வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழர்களை அழைத்துவரும் பணிகளை தமிழக அரசு தொடங்க வேண்டும்; ராமதாஸ்

By செய்திப்பிரிவு

வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வரும் பணிகளை தமிழக அரசு தொடங்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஏப்.30) வெளியிட்ட அறிக்கையில், "நாடு தழுவிய ஊரடங்கு ஆணை காரணமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தவித்து வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அழைத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் பல்வேறு வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பான முறையில் சொந்த ஊர் திரும்புவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கத்துடன் கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி நள்ளிரவு முதல் நாடு தழுவிய ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. சொந்த மாநிலங்களில் வேலை இல்லாத நிலையில், வெளி மாநிலங்களுக்குச் சென்று பணியாற்றி வந்த கோடிக்கணக்கான தொழிலாளர்கள், ஊரடங்கு காரணமாக வேலைகளை இழந்தனர்.

அதேநேரத்தில், பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்துகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில், பிழைக்கப் போன இடத்தில் வேலையும் இல்லாமல், சொந்த ஊருக்கும் திரும்ப முடியாமல் அவர்கள் தவித்து வந்தனர். கையில் பணமின்றி, உணவின்றி, உள்ளூர் மக்களின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி பல்லாயிரக்கணக்கான தமிழக மக்கள், பல மாநிலங்களில் தவித்து வந்தனர்.

அவர்களின் நீண்ட கால துயரத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப மத்திய அரசு அனுமதித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழகத் தொழிலாளர்கள் உணவின்றி, பணமின்றி தவித்து வருகின்றனர். ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும், ஒடிசா, மேற்கு வங்கம், குஜராத், அந்தமான் உள்ளிட்ட தொலைதூர மாநிலங்களிலும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வாடி வருகின்றனர்.

எப்படியாவது சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பாகவும், லட்சியமாகவும் இருந்து வருகிறது.

தங்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அவர்கள் வலியுறுத்தி வந்தனர். அப்போது கரோனா வைரஸ் நோய் பரவல் அச்சம் உச்சத்தில் இருந்ததாலும், மாநிலம் விட்டு, மாநிலத்திற்குப் பயணம் செய்வது அவர்களுக்கும் பாதுகாப்பானது அல்ல, அவர்கள் செல்லவிருக்கும் பகுதி மக்களுக்கும் பாதுகாப்பானது அல்ல என்பதாலும் இந்த முயற்சி அப்போது மேற்கொள்ளப்படவில்லை.

ஆனால், இப்போது கரோனா வைரஸ் பாதிப்பு சற்று குறைந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, இடம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லும்போது அவர்களுக்கும், அவர்களால் பிறருக்கும் கரோனா நோய் தொற்றாமல் தடுக்க புறப்படும் இடத்திலும், சேரும் இடத்திலும் உடல்நல சோதனைகள் செய்யப்படும்.

சொந்த ஊருக்குச் சென்ற பிறகு அவர்களுக்குரிய நோய் அறிகுறிகளைப் பொறுத்து வீட்டிலோ அல்லது மருத்துவமனையிலோ 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தி வைக்கப்படுவர் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்த முறை மிகவும் பாதுகாப்பானது ஆகும்.

மகாராஷ்டிரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் வாடும் தமிழகத் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து வர சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசுகளுடன் இணைந்து தமிழக அரசு தான் ஏற்பாடு செய்ய வேண்டும்.

எனவே, இந்த விஷயத்தில் தாமதம் செய்யாமல் இந்தப் பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அதிகாரிகளை உடனடியாக நியமித்து, சொந்த ஊர் திரும்ப விரும்பும் தொழிலாளர்களின் பட்டியலைத் தயாரித்து பேருந்துகள் மூலம் பாதுகாப்பாக தமிழகத்திற்கு அழைத்து வர அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். ஊர் திரும்பிய பின்னர் அவர்களைப் பாதுகாப்பாக தனிமைப்படுத்த வேண்டும்.

அதேபோல், வளைகுடா நாடுகளில் தவிக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியத் தொழிலாளர்களை மே 3-ம் தேதிக்கு பிறகு திரும்ப அழைத்து வர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. குவைத், துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரக நாடுகள், சவுதி அரேபியா, கத்தார், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான தமிழகத் தொழிலாளர்கள் தாயகம் திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு தாயகம் திரும்ப விரும்புவோரின் பட்டியலைத் தயாரிப்பது உள்ளிட்ட பணிகளையும் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து தமிழக அரசுதான் மேற்கொள்ள வேண்டும்.

எனவே, வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் தமிழகத் தொழிலாளர்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்வதற்காக இணையதளத்தைத் தொடங்குவது உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்; அதற்கு பொறுப்பு அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்