ஒவ்வொரு மாவட்டமும் மிகப்பெரிய நோய்த்தொற்று மையங்களாக உருவெடுக்கும் ஆபத்து; ராமதாஸ் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

கடுமையான ஊரடங்கை நடைமுறைப்படுத்தி சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கரோனா பரவலை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் இன்று (மே 5) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு தீவிரமடைந்திருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 266 பேர் உட்பட தமிழ்நாடு முழுவதும் 527 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கும் அளவாகும்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சென்னையில் மட்டும்தான் கரோனா வைரஸ் நோய்ப் பரவல் அச்சமளிக்கும் வகையில் இருந்து வந்தது. ஆனால், கடந்த இரு நாட்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவத் தொடங்கியிருக்கிறது.

சென்னையில் நோய்ப்பரவல் புதிய உச்சங்களைத் தொட்டிருக்கிறது. சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,154 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் ஏப்ரல் 29-ம் தேதி மட்டும் தான் சென்னையில் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவாக 94 ஆக பதிவாகி உள்ளது. நான்கு நாட்களில் குறைந்தபட்சம் 103 முதல் அதிகபட்சம் 176 வரை தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. நேற்றும், அதற்கு முன்நாளும் 200க்கும் கூடுதலானோருக்கு கரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

சென்னையில் முந்தைய 5 வாரங்களில் ஒட்டுமொத்தமாக 570 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அதை விட இரு மடங்கு அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் சோதனை அதிகரிக்கப்பட்டிருப்பதால் தான் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அரசு சார்பில் கூறப்படுவது ஓரளவு ஏற்றுக் கொள்ளத்தக்கதுதான்.

அதே நேரத்தில், புதிய தொற்றுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது என்பதும், கரோனா தொற்றுகளின் மிகப்பெரிய ஆதாரமாக கோயம்பேடு சந்தை உருவெடுத்துள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கோயம்பேடு சந்தைக்குச் சென்று வந்தவர்களாலும், சந்தையில் பணியாற்றி கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்களாலும் ஏற்படும் புதிய தொற்றுகள், தமிழகத்தில் நோய் பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களின் வரைபடத்தையே தலைகீழாக மாற்றியுள்ளன.

கடலூர் மாவட்டத்தில் தொடக்கம் முதல் பாதிக்கப்பட்ட 26 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்படவிருந்த நிலையில், கடந்த 3 நாட்களில் மட்டும் 135 புதிய தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. நேற்று ஒரு நாளில் மட்டும் 122 தொற்றுகள் ஏற்பட்டுள்ளன.

அதேபோல், விழுப்புரத்தில் 85 தொற்றுகள், அரியலூரில் 28, பெரம்பலூரில் 27 என பாதிப்புகள் நீண்டு கொண்டே செல்கின்றன. சில மாவட்டங்களில் உள்ளூரிலும், சென்னையிலும் தெரிவிக்கப்படும் எண்ணிக்கைகள் பெருமளவில் மாறுபடுகின்றன.

கோயம்பேடு சந்தையில் ஏற்பட்ட தொற்றுகள் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படாததால், அடுத்த சில நாட்களில் இந்த எண்ணிக்கை கணிசமாக உயரும் என்பது இயல்பானது தான். ஆனால், அவர்கள் அனைவரும் முழுமையாக கண்டுபிடிக்கப்பட்டு, சோதனைக்கும், சிகிச்சைக்கும் உள்ளாக்கப்படும் வரை அவர்களாலும், அவர்களிடமிருந்து நோயைப் பெறுபவர்களாலும் நோய் பரவுவதை அரசு எவ்வாறு கண்டுபிடிக்கப் போகிறது? என்பதுதான் உடனடியாக விடை காணப்பட வேண்டிய வினா ஆகும். அதற்கான விடையில்தான் தமிழகம் கரோனாவிடமிருந்து எப்போது விடுபடும் என்பது தெளிவாகும்.

தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஓரளவு நன்றாக செயல்படுத்தப்பட்டது. அதனால்தான் மாவட்டங்களில் கரோனா வைரஸ் நோய் குறிப்பிடத்தக்க அளவில் கட்டுப்படுத்தப்பட்டது.

ஆனால், இப்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் நடமாடத் தொடங்கி விட்டனர். இதேசூழல் நீடித்தால், கட்டுப்பாடில்லாமல் கோயம்பேடு சந்தையில் பொதுமக்களும், வணிகர்களும் குவிந்ததால் அந்தப் பகுதி எப்படி நோய்த்தொற்று மையமாக மாறியதோ, அதேபோல், ஒவ்வொரு மாவட்டமும் மிகப்பெரிய நோய்த்தொற்று மையங்களாக உருவெடுக்கும் ஆபத்து உள்ளது.

சென்னையில் இப்போது அதிகரித்துள்ள நோய்த்தொற்றுகள் அனைத்துமே ஊரடங்கு காலத்தில் நிகழ்ந்தவைதான். அப்போதே சென்னை போன்ற நகரங்களில் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், இப்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், நோய்ப்பரவலை தடுப்பது என்பது யாராலும் சாத்தியமற்ற ஒன்றாகும்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் கடந்த 40 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் கிடைத்த பயன்களில் பெரும்பகுதி கடந்த சில நாட்களாக நிகழ்ந்த குழப்பங்களில் வீணாகிவிட்டன. இதேநிலை மேலும் நீடித்தால், மீதமுள்ள பயன்களும் வீணாகி விடும். தொடக்கம் முதல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்திருந்தால், எவ்வளவு மோசமான விளைவுகள் ஏற்பட்டிருந்திருக்குமோ, அதேபோன்ற நிலைமை தமிழகத்தில் ஏற்படக்கூடும்.

எனவே, சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களிலும், கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் மாவட்டங்களிலும் நிலைமை கட்டுக்குள் வரும் வரை முழு ஊரடங்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அந்தக் காலத்தில் மருந்துக் கடைகள், மளிகை மற்றும் காய்கறிக் கடைகள் தவிர வேறு எந்தக் கடைகளையும் திறக்க அரசு அனுமதிக்கக் கூடாது.

தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனங்களில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் முகக்கவசம் அணியாமல் வலம் வருவதைப் பார்க்க முடிகிறது. இது தடுக்கப்பட வேண்டும். சுருக்கமாகக் கூற வேண்டுமானால், ராணுவ ஊரடங்கு எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுமோ, அதே போன்ற கடுமையான ஊரடங்கை நடைமுறைப்படுத்தி சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கரோனா பரவலை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்