அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி, அவர்களை இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.28) வெளியிட்ட அறிக்கையில், "தமிழக அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி, 15 நாள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியம் பெறும் உரிமை ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பு மற்றும் வருங்கால வைப்பு நிதியின் மீதான வட்டிக் குறைப்பு என்று அதிமுக அரசு, தன்னுடைய ஊழியர்கள் பெறும் மாத சம்பளத்தின் மீது தாக்குதல் தொடுத்து, ஆணை வெளியிட்டிருப்பது மிகவும் வேதனைக்குரியது; கண்டனத்திற்குரியது.
கரோனா நோய்த் தொற்றுப் பேரிடர் அறிவிக்கப்பட்டவுடன் தங்களது ஒருநாள் ஊதியத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய அரசு ஊழியர்கள், கரோனா தடுப்புப் பணிகளையும், 'மெய் வருத்தம் பாராது பசி நோக்காது கண் துஞ்சாது', முழு ஈடுபாட்டுடன் ஆற்றி வருகிறார்கள்.
குறிப்பாக, காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரத்துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, நகராட்சித் துறை, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை ஊழியர்கள் எனப் பெரும்பாலான முக்கிய அரசுத் துறைகளின் லட்சக்கணக்கான ஊழியர்கள் அனைவரும், மிகவும் நெருக்கடியான இந்த நேரத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் மக்கள் பணியாற்றி, கரோனா நோய்த் தடுப்பிலும் சிகிச்சையிலும் முக்கியப் பங்காற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
கரோனா நேரத்தில் நடைபெற்ற தேர்வு மையங்களில் எல்லாம் ஆசிரியர்கள் பணியாற்றியுள்ளனர். அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அவசியமான அனைத்துத் துறை அரசு ஊழியர்களும் ஒருங்கிணைந்து, நமது மக்களைக் காப்பாற்றிட, போர்க்கால உணர்வுடன் பணியாற்றி வரும் நேரத்தில் அதிமுக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை, அரசு ஊழியர்களின் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் பெருமளவில் இழக்க வைத்து மனதளவில் சோர்வடையச் செய்யும் என்ற அடிப்படை உண்மையைக் கூட அரசு ஏனோ உணரவில்லை.
மத்திய பாஜக அரசு முடிவு எடுத்தவுடன், உடனே அதைப் பின்பற்றி, அதிமுக அரசும் இதுபோன்று அரசு ஊழியர்களின் வாழ்வாதார உரிமைகளை மனம் போன போக்கில் ரத்து செய்வதை, மக்கள் நலனில் அக்கறையுள்ள யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
'நிதி மேலாண்மையில் நாங்கள் புலிகள்' என்று விளம்பரம் செய்து வந்த அதிமுக அரசும், அதன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இதுபோன்ற ஊழியர்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்திருப்பது, அதிமுக ஆட்சியின் நிதி மேலாண்மை படுகுழியில் தள்ளப்பட்டுவிட்டது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.
ரூ.4.56 லட்சம் கோடி கடனில் தமிழகத்தை வீழ்த்திய கொடுமையான அதிமுக ஆட்சிதான், இப்படியொரு பின்னடைவான சூழலை கரோனா போரில் கள வீரர்களாக நிற்கும் காவல்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட அரசு ஊழியர்களின் மீது திணித்து, அவர்கள் தலையில் கைவைத்திருக்கிறது என்பது மிகுந்த கவலையளிக்கிறது.
"ஏற்கெனவே ஈட்டிய விடுப்புக்குப் பதில் ஊதியம் வழங்குவதற்கு ஆணை பிறப்பித்திருந்தால் அதையும் ரத்து செய்யுங்கள்" என்று அமைச்சர் ஜெயக்குமாரின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அரசாணை வெளியிட்டிருப்பது சிறிதும் ஈவு இரக்கமற்றது. கரோனா நோய்த் தொற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் அரசு ஊழியர்களை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக, இப்படி உதாசீனப்படுத்துவது ஏற்புடையதாகாது.
அகவிலைப்படி ரத்து, ஈட்டிய விடுப்புக்குப் பதில் ஊதியம் பெறும் உரிமை ரத்து போன்ற அரசு ஊழியர்களின் பொருளாதார நிலைமையைப் பாதிக்கும். அவர்களுக்கு முற்றிலும் எதிரான அரசாணைகளை முதல்வர் பழனிசாமி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்குச் சேர வேண்டிய ஜிஎஸ்டி பங்கு, நிதி கமிஷன் பகிர்வு போன்ற பல்வேறு நிதிகளையும், கரோனா பேரிடர் நிவாரணத்திற்கான நிதியையும், தேவையான அரசியல் அழுத்தம் கொடுத்து, உரிமையுடன் தட்டிக் கேட்டு, உடனடியாகப் பெற வேண்டும். அதை விடுத்து, தனது விரலைக் கொண்டே தன்னுடைய கண்ணைக் குத்திக் கொள்வதைப் போல, அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி, அவர்களை இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது" என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 secs ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago