கரோனா தொற்று சமூகத் தொற்றாக மாறுவதைத் தடுக்கும் வகையில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் 4 நாட்களுக்கு முழு ஊரடங்குக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் காய்கனி, மளிகைக் கடைகளும்கூட மூடப்பட்டுள்ளன. ஆனாலும், பிரம்பும் கையுமாக போலீஸார் சுற்றிக்கொண்டிருக்கத்தான் வேண்டியிருக்கிறது. இதுவரையில் மதுரை மாநகரில் மட்டும் 7,451 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அதேநேரத்தில் பொருட்கள் வீடு தேடி வரும் என்று மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் அறிவித்தது. பல பகுதிகளில் நடைமுறைக்கு வரவில்லை. இது ஒருவகையான நெருக்கடி நிலைக்கு மக்களைத் தள்ளியிருக்கிறது. இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த முன்னாள் உதவிப் பேராசிரியையும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முதுமுனைவர் பட்ட ஆய்வாளருமான த.கலைவாணி, பெண்களை மட்டும் வீட்டை விட்டு வெளியே வர அனுமதிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினையைச் சமாளிக்கலாம் என்று யோசனை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய கலைவாணி, “தமிழ்நாட்டில் ஊரடங்கு. ஆனால், அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வெளியே வரலாம் என்று அறிவித்தார்கள். கறிவேப்பிலை வாங்க ஒருமுறை... கொத்தமல்லி வாங்க ஒருமுறை... என்று சும்மா ஒரு பையைத் தூக்கிக் கொண்டு மக்கள் வெளியே சுற்றித் திரிந்ததன் விளைவு தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அறிவிப்பு வந்திருக்கிறது. அதன் விளைவாக, 4 நாட்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்க ஒரே நேரத்தில் கடைகளில் குவிந்துவிட்டார்கள். அதில் எத்தனை பேர் நோயை வாங்கிக் கொண்டு போனார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. நிலைமை இன்னும் மோசமாகிவிடுமோ என்கிற அச்சமும் ஏற்படுகிறது.
இதற்குப் பதிலாக அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பெண்களுக்கு மட்டுமே அனுமதி என்று கூறியிருக்கலாம். ஏனென்றால் பெண்கள் அநாவசியமாக வெளியே சுற்ற முடியாது. நம்முடைய சமூக அமைப்பு அப்படி. காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பெண்களுக்கு நிச்சயம் வீட்டு வேலைகள் அதிகம் இருக்கும். ஆண்கள் உதவி செய்கிறார்கள். ஆனால், அது உதவி மட்டுமே. முழுப் பொறுப்பெடுத்துச் செய்ய வேண்டிய இடத்தில் இன்னும் பெண்கள்தான் இருக்கிறார்கள். எனவே, அவர்கள் காலை நேரத்தில் அவசிய வேலை இருந்தால்தான் வெளியே வருவார்கள். வந்தாலும் விரைவில் வீடு திரும்பியாக வேண்டும்.
ஆண்களைப் போல சும்மா வெளியே போய்விட்டு வருகிறேன் என்று பைக்கைக் கிளப்பிக்கொண்டு போய்விட முடியாது. பெண்கள் பொதுவாக நீண்ட தொலைவு செல்லாமல் அருகேயுள்ள கடைகளில் பொருட்களை வாங்குவார்கள். மாஸ்க் அணிதல், தனிமனித விலகலைக் கடைப்பிடித்தல் என்பனவற்றை ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியும். பலர் அவர்களாகவே கடைப்பிடிப்பார்கள். தவிர பெண்கள் கிரிக்கெட் விளையாடுவது, கேரம் விளையாடுவது போன்ற சமூக விளையாட்டுகளில் ஈடுபடமாட்டார்கள். காவலர்களின் பணியும் எளிதாகும்.
இவை மட்டுமன்றி கரோனாவுக்கும் பெண்களைவிட ஆண்கள் மீதுதான் பிடித்தம் அதிகம் என்று செய்திகள் வருகின்றன. உலகம் முழுக்க பெண்களைவிட ஆண்களே அதிக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இறப்பு விகிதமும் பெண்களைவிட ஆண்களுக்கு இருமடங்கு அதிகமிருக்கிறது. இது கரோனாவுக்கு எதிரான போராட்டம். அதற்கான சிறு முன்னெடுப்பாக பெண்களுக்கு மட்டுமே அனுமதி என்பது நடைமுறைப்படுத்தப்படவேண்டும். இதற்குத் தடையாக இருக்கக் கூடாத ஒரே விஷயம் நான் வீட்டிற்குள் இருக்க அவள் வெளியே செல்வதா என்கிற ஈகோ மட்டும்தான்.
அரசாங்கமும் அதிகாரிகளும்கூட பெரும்பாலும் ஆண்கள்தான் என்றாலும், கரோனா பரவலைக் கட்டுக்குள் வைக்க இதுபற்றிச் சிந்தித்தே ஆக வேண்டும். இத்திட்டத்தை மாநகரங்களில் நடைமுறைப்படுத்தலாம். அதன் வெற்றியைப் பார்த்து, தமிழ்நாடு முழுக்கவும் பிறகு இந்தியா முழுக்கவும் நடைமுறைப்படுத்தி சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago