ஏழைகளின் வயிற்றில் அடிக்காதீர்கள்: ரேஷன் கடைக்காரர்களுக்கு சு.வெங்கடேசன் எம்பி எச்சரிக்கை

வேலையிழந்த மக்கள் பட்டினியால் வாடக்கூடாது என்பதற்காக நியாய விலைக்கடையில் வழக்கமாக வழங்கப்படும் பொருட்கள் அனைத்தையும் விலையில்லாமல் வழங்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டுவருகின்றன. மதுரை மாவட்டத்தில் உள்ள சில கடைகளில் எடை குறைவு, பதுக்கல், கடத்தல் போன்ற செயல்கள் நடப்பதாகவும், நல்ல அரிசியை ஆளுங்கட்சியினர் எடுத்துக்கொண்டு தரம் குறைந்த அரிசியையே மக்களுக்கு விநியோகிப்பதாகவும் புகார்கள் வந்தன.

மதுரையில் தனது முயற்சியால் ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் 'அன்னவாசல்' திட்டத்தின் கீழ் நடைபெறும் சமையல் பணிகளை பார்வையிடுவதற்காக மதுரை பைக்காரா பகுதிக்கு வந்திருந்த தொகுதி எம்பி-யான சு.வெங்கடேசனிடம் அப்பகுதி மக்களும் இதுபோன்ற புகாரைச் சொன்னார்கள். உடனே, அங்குள்ள கூட்டுறவு ரேஷன் கடையில் திடீர் ஆய்வு நடத்தினார் வெங்கடேசன். மக்களுக்கு வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருட்களின் தரத்தைப் பரிசோதித்த அவர், கடையின் இருப்பு விவரம் குறித்தும் விசாரித்தார்.

"இந்த நேரத்தில் ஏழை மக்களின் வயிற்றில் அடிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. ரேஷன் கடைகளைத் தொடர்ந்து கண்காணிப்பேன். ஏதாவது தவறு நடந்தால் நடப்பதே வேறு" என்று எச்சரித்தார் எம்பி. "ஏதாவது தெரியாமல் தவறு நடந்திருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். இனிமேல் எல்லா பொருட்களையும் சரியாக வழங்குவோம்" என்று கடைக்காரர்கள் உறுதி கூறியதைத் தொடர்ந்து எம்பி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE