நோய்த் தொற்று தடுப்புப் பணியை தீவிரப்படுத்த வேண்டிய சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர் மற்றும் சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த களப்பணி குழு அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கான உத்தரவை முதல்வர் பழனிசாமி பிறப்பித்துள்ளார்.
அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியின் ஆணையருடன் காணொலிக் காட்சி மூலமாக ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனோ வைரஸ் நோய்த் தொற்றின் தற்போதைய நிலவரமும், அதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறியப்பட்டது.
பின்னர் 5 மாநகராட்சிகளில் களப்பணி குழு அமைப்பது குறித்து அரசாணை வெளியிடப்பட்டது. முக்கியமாக சென்னையில் 6 மண்டலங்களில் களப்பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பு :
“நோய்த்தொற்று தடுப்புப் பணியை தீவிரப்படுத்த வேண்டிய சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர் மற்றும் சேலம் மாநகராட்சிகளில் பகுதிகளில் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த கீழ்க்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன:
பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில், ராயபுரம், திரு.வி.க.நகர், திருவல்லிக்கேணி, தண்டையார்பேட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம் ஆகிய ஆறு மண்டலங்களில் கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதைக் கருத்தில்கொண்டு, இந்த ஆறு மண்டலங்களில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு களப்பணி குழுவும், மற்ற 9 மண்டலங்களில், 3 மண்டலத்திற்கு ஒரு களப்பணி குழுவும் நியமிக்கப்படுகிறது.
இந்திய ஆட்சிப் பணி அலுவலர் தலைமையில் மாவட்டக் கண்காணிப்பாளர் அல்லது கூடுதல் கண்காணிப்பாளர் நிலையில் ஒரு காவல்துறை அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர், மாநகராட்சியைச் சார்ந்த உயர் அலுவலர் மற்றும் சுகாதாரத் துறையைச் சார்ந்த ஒரு உயர் அலுவலர் அடங்கிய குழுவாக இக்குழுக்கள் அமைக்கப்படும்.
இதுபோன்ற ஆறு சிறப்புக் குழுக்கள் திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை மற்றும் சேலம் மாநகராட்சிகளுக்கும் அமைக்கப்படும்.
நோய்த் தொற்று தடுப்புப் பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்துவது, அப்பகுதியிலுள்ள குடும்பங்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை உறுதி செய்வது, நோய்த் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்துவது,
இப்பகுதிகளில் நோய்த்தொற்றுக்கான சோதனையைத் தீவிரப்படுத்தி, விரைவாக அதன் முடிவுகளைப் பெறுவது உள்ளிட்டவை, இக்குழுக்களின் முக்கியப் பணிகளாகும். இதன் மூலம் நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகள் தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்படும்.
மிக நெருக்கமான வசிப்பிடங்களில் வாழும் ஏழை மக்கள், அவர்கள் இருப்பிடங்களில் தனிமைப்படுத்திக்கொள்ள வசதியில்லையெனில், அவர்கள் அரசால் அமைக்கப்படும் தனிமைப்படுத்தப்படும் மையங்களில் தங்கியிருக்க ஏற்பாடு செய்யப்படும்.
நோய்த் தடுப்புப் பகுதிகளில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லை எனில், நகரும் கழிப்பறை வசதிகள் (Mobile Toilet) கூடுதலாக ஏற்படுத்தப்படும்.
சென்னை மாநகரில் நோய்த் தொற்றுக்கான சோதனை செய்வதற்கு தற்போதுள்ள நடமாடும் சோதனை வாகனங்கள் 3-ல் இருந்து 10 ஆக அதிகரிக்கப்படும். இதன் மூலம் நோய்த்தொற்று உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் இருப்பிடங்களுக்கே சென்று விரைவாக சோதனை மேற்கொள்ள முடியும்.
நோய்த் தொற்று உள்ள பகுதிகளில் சோதனைகள் மேலும் அதிகப்படுத்தப்படும். நோய்த்தொற்று உள்ளவர்கள் வசிக்கும் தெருக்களில் உள்ளவர்கள் அனைவரையும் முதற்கட்டமாகவும், அடுத்த கட்டமாக அந்த வார்டுகளில் உள்ளவர்களை Random Sampling அடிப்படையில் நோய்த் தொற்றுக்கான சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் (Containment Zon) சமூக இடைவெளி தீவிரமாக் கடைப்பிடிக்கப்படுவதையும், தனி நபர் சுகாதாரம் பேணுவதையும் உறுதிப்படுத்தி உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
அப்பகுதிகளில் மக்களுக்கு கிருமி நாசினி ((hand sanitizer), முகக் கவசம் (Mask) போன்றவை வழங்கப்படுவதுடன், ஒவ்வொரு வீட்டிற்கும் 250 கிராம் கிருமிநாசினி பவுடர் வழங்கப்படும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரக் குடிநீர் சூரணம் போன்ற மருந்துகளை வழங்குவது உறுதி செய்யப்படும். அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க, கிருமிநாசினி தெளிக்கப்படும். நோய்த்தொற்று பகுதிகளில், ஒரு நாளைக்கு இருமுறை கிருமிநாசினி தெளிப்பது உறுதி செய்யப்படும்.
சென்னை மாநகரில் நோய்த்தொற்று உள்ளவர்களின் தொடர்புகளைக் கண்டறிவதற்கான குழுக்கள் வலுப்படுத்தப்படுவதுடன், தொடர்பு இல்லாமல் நோய்த் தொற்று ஏற்படுகின்றதா என ஆராய்ந்து, அவ்வாறு ஏதும் இருப்பின், அவர்களுடைய தொடர்புகளையும் விரைவாக கண்டறிய ஒரு சிறப்புக்குழு அமைக்கப்படும்.
நோய்த் தடுப்புப் பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களைத் தொடர்ந்து தடையின்றி வழங்குவதற்கான பிரத்யேகமாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். இதனால் அப்பகுதியிலிருந்து மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டிய சூழல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும்.
நோய்த் தடுப்புப் பகுதிகளில் ஏற்கெனவே கணக்கெடுக்கப்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர், இதய நோய், நீரிழிவு நோய் போன்ற நோய் உள்ளவர்களின் உடல்நிலையும், கர்ப்பிணி தாய்மார்களின் உடல்நிலையும் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு தேவையான உதவிகள் செய்து தர வேண்டும்.
கரோனா வைரஸ் நோய்த்தொற்றினை கட்டுக்குள் கொண்டு வர, எடுக்கப்பட உள்ள இத்தீவிரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago