மாவட்டத்தின் மொத்த கரோனா தொற்றில் விழுப்புரம் நகரைச் சேர்ந்தவர்கள் 75%; செயலிழந்த மாவட்ட நிர்வாகம்; பொதுமக்கள் குற்றச்சாட்டு

By எஸ்.நீலவண்ணன்

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 48 பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 36 பேர் விழுப்புரம் நகரில் வசிப்பவர்கள். இது பாதிக்கப்பட்டவர்களில் 75 சதவீதமாகும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் எவ்வித தொடர்பும் இல்லாதவர்கள் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாக அலுவலக வட்டாரங்களில் கேட்டபோது, "ஒரு மாதமாக பணியாற்றிய காவல்துறை, சுகாதாரத்துறை,உள்ளாட்சி மற்றும் வருவாய்துறையினர் சோர்வடைந்துவிட்டனர். விழுப்புரம் நகரில் பணியில் இருக்கும் காவல்துறையினர் தனக்கு வேண்டியவர்களை வெளியே வர அனுமதிக்கின்றனர். போலி 'பாஸ்' மூலம் வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை இல்லை. ஒரு மாத உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதுதான் இந்த ஊரடங்கின் சாதனை" என்றனர்.

இது குறித்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் எழுத்தாளர் செங்குட்டுவனிடம் கேட்டபோது, "இதற்கு முழுக்க முழுக்க விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் ஆமை வேக நடவடிக்கைகளே காரணமாகும். விழுப்புரம், கந்தசாமி லே அவுட் தெருவும் 21 நாள்களுக்கு முடக்கப்படும் எனும் அறிவிப்பு மாவட்ட நிர்வாகத்தால் ஏப்ரல் 3 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

ஆனால், 20 நாள்களைக் கடந்து கடந்த 23 ஆம் தேதி தான் கந்தசாமி லே அவுட்டின் ஒரு பகுதி மட்டும் மூடப்பட்டது. இதற்குள் இப்பகுதியில் நோய்த் தொற்று இரண்டு சுற்றுகள் வந்துவிட்டது. கடந்த ஓரிரு நாள்களாகத்தான் கன்னியாகுளம் சாலையில் தொடர்ச்சியாக நான்கு தெருக்கள் மூடப்பட்டுள்ளன. இது காலம் கடந்த நடவடிக்கையாகும். குதிரை போன பின் லாயத்தைப் பூட்டி இருக்கிறார்கள்.

நோய்த் தொற்றுடன் ஒருவர் கண்டறியப்பட்டால் அந்தப் பகுதியில் இருக்கும் அனைவருமே கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட வேண்டும். முடக்கப்படும் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் 100 சதவீதம் சென்றடைவதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். ஒரு மாத ஊரடங்கால் ஒரு பயனும் இல்லை. செயலிழந்த மாவட்ட நிர்வாகம்" என்று விழுப்புர நகர மக்கள் சார்பாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இது குறித்து சமூக ஆர்வலர் நிலவளம் கதிரவன் கூறும்போது, "ஊரடங்கை மக்கள் கடைபிடிக்க மேலும் சில கடுமையான விதிமுறைகள் தேவை.தற்பொழுது மக்கள் தேவையுள்ளதோ இல்லையோ கடைகள் குறிப்பிட்ட நேரத்திற்கு திறந்திருக்கும் பட்சத்தில் ஏதாவது ஒரு காரணத்திற்காக என்று சொல்லி வெளியில் வருகின்றனர்.

ஒரு செயலை செய்யாதே என்று சொல்லும்போது, செய்துதான் பார்ப்போமே என்று தன்னிச்சையாய் எழும் உளவியல் சிக்கல் இது. பொருள் தேவைப்படுவோர் 24 மணி நேரத்திற்குள் தேவைப் பட்டியலை உள்ளுர் நிர்வாகத்திற்கு தந்தால் வீட்டுக்கே அவர்கள் கொண்டு சென்று தர வேண்டும்.

கிராமப் பகுதியாக இருந்தால் ஊருக்கு 4 அல்லது 5 தன்னார்வலர்கள், நகரப் பகுதியாக இருந்தால் வார்டுக்கு 4 அல்லது 5 தன்னார்வலர்களைக் கொண்டு இதை செயல்படுத்தலாம். சந்தையைத் தேடி மக்கள் என்று இல்லாமல் மக்களைத் தேடி சந்தை என்று அரசே அங்கீகரிக்கப்பட்ட வியாபாரிகளை வாகனம் மூலம் பொருட்களை எடுத்துக் கொண்டு இல்லம் தேடிச் சென்று விற்பனை செய்யலாம்.

இந்த சேவைக்கு ரேஷன் கடை பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களை தன்னார்வலர்கள் என்ற அடிப்படையில் பயன்படுத்தலாம். இரு சக்கர வாகனத்தை அறவே தடை செய்யலாம். அனைத்து சிறு வியாபாரிகளும் தினசரி மக்கள் வாழும் தெருக்களுக்கே தினசரி சென்று விற்பனை செய்வதால், தினசரி காய்கறி கடை பெரும் திரளுக்கே வழி வகுக்கும்" என்றார்.

கடந்த 5-ம் தேதி ஆட்சியர் அண்ணாதுரை செய்தியாளர்களிடம் பேசும்போது, "தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் அத்தியவாசிய தேவைகள் ஸ்டிக்கர் ஒட்டிய வீட்டில் நாங்களே பொருட்களை வாங்கி தருகிறோம். மாவட்டத்தில், வேளாண்மை, தோட்டக்கலை துறைகள் மூலம் 253 வாகனங்களில் காய்கறி வீட்டுக்குக் கொடுக்கப்படுகிறது. ஸ்டிக்கர் ஒட்டி பாதிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கும் கொடுக்கப்படுகிறது" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE