எங்களைப் பற்றி கவலைப்பட யாரும் இல்லை; கரோனா அச்சத்தில் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் பணியாளர்கள்

By பெ.ஸ்ரீனிவாசன்

நாட்டில் கரோனா வைரஸ் பெரும் பரவல் காரணமாக தொடர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள இத்தகைய இக்கட்டான தருணத்தில், தங்களது உயிரையும் பொருட்படுத்தாது மக்களுக்காக மருத்துவர்கள், காவல் துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் எனப் பல்வேறு துறை சார்ந்தவர்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களுடன் தன்னார்வலர்களும் தங்களை இத்தகைய பணியில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

கரோனாவுக்கு எதிரான போரில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள இவர்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்கின்றன. பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது முதல் கரோனா பரிசோதனை வரை அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், இதுபோன்று அரசு மற்றும் சமூகத்தின் கவனம் இல்லாமல், தொடர்ந்து மக்களுக்கான பணியில் ஈடுபட்டு வரும் சிலரில் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் பணியாளர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.

மக்களின் கைகளில் பணம் கிடைக்க உழைப்பவர்கள்

நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நேரத்தில் வங்கிகளில் இருக்கும் பணம் மக்களின் அவசரத் தேவைகளுக்கு அவர்களது கைகளில் கிடைப்பதை உறுதி செய்பவர்கள் இவர்கள். நாள்தோறும் ஒரு நகரில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று, அனைத்துத் தரப்பு மக்களும் வந்து செல்லும் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் இவர்களுக்கு, கரோனா மருத்துவப் பரிசோதனை மற்றும் தரமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டியதும் அவசியம்.

ஆனால், தொடர் பணியில் உள்ள தங்களுக்கு இதுவரை மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை, வேலை செய்யும் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள கையுறை, முகக்கவசம் தரமானதாக இல்லை, பலருக்கு அதுவும் இல்லை என்கின்றனர் திருப்பூரில் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்.

இது தொடர்பாக மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு திருப்பூரில் 100 ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவன பணியாளர்கள் சிலர் கூறியதாவது:

"ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் வார விடுமுறை நாட்கள் தவிர, பிற நாட்களில் எப்போதும் போல் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்களுக்குச் சென்று வங்கிகளின் பணத்தை நிரப்பி வருகிறோம். விடுமுறை எடுத்தால் ஊதியம் பிடிக்கப்படும் என்கின்றனர். இதனால் தொடர்ந்து வேலைக்கு வர வேண்டியுள்ளது.

தற்போதுள்ள சூழலில் நகரில் வங்கிகளுடன் இணைந்த ஏடிஎம் மையங்களில் மட்டும் பணம் எடுக்க வருவோரிடம் கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் சரிவரப் பின்பற்றப்படுகின்றன. ஆனால், நகரில் தனியாக உள்ளவை, புறநகர், கிராமப்புற பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்கள் இப்போதும் யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வந்து செல்லும் வகையில்தான் உள்ளது. இதில் அனைத்து மக்களும் முகக்கவசங்கள், கையுறைகளுடன் ஏடிஎம் மையங்களுக்கு வருவதில்லை.

இதனால் ஏடிஎம் மையங்களுக்கு பணம் நிரப்பச் செல்லும் எங்களுக்கு கரோனா தொற்று பயம் உள்ளது. மணிக்கணக்கில் நாங்கள் ஏடிஎம் மையங்களில் இருப்பவர்கள். நாள்தோறும் அச்சத்துடனே பணம் நிரப்பச் செல்கிறோம். நாங்கள் வேலை செய்யும் நிறுவனம் சார்பில் முகக்கவசம், கையுறைகள் அளிக்கப்பட்டாலும் அவை தரமானதாக இல்லை. பிற நிறுவனங்கள் அதையும் வழங்கவில்லை. நாங்களும் மக்களுக்கான அத்தியாவசியப் பணியையே மேற்கொள்கிறோம். ஆனால், தனியார் என்பதால் காவல் துறை, சுகாதாரத் துறை போன்று எங்களைப் பற்றி கவலைப்பட யாரும் இல்லை.

திருப்பூர் மாவட்டத்தில் 600க்கும் மேல் ஏடிஎம் மையங்கள் உள்ளன. பணம் நிரப்பும் பணிகளில் 5 நிறுவனங்கள் உள்ளன. ஆனால், பணம் நிரப்பும் பணியாளர்கள் யாருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யவில்லை. இப்பணியில் எங்களுக்கு உள்ள ஆபத்துச் சூழலை உணர்ந்து தமிழக அரசு தரமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுப்பதுடன், கரோனா மருத்துவப் பரிசோதனை செய்யவும், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கவும், வேலை நாட்களைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்"

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியமூர்த்தியிடம் கேட்டபோது, "ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் பணியாளர்கள் நாள்தோறும் பல்வேறு இடங்களுக்குச் சென்று வருகின்றனர். அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வது அவசியமான ஒன்று. அரசு சார்பில் நடைபெறும் மருத்துவ முகாம்கள் மூலமாக அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யவும், அனைவருக்கும் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அந்தந்த வங்கி நிர்வாகங்கள் மூலமாக அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களுக்கு கட்டாயமாக அறிவுறுத்தப்படும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்