ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் சொமேட்டோ, டன்சோ, ஸ்விக்கி நிறுவனங்கள் மூலம் நேரடியாக விற்பனை: ஆவின் நிறுவனம்

By செய்திப்பிரிவு

ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் நுகர்வோர் இல்லங்களுக்கு சொமேட்டோ, டன்சோ, ஸ்விக்கி நிறுவனங்கள் மூலமாக நேரடியாக விநியோகம் செய்யப்படுகின்றன என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, ஆவின் இயக்குநர் வள்ளலார் இன்று (ஏப்.30) வெளியிட்ட அறிக்கையில், "கடந்த நாற்பது ஆண்டுகளாக ஆவின் எனும் வணிகப் பெயர் தமிழகத்தின் அனைத்துக் குடும்பங்களிலும் பிரபலமாக உச்சரிக்கப்படும் பெயராக உள்ளது. ஆவின் நிறுவனம் கிராம அளவில் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், மாவட்ட அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் மற்றும் மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்குக் கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது.

ஆவின் நிறுவனம் 4.60 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு 31.50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, 24.50 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது.

ஆவின் நிறுவனம் வெண்ணெய், நெய், பால்கோவா, நறுமணப் பால், ஐஸ்கிரீம் போன்ற பால் உபபொருட்களை சென்னை மாநகரில் அமைந்துள்ள 50க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது. இதில் 21 பாலகங்கள் குளிர்சாதன வசதி, சிறுவர் விளையாட்டுப் பூங்கா, வைஃபை வசதி போன்ற வசதிகளுடன் அதிநவீனப் பாலகங்களாக இயங்கி வருகின்றன.

தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில் அதிநவீனப் பாலகங்களின் மூலம் நுகர்வோர் இல்லங்களுக்கு பால் மற்றும் பால் உபபொருட்கள் விநியோகம் செய்வதற்காக சொமேட்டோ மற்றும் டன்சோ (DUNZO) நிறுவனங்களுடன் ஆவின் நிறுவனமும் இணைந்து சேவை செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டு அதை சென்னையில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளது. இதர மாவட்ட ஒன்றியங்களிலும் மேற்கண்ட சேவையினை விரைவில் அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தச் சேவை பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. மேலும், இந்தச் சேவையின் மூலமாக ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் சிரமமின்றிக் கிடைப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சேவையின் மூலமாக தினமும் 7 முதல் 8 லட்சம் வரை விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும், இதனைத் தொடர்ந்து தற்போது ஸ்விக்கி உடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் நுகர்வோர் இல்லங்களுக்கு சொமேட்டோ, டன்சோ, ஸ்விக்கி நிறுவனங்கள் மூலமாக நேரடியாக விநியோகம் செய்யப்படுகின்றன.

அசாதாரண சூழ்நிலையில் ஆவினின் சேவைகள்

தற்போதுள்ள ஊரடங்கிலும் ஆவின் மூலமாக புதியதாக 101 புதிய சங்கங்கள் நிறுவியுள்ளோம். 76 செயலிழந்த சங்கங்களைப் புதுப்பித்துள்ளோம்.

378 தற்காலிகப் பால் கொள்முதல் நிலையங்கள் நிறுவியுள்ளோம்.

விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, சில தனியார் பால் கொள்முதல் நிறுத்தப்பட்ட நிலையில் 12 ஆயிரத்து 767 விவசாயிகளின் பாலினை ஆவின் மூலமாக கொள்முதல் செய்ய அவர்களை ஆவினுடன் இணைத்துள்ளோம்.

சுமார் 9943 எம்.டி. கால்நடைத் தீவனத்தை பால் உற்பத்தியாளர்களுக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் வழங்கியுள்ளோம்.

சுமார் 206 ஆவின் சார்ந்த கால்நடை மருத்துவர்கள் விவசாயிகளின் இல்லத்திற்கே சென்று நேரடியாக கால்நடைகளுக்கு மிகச் சிறப்பான முறையில் மருத்துவ சிகிச்சை வழங்கி வருகின்றனர். ஆவின் மூலம் கால்நடைகளுக்கு 1 லட்சத்து 10 ஆயிரத்து 599 செயற்கை முறை கருவூட்டல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது மற்றும் 34 ஆயிரத்து 621 கன்றுகள் பிறந்துள்ளன.

எனவே, தற்போது நாளொன்றுக்கு சுமார் 4 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் அதிகரித்துள்ளது.

விற்பனைப் பிரிவு மூலமாக முகவர்கள் நியமனத்தொகை ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.1,000 ஆக குறைத்ததன் அடிப்படையில் தற்போது 326 சில்லறை விற்பனையாளர்களை ஆவின் முகவர்களாக தமிழகம் முழுவதும் நியமனம் செய்து அவர்கள் மூலமாக ஆவின் சார்ந்த பால் மற்றும் பால் உபபொருட்கள் தங்கு தடையின்றி விற்பனை செய்து வருகிறோம். மேலும், அனைத்து சிறு வியாபாரிகளை அணுகி ஆவின் முகவர்களாக நியமிக்க முழு முயற்சி செய்து வருகிறோம்.

நுகர்வோர் குறைகளை உடனுக்குடன் சரி செய்து வருவதால் நுகர்வோருடைய நன்மதிப்பை பெற்றுள்ளோம்.

மேலும், தற்பொழுது ஊரடங்கு நிலவி வரும் நிலையில் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு எவ்வித சிரமுமின்றி பால் மற்றும் பால் உபபொருட்கள் கிடைக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றும் பொதுமக்கள் ஸ்விக்கி மூலமாகவும் நேரடியாக பால் மற்றும் பால் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்