வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கான அரசின் நிவாரண உதவிகள் சேர்ந்ததா?- அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு  

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பசியால் வாடும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிப்காட்டில் டிவிஎஸ், யமஹா போன்ற தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில் பிஹார், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 1600 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதேபோல் தொழிற்சாலைகள் அதிகமுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு மாதமாகத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் சேலையனூர், ஆரனேரி, மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அரசின் நிவாரணம் இதுவரை சென்றடையவில்லை எனக் கூறப்படுகிறது.

கடந்த ஒரு மாதமாக ஒரு வேலையில்லாமலும் உணவில்லாமலும் பாதிக்கப்பட்டுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உணவு உள்ளிட்ட அரசின் நிவாரணம் வழங்க உத்தரவிடக் கோரி செங்கல்பட்டைச் சேர்ந்த ஆசிர்வாதம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு, காணொலிக் காட்சி மூலம் விசாரித்தது.

அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஊரடங்கால் தமிழகத்தில் சிக்கியுள்ள 4 லட்சத்து 30 ஆயிரம் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தங்கியுள்ள 86 ஆயிரத்து 844 வெளிமாநிலத் தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்ரீபெரும்புதூர், வல்லம், இருங்காட்டுக்கோட்டை, பள்ளிப்பாக்கம், ஒரகடம் மற்றும் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டைகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன. உணவுப் பொருட்கள் வழங்கப்படவில்லை என மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கியது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை மே 26-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்