மாநிலங்களை ஓரங்கட்டி, அதிகாரங்களை மையப்படுத்திக் கொள்ளும் பாஜக அரசின், புதிய மின்சாரத் திட்டத்தால் விவசாயிகளின் இலவச மின்சாரத் திட்டம், ஏழை - நடுத்தர மக்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு ஆபத்து வரும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:
கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைத்திடும் மற்றொரு முயற்சியாக, மாநில உரிமைகளை முழுமையாகப் பறிக்கும் விதத்திலும் பொதுப்பட்டியலில் உள்ள மின்சாரம் தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசே அபகரித்துக் கொள்ளும் உள்நோக்கத்துடனும் - 2020-ம் ஆண்டு புதிய மின்சார திருத்தச் சட்டத்தைக் கொண்டு வரும் மத்திய பாஜக அரசுக்கு, திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
2014, 2018 ஆகிய ஆண்டுகளில் முயற்சி செய்து தோற்றுப் போன இந்தத் திருத்தச் சட்டத்தை, மாநிலங்கள் எல்லாம் கரோனா நோய்த் தொற்று பேரிடரைச் சமாளிக்கும் உயிர்காக்கும் முயற்சியில் தீவிரமாகப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், கொண்டு வந்து - கருத்துக் கேட்பது மிகுந்த கவலையளிக்கிறது.
கரோனாவிலிருந்து மனித உயிர்களைக் காக்கும் முயற்சிகள் குறித்தோ, ஸ்தம்பித்து - மூச்சுத் திணறி - ஊசலாடிக் கொண்டிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றியோ, கிஞ்சித்தும் கவலைப்படாமல் - அதிகாரப் பசியில் இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றிட மத்திய பாஜக அரசு முனைவது வேதனையளிக்கிறது.
சுமுகமான மத்திய - மாநில உறவுகளை அடியோடு வெறுக்கும் ஒரு பிரதமராக - அடுத்தடுத்த அதிகாரப் பறிப்புகள் மூலம் நரேந்திர மோடி தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வது – நாம் அனைவரும் இந்திய மக்கள் (We the people of India) என்று அரசியல் சட்டம் வகுத்துள்ள கோட்பாட்டிற்கு முற்றிலும் எதிரானது.
புதிய மின் திருத்தச் சட்டத்தில் - புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தேசியக் கொள்கையை மத்திய அரசே வகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களெல்லாம் இனி மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்குத் தலைவர், உறுப்பினர்களைக் கூட இனிமேல் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தேர்வுக் குழுவே தேர்வு செய்யும்.
இந்த ஐந்து பேர் கொண்டு தேர்வுக் குழுவில் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களில் இருவர் மட்டுமே உறுப்பினர்களாக இருப்பார்கள். அவர்களுக்கும் கூட ஒரு வருடப் பதவிக்காலம் கொடுக்கப்பட்டு - மாநிலங்களின் பெயர் அகரவரிசைப்படி (Alphabetical) உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர்.
உதாரணத்திற்கு, முதல் தேர்வுக்குழுவில் ஆந்திரா மற்றும் அருணாசலப் பிரதேச மாநிலத் தலைமைச் செயலாளர்கள் இடம்பெறுவார்கள் என்றால் - அடுத்ததாக “T” பெயர் வரிசையில் வரும் தமிழ்நாடு இன்னும் ஒரு பத்தாண்டுகளுக்கு இந்த தேர்வுக்குழுவில் இடம்பெறவே முடியாது.
ஒருவேளை தமிழ்நாட்டில் உள்ள மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் உறுப்பினரோ, தலைவரோ இல்லாமல் இருந்தால் - தமிழ்நாடு ஆணையத்தின் பணியை வேறொரு மாநிலத்தின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கவனிக்க மத்திய அரசு உத்தரவிடலாம் என்று இன்னொரு பிரிவு கூறுகிறது. இது என்ன கூத்து? ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தை இன்னொரு மாநிலம் எப்படிக் கவனிக்க முடியும்?
ஏற்கெனவே மின்வாரியத்தைப் பிரித்து மின்கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரத்தை மாநில அரசிடமிருந்து – மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் பறித்துக் கொடுத்த மத்திய அரசு, தற்போது இந்த ஆணையத்தைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டிலேயே எடுத்துக் கொள்வது, ஆபத்தான அதிகார விளையாட்டு.
இனிமேல் மின்சார மானியங்களைப் படிப்படியாகக் குறைத்து அதற்கான பணத்தை நேரடியாக சம்பந்தப்பட்ட நுகர்வோருக்கு வழங்கிட வேண்டும் என்று கொண்டு வரப்படும் சட்டத் திருத்தம் - திமுக ஆட்சியில் தலைவர் கலைஞர் கொண்டுவந்த விவசாயிகளின் இலவச மின்சாரத் திட்டத்திற்கும், ஏழை - நடுத்தர மக்களுக்கு நூறு யூனிட் வரை வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.
அதுமட்டுமின்றி மின் கொள்முதல், மின் விற்பனை, மின்சாரத்தை அனுப்புதல் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்கள் தொடர்பான தாவாக்களை, இனிமேல் மத்திய அரசின்கீழ் அமைக்கப்படும் மின் ஒப்பந்த அமலாக்க ஆணையம் (Electricity Contract Enforcement Authority) ஒன்றே தீர்வு காணும் என்பதும் - மாநிலங்களுக்கு எந்தவொரு பிரதிநிதித்துவமும் இல்லாமல் இப்படியொரு ஆணையத்தை உருவாக்குவதும், மாநிலங்களிடம் இருக்கின்ற அதிகாரத்தையும் எள்ளி நகையாடும் போக்காகும்.
நமது அரசியல் சட்டப்படி மின்சாரம் பொதுப்பட்டியலில் (Entry 38) இருக்கிறது. மின் நுகர்வு மீதான வரி, மின் விற்பனை மீதான வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கான அதிகாரப் பட்டியலில் (Entry 54) உள்ளது. இப்போது கொண்டு வரும் புதிய மின்சாரச் சட்டத் திருத்தம் 2020-ன் மூலம், மாநிலத்திற்கு என்றே வழங்கப்பட்டுள்ள தனி அதிகாரத்தையும் - பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரத்தையும் மத்திய அரசே எடுத்துக் கொள்ளும் ஆணவப் போக்காகும்.
மறுபடியும் ஐந்தாண்டுகள் ஆட்சி செய்யவே பாஜகவிற்கு மக்கள் வாக்களித்தார்களே தவிர - இப்படியொரு அதிகார வேட்டையாடி, மாநில உரிமைகளையும் மாநிலங்களையும் கபளீகரம் செய்வதற்கல்ல!
நமது நாட்டில் மாநிலங்கள் தேவையில்லை. கூட்டாட்சித் தத்துவத்தை வழங்கியுள்ள அரசியல் சட்டம் தேவையில்லை என்ற முடிவிற்கு, பெரும்பான்மை இருக்கிறது என்ற ஒரே அகங்காரத்தில் மத்திய பாஜக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவது கண்டனத்திற்குரியது.
கடந்த ஏப்ரல் 17-ம் தேதியே கருத்துக் கேட்கப்பட்டு - கரோனோ பேரிடரின் காரணமாக தற்போது 05.06.2020 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதலில் மறுத்து விட்டு - பிறகு உதய் திட்டத்தில் அதிமுக அரசு கையெழுத்திட்டதால் மின்கட்டண உயர்வு மின் வாரியத்திற்கு மீண்டும் இழப்பு. விவசாயிகளின் இலவச மின்சாரத்திற்கு ஆபத்து என்று பல்வேறு நெருக்கடிகளைத் தமிழகம் அனுபவித்து வருகிறது. அந்தக் கையெழுத்து குறித்து அப்போதே சட்டப்பேரவையில் எடுத்துரைத்து இந்த ஆபத்துகளை எல்லாம் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.
உதய் திட்டத்திற்கு அன்று அதிமுக போட்ட கையெழுத்து, இன்றைக்கு புதிய மின்சாரத் திருத்தச் சட்டம் என்ற அடுத்தகட்ட ஆபத்தாக வந்திருக்கிறது.
ஆகவே, மின்சாரத்தை மத்திய அரசு மயமாக்கும் இந்த கருப்புச் சட்டமான புதிய மின்சார திருத்தச் சட்டம் 2020-ஐ அதிமுக அரசு கடுமையாக எதிர்த்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதிமுக அரசு, காயம் ஏற்படாமல் தன்னைக் காத்துக்கொள்வதற்காக எப்போதும் செய்வதைப்போல் இப்போதும், ஆமாம் சாமி போட்டு நழுவிவிடக் கூடாது என்று நடுநிலையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மாநில உரிமைகளைக் காப்பாற்றி, கூட்டாட்சித் தத்துவத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதில் ஆர்வமும் நம்பிக்கையும் உள்ள பாஜக அல்லாத மாநில அரசுகள் அனைத்தும் இந்த சட்டத் திருத்தத்தைக் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மாநிலங்களை ஓரங்கட்டி, அதிகாரங்களை மையப்படுத்திக் கொள்ளும் அடுத்தகட்டமான இந்தச் சட்டத் திருத்தத்தை, மத்திய பாஜக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago