இவர் நம்ம வாசகர்!- ஒன்றல்ல, மூன்று நாளிதழ் வாங்குவார்...

By செய்திப்பிரிவு

‘இந்து தமிழ்’ நாளிதழ் வெளியான முதல் நாளி லிருந்து வாசிக்கத் தொடங்கிய வாசகர்களைப் பற்றி, நமது முகவர்கள் நினைவுகூரும் பகுதி இது. பாளையங்கோட்டை பாரதி நகர் முகவர் என்.முத்துக்குமார் பேசுகிறார்...

‘இந்து தமிழ்’ உள்பட மூணு பேப்பர் வாங்குதாரு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் கோட்டப் பொறியாளராக இருந்து ஓய்வுபெற்ற எஸ்.நடராஜன் சார். பரபரப்பே இல்லாத மனிதர். ஏதாவது காரணத்தால் 8 மணிக்குப் போய் பேப்பர் போட்டாலும் கோவிச்சுக்க மாட்டாரு. “12 மணியானாலும் போட்ருப்பா, போடாம மட்டும் இருந்திடாத என்ன?” அப்படின்னு சொல்லுவாரு. “3 பேப்பர் வாங்குறீங்களே, மதியம் கொண்டுவந்து போட்டா எப்டி சார் படிப்பீங்க?”ன்னு ஒரு நாளு கேட்டுட்டேன். “நான் பரபரப்பு செய்தி எதையும் படிக்கமாட்டேன்பா. அரசியல், சினிமாவுல ஆர்வம் கெடையாது. அதைத்தான் சுத்திச் சுத்தி எல்லாப் பேப்பர், டிவி-யிலயும் போடுறாங்க. அறிவுப்பூர்வமான செய்தி, வானிலை அறிவிப்பு, அப்புறம் இந்து தமிழ் இணைப்பிதழைப் படிப்பேன்.

ஆனந்தஜோதி ரொம்பப் பிடிக்கும். வயசாகிட்டதால நலம் வாழ பகுதியையும் முழுசா வாசிச்சிருவேன். மூணு பேப்பர் வாங்குறதப் போய் பெருசாச் சொல் றீயேப்பா... கொஞ்சம் நம்ம மாவட்ட எல்லை யைத் தாண்டி கேரளாவுக்குப் போய்ப்பாரு. ஒவ்வொரு வீட்லயும் எத்தன பேப்பர், எத்தனை பொஸ்தகம் வாங்குறாம்னு. பேப்பர் படிக்கதுல்லாம் பெரிய விஷயமே இல்லப்பா. படிக்கிறோமோ இல்லியோ பேப்பர் வாங்குறதும் ஒரு ஜனநாயக கடமைப்பா. ஏன்னா அது இந்திய ஜனநாயகத்தோட நாலாவது தூண் இல்லியா? என்னோட 2 மக வீட்லயும், ஒரு மகன் வீட்லேயும் மூணு பேப்பர்தான் வாங்குறாங்க. அதிலேயும் ‘இந்து தமிழ்’ உண்டு” என்றார்.

சார் மாதிரி வாசகர்களைத்தான் எங்களை மாதிரி முகவர்களுக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரே பயணச் செலவுல மூணு பேப்பர் போட்றலாம் பாத்தீயளா?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE