கரோனா பொது முடக்கத்தின் காரணமாகப் பல்வேறு வகைகளில் அவதிப்படும் மக்களுக்குத் தமிழக அரசு சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன.
பொள்ளாச்சி தொகுதி எம்எல்ஏ-வும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், தனது தொகுதியில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் விஷயத்தில் இரண்டாம் சுற்றுக்கு வந்துவிட்டார். அதுவும், அவரே சமைத்து பொது மக்களுக்கு உணவு விநியோகிப்பது தான் கவனிக்கத்தக்க விஷயம்.
பொள்ளாச்சி பகுதியில் பொதுமுடக்கத்தால் ஏழை எளிய மக்கள் உணவின்றி பாதிக்கக் கூடாது என்று தன் ஏற்பாட்டில் இங்குள்ள ஐயப்பன் கோவில் மண்டத்தில் பெரிய சமையல் கூடத்தை உருவாக்கியிருக்கிறார் பொள்ளாச்சி ஜெயராமன். இங்கு தயாராகும் உணவு வகைகள் வாகனங்கள் மூலமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் குடியிருப்புகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டு வாசலிலேயே இறக்கப்படுகின்றன.
இப்படி கடந்த 40 நாட்களாக காலை 3 மணி தொடங்கி ஐயப்பன் கோவில் சமையல் கூடத்தில் அடுப்பு எரிந்துகொண்டே இருக்கிறது. நேற்று அப்படி தயாராக வைக்கப் பட்டிருந்த உணவைக் கரண்டியில் எடுத்து சுவைத்துப் பார்த்துக்கொண்டிருந்த பொள்ளாச்சி ஜெயராமனிடம் பேசினோம்.
“தினசரி 30 ஆயிரம் பேருக்குக் குறைவில்லாமல் இங்கே உணவு தயாரிக்கிறோம். இதை நான் சுவைத்துப் பார்க்காமல் அனுப்புவதில்லை. அது மட்டுமல்ல, வெவ்வேறு வேன்களில் ஏற்றப்படும் உணவு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று சேரும்போது ஏதாவது ஒரு இடத்தில் நானிருப்பேன். அங்கும் எப்படி சப்ளை ஆகிறது. சாப்பாடு சமைத்த சுவையுடன் அப்படியே வருகிறதா என்பதையும் சோதித்து விடுவேன்.
சாப்பாடு இல்லீங்களா... யாரும் பசியோட இருக்கக்கூடாது பாருங்க” என்றார் பொள்ளாச்சி ஜெயராமன்.