிலர் விபத்தில் சிக்கிக் காயமடைந்தனர். இவற்றின் காரணமாக விபத்து, இரு தரப்பு மோதலால் காயமடைந்த 150 பேர் நேற்று ஒரே நாளில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, "அரசு மருத்துவமனையில் தற்போது கரோனா சிகிச்சைக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் ஊரடங்கு அமலில் இருந்து, மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்த நாட்களில் நாள்தோறும் 10 முதல் 15 பேர் வரை விபத்து, அடிதடி போன்றவற்றால் காயமடைந்து இங்கு சிகிச்சைக்கு வந்து கொண்டிருந்தனர்.

ஆனால், டாஸ்மாக் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே இந்த எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துவிட்டது. கரோனா சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் இது கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது" என்றனர்.

இதுகுறித்து காவல் அதிகாரிகள் கூறும்போது, "மீண்டும் வழக்கம்போல ஆகிவிட்டது. மதுவின் காரணமாக ஆங்காங்கே அடிதடி, குடும்பப் பிரச்சினைகள் நடைபெறுவதால் அங்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவும், அதுதொடர்பாக விசாரிப்பதற்குமே நேரம் சரியாக உள்ளது.

ஏற்கெனவே கரோனா பரவல் தடுப்புப் பணிகளிலும், ஊரடங்கை கண்காணிப்பதற்கும், டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்குமே போதிய காவலர்கள் இல்லாமல் அவதிப்படும் நிலையில், இது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்