கரோனா பேரிடர்; திசை திருப்பும் செயல்களுக்கு ஆட்படாதீர்கள்: திமுகவினருக்கு ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய பேரிடரில், கவனத்தை திசை திருப்பும் செயல்களுக்கு திமுகவினர் ஆட்பட வேண்டாம் என, அக்கட்சியின் அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஆர்.எஸ்.பாரதி இன்று (மே 5) வெளியிட்ட அறிக்கையில், "உலகப் பேரிடரான கரோனா நோய்த் தொற்றிலிருந்து மனிதகுலத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் பட்டினிச் சாவு ஏற்படாமல் இருக்க, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவாக்கிய 'ஒருங்கிணைவோம் வா' செயல்திட்டத்தின் அடிப்படையில் பசிப்பிணி நீக்கும் வகையில் மாநிலத்தின் பல இடங்களிலும் சமையற்கூடங்கள் அமைத்து உணவு வழங்கி வருகிறது திமுக.

திமுக தலைவர் அறிவித்துள்ள ஹெல்ப்லைனுக்கு வரும் அழைப்புகளின் அடிப்படையில் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றி வருகிறோம். சமூக ஒழுங்கைக் கடைப்பிடித்து இந்தப் பணிகளை கவனமுடன் நாம் மேற்கொண்டு வருவதை அனைத்துத் தரப்பு மக்களும் வரவேற்று வருகிறார்கள்.

இந்த மகத்தான பணியில் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டியதே நமது ஒரே இலக்கு!

திமுக தலைவர் கட்சி எல்லைகளைக் கடந்து, உலகெங்கும் வாழும் தமிழர்களுடன் காணொலி வழியாக ஆலோசித்து, அவரவர் தேவைகளை அறிந்து அதற்கேற்ப உதவிகளை மேற்கொண்டு வருகிறார். அவருடன் கை கோத்து, உலகத் தமிழர்களை மனிதகுலத்தை ஒருங்கிணைக்க வேண்டிய சூழலில், சமூக வலைதளங்களில் திமுகவினரைத் திசை திருப்புவதற்காக சிலர் திட்டமிட்டு செய்யும் சதிகளுக்கு, திமுகவினர் ஆட்பட வேண்டாம் என திமுகவின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பாக, நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காகவும் நலன்களுக்காகவும் 1956-ம் ஆண்டு முதல் குரல் கொடுத்தவர் கருணாநிதி. தமிழீழ உரிமையை வலியுறுத்தி 'டெசோ' என்ற அமைப்பைத் தொடங்கி, அகில இந்திய தலைவர்களை அழைத்து மாநாடு நடத்தியவர் தலைவர் கருணாநிதி.

வெளிக்கடை சிறையில் நடந்த வன்முறையில் தமிழினப் போராளிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டதைக் கண்டித்து மாபெரும் பேரணியை சென்னையில் நடத்திக் காட்டியவர் அவர். தமிழகத்திலிருந்த ஈழப் போராளிகளை நாடு கடத்த முயன்றபோது அதற்கு எதிராக, ஒருசில மணிநேரத்தில் லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி கண்டனப் பேரணி நடத்தியவரும் கருணாநிதிதான்.

தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை மறைந்த திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனுடன் இணைந்து ராஜினாமா செய்தவர். இலங்கையிலிருந்து திரும்பிய இந்திய அமைதிக்காப்புப் படையை, 'என் தமிழ்ச் சாதியைக் கொன்று திரும்பும் படையை வரவேற்க மாட்டேன்' என முதல்வராக இருந்தபோதே அறிவித்தவர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருந்த காரணத்திற்காகவே திமுகவின் ஆட்சி கலைக்கப்பட்டது என்பது வரலாறு.

ஈழத்தில் உள்ள அனைத்துப் போராளிக் குழுக்களும் சகோதர யுத்தத்தைக் கைவிட்டு, ஒன்றிணைந்து போராடி உரிமையை மீட்க வேண்டும் என்பதை தலைவர் கருணாநிதி தொடர்ந்து வலியுறுத்தினார். எல்லா அமைப்புகளையும் தன் உடன்பிறப்புகளாகவே கருதினார்.

விடுதலைப்புலி தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்டபோது, முதல்வர் பொறுப்பில் இருந்த கருணாநிதி எழுதிய இரங்கல் கவிதையும் அதற்காக அவரது ஆட்சியை கலைக்கச் சொல்லி கூப்பாடு போடப்பட்டதும் நாடறியும்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, 'போராளிகளுக்கு மரணமில்லை' என்று சொன்னவர் தலைவர் கருணாநிதி. அவருக்கு எல்லாருமே உடன்பிறப்புகள்தான். பாரபட்சமோ பாகுபாடோ கிடையாது.

ஒரு மூத்த சகோதரராகவே அவருடைய கருத்துகளும் ஆதரவும் ஆலோசனைகளும் இருந்துள்ளன.

தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்திற்கும் தலைவர் கருணாநிதியே பதிலளித்திருக்கிறார். ஒரு மாநிலத்தின் முதல்வராக தனது அதிகார எல்லைக்குள்ளும், அதனைக் கடந்தும் மத்திய அரசிடம் ஈழத் தமிழர் நலனுக்காகப் பாடுபட்டிருக்கிறார்.

இலங்கை மலையகத் தமிழர்கள் இந்தியா அனுப்பப்பட்டபோது தமிழகத்தில் அவர்களுக்கான வாழ்வுரிமை தொடங்கி, ஈழ அகதிகள் முகாமில் உள்ள தொப்புள் கொடி சொந்தங்களுக்கு வாழ்வாதாராம், கல்வி, வேலை என அனத்தும் கிடைப்பதற்கான திட்டங்கள் வரை பலவற்றையும் நிறைவேற்றியுள்ளார்.

இனம், மதம், சாதி என எந்த வகையில் மனிதர்கள் ஒடுக்கப்பட்டாலும் அவர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதுதான் திமுகவின் கொள்கை. ஈழத் தமிழர்களை இனரீதியாக ஒடுக்குவதை எதிர்த்து ஐநா சபை வரை சென்று மனு அளித்தவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

வரலாற்றில் தொடரும் இந்த நெடிய போராட்டத்தில் தனிமனிதத் தாக்குதல்கள், போராட்டங்கள் குறித்த கொச்சையான விமர்சனங்கள் ஆகியவற்றை சமூக வலைதங்களில் உள்ள திமுகவினரும் ஆதரவாளர்களும் தவிர்த்திடுவது கட்டாயமாகும்.

ஈழத் தமிழர்களின் பெயரால் அரசியல் செய்ய விரும்புவோருக்கு, ஈழத் தமிழர் மீது எப்போதும் அக்கறை கொண்ட நாம் இடம் கொடுப்பது தேவையற்றது. பேரிடரை எதிர்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் வேறு இடர்கள் அனைத்தையும் புறக்கணியுங்கள். திசை திருப்ப நினைப்போர் வெட்டுகின்ற சமூக வலைதளப் பள்ளங்களில் இடறி விழாதீர்கள்.

நம்முடைய இலக்கும் பயணமும் ஈழம் உள்ளிட்ட உலகெங்கும் வாழும் மக்களின் ஆதரவுடன் அவர்களுக்காகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கவனம் சிதையாமல் அதில் ஒருங்கிணைந்து பயணிப்போம்" என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்