இந்தியாவில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு இல்லை என அமெரிக்க ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது உலக அளவில் இந்தியாவுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தி இருக்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மேலும், வெறுப்புப் பிரச்சாரத்தைத் தடுப்பதற்காக மத்திய அரசு அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, திருமாவளவன் இன்று (ஏப்.29) வெளியிட்ட அறிக்கையில், "சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் இந்தியாவில் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. எனவே, அந்நாட்டைக் கவனத்துக்குரிய நாடுகளின் பட்டியலில் வைக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இது உலக அளவில் இந்தியாவுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தி இருக்கிறது.
சிறுபான்மையினர் மீதான தாக்குதலைக் கண்டும் காணாமல் ஊக்குவித்துக் கொண்டிருக்கும் மத்திய பாஜக அரசு இனிமேலாவது தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
சர்வதேச மதச் சுதந்திரச் சட்டம் என்று ஒரு சட்டம் அமெரிக்காவில் இருக்கிறது. அதன் அடிப்படையில் உலக அளவில் ஒவ்வொரு நாட்டிலும் சிறுபான்மையினர் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என்பதைப் பற்றி ஆராய்ந்து அதுகுறித்த அறிக்கையை அமெரிக்க உள்துறை அமைச்சகத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆணையம் சமர்ப்பிக்கிறது. இந்த ஆண்டு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இந்தியாவை கவனிக்க வேண்டிய நாடுகளின் பட்டியலில் அது வைத்திருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள மதச் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களையும், மத்தியில் ஆளும் பாஜக அரசு சட்ட ரீதியில் அவர்களுக்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகளையும் அட்டவணைப்படுத்தியுள்ள அந்த ஆணையம், இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறுபான்மையினருக்கு எதிராகப் பேசியவற்றையும் மேற்கோள் காட்டி இருக்கிறது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது, உத்தரப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டது, டெல்லி கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டது எனப் பல்வேறு சம்பவங்களைப் பட்டியலிட்டுள்ள அந்த ஆணையம், மதமாற்றம் செய்வதாகப் பொய் புகார் கூறி கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டியிருக்கிறது.
இந்தியாவில் மதச் சிறுபான்மையினர் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர் என்றும் அதுகுறித்து அமெரிக்க உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. மதச் சுதந்திரத்துக்கு எதிராகச் செயல்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் சொத்துகளை முடக்கி வைக்கவும், அவர்கள் அமெரிக்காவுக்கு வருவதைத் தடை செய்யவும் அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த ஆணையம் கூறியுள்ளது.
சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான ஆணையத்தின் அறிக்கை அரசியல் ரீதியாக மட்டுமின்றி பொருளாதார ரீதியாகவும் இந்தியாவுக்குப் பல்வேறு இடையூறுகளைக் கொண்டு வரக்கூடும். இந்த அறிக்கையின் அடிப்படையில் அமெரிக்க அரசு பொருளாதாரத் தடைகளைக் கூட இந்திய அரசுக்கு எதிராக விதிக்க வாய்ப்பிருக்கிறது.
ஏற்கெனவே கரோனா நோய்த் தொற்று காரணமாக வீழ்ச்சி அடைந்துள்ள இந்தியப் பொருளாதாரம் மேலும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகும். அண்மைக்காலமாக அரபு நாடுகள் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்து வருவது மட்டுமின்றி தமது நாடுகளில் இருந்தபடி இத்தகைய வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களை வெளியேற்றவும், அவர்களது வர்த்தக நடவடிக்கைகளை முடக்கிடப் போவதாகவும் எச்சரித்து வருவதையும் இத்துடன் இணைத்துப் பார்க்கலாம்.
பாஜக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு அரசு ஆதரவோடு சங் பரிவாரங்களின் வெறுப்புப் பிரச்சாரமும் தாக்குதல்களும் ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே போகின்றன. சங் பரிவாரங்களுடைய நடவடிக்கையால் பாதிக்கப்படுவது ஒட்டுமொத்த இந்திய மக்களும் தான்.
எனவே, இதை அவர்களுடைய தனிப்பட்ட பிரச்சினை என்று நாம் எண்ணிவிட முடியாது. மத்திய அரசு இனியும் இத்தகைய வெறுப்புப் பிரச்சார நடவடிக்கைகளை வேடிக்கை பார்க்காமல் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளதுபோல கும்பல் கொலைக்கு எதிராகவும் வெறுப்புப் பிரச்சாரத்தைத் தடுப்பதற்காகவும் அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். அதன் மூலம்தான் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள அவப் பெயரையும் அடுத்து வரப்போகிற பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்கொள்ள முடியும் என்று சுட்டிக்காட்டுகிறோம்" என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
43 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago