தேசத்தின் கோடானு கோடி உழைக்கும் மக்கள் மற்றும் இந்தியப் பொருளாதாரத்தின் அரணாகத் திகழ்கிற நடுத்தர சிறு, குறு தொழில்களை பேரிடர் காலத்தில் பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் இந்தியப் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம்:
“தேசத்தின் கோடானு கோடி உழைக்கும் மக்கள் மற்றும் இந்திய பொருளாதாரத்தின் அரணாகத் திகழ்கிற நடுத்தர சிறு, குறு தொழில்கள் தொடர்பான ஓர் பிரச்சினை மீது உங்களின் உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன்.
இந்தியப் பொருளாதாரத்தின் பல அளவுகோல்களில் நடுத்தர சிறு, குறு தொழில்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுபவை ஆகும். இத் தொழில்கள் 12 கோடிக்கும் மேற்பட்டவர்க்கு வேலை வாய்ப்புகளைத் தந்து வருகின்றன. வேறு சில மதிப்பீடுகள் இந்த எண்ணிக்கையை அதிகமாக காண்பிக்கின்றன.
இந்திய மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 30%ம், இந்திய ஏற்றுமதிகளில் அநேகமாக 50% பங்களிப்பும் இத்தொழில்களால் வழங்கப்பட்டு வருகின்றன. 28 மாநிலங்களில் உள்ள 350 தொழில் நகரங்களில் உள்ள 1.05 லட்சம் நடுத்தர சிறு, குறு தொழில் நிறுவனங்களில் 2019-ல் நடத்தப்பட்ட ஆய்வில் அதற்கு முந்தைய 4 ஆண்டுகளில் 1.35 கோடியில் இருந்து 1.49 கோடி வரை புதிய வேலைகள் இத்தொழில்களில் உருவாகியுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.
ஆகவே நடுத்தர சிறு, குறு தொழில்களின் நலமும் வளர்ச்சியும் மொத்த இந்தியப் பொருளாதாரத்தின் நலத்திற்கும், வளர்ச்சிக்கும் மிக முக்கியமான தேவை ஆகும். சமூகத்தின் எல்லாப் பகுதியினரின் "உள்ளடக்கிய வளர்ச்சிக்கும்" (InclusiveGrowth) அதன் பங்கு முக்கியமானது.
கோவிட்-19 நெருக்கடிக்கு முன்பே இத்தொழில்கள் நெருக்கடியில் இருந்தவையே. அரசின் ஆதரவை நாடி மன்றாடிக் கொண்டிருந்தவையே. நிதி, சந்தை, ஆதார வளம் போன்றவை குறித்த பல கோரிக்கைகளை அவை முன் வைத்து வந்தன. கோவிட்-19 இப்பிரச்சினைகளை எல்லாம் பன்மடங்காக மாற்றியுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இத் தொழில்களின் முன்னணிப் பிரமுகர்களிடம் இருந்து பல ஆலோசனைகளை கிடைக்கப் பெறுகிறேன்.
நான் கீழ்க்காணும் பிரச்சினைகள் மீது உங்களின் கவனத்தை ஈர்ப்பதோடு பெரும் வேலையின்மை நெருக்கடி ஏற்படாமல் தவிர்ப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வேண்டுகிறேன்.
1) கடன் சேவை உள்ளடங்கிய விகிதத்தில் (Debt Service Coverage Ratio) உரிய மாற்றங்களைக் கொண்டு வந்து அதனை நெகிழ்வாக மாற்றி நிதி வளம் எளிதில் கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கான விரிவான மேலும் நெகிழ்வான கொள்கையை, கள நிலைமைகளைக் கணக்கில்கொண்டு, இந்திய அரசு ஓராண்டிற்காவது வகுக்க வேண்டும்.
2) செயல் மூலதனத்திற்கான (Working Capital) வரையறைகளை உரிய முறையில் மாற்றி அமைக்க வேண்டும்.
3) ADHOC கடன் ஏற்கெனவே உள்ள செயல் மூலதன வரம்புகளுக்கு உரியதைக் காட்டிலும் கூடுதலாக 25% வழங்கப்பட வேண்டும். இதுகுறித்த ரிசர்வ் வங்கியின் முந்தைய அறிவிக்கைகள், ADHOC கடன்கள் உரிய நேரத்தில் அதுவும் நெருக்கடி மிக்க காலங்களில் வழங்கப்படாவிட்டால் அந்த நிறுவனங்கள் நலிவடைந்து மீட்சிக்கும் வழி இல்லாதவையாக மாறிவிடும் என்று அழுத்தமாக சுட்டிக் காட்டியுள்ளன. இந்த அவசரத்தை மனதிற் கொண்டு உடனடி நடவடிக்கைகள் கால விரயம் இன்றி எடுக்கப்பட வேண்டும். இந்தக் கடன் 2018-19 ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்டு வழங்கப்பட வேண்டும்.
4) கடனுக்கான இஎம்ஐ செலுத்துவதற்கு தரப்பட்டுள்ள மூன்று மாத கால நீட்டிப்பு நிவாரணத்தை தரவில்லை. வலியைக் குறுகிய இடைவெளிக்கு சற்று தள்ளிப் போட்டுள்ளது என்பதே. இந்த 3 மாத கால நீட்டிப்பு காலத்திற்கும் வட்டி ரத்து செய்யப்படாததால் கூடுதல் சுமையை அது நடுத்தர சிறு, குறு தொழில்கள் மீது ஏற்றியுள்ளது. எனவே இத்தொழில்களின் அனைத்து வங்கிக் கடன்களை செலுத்துவதற்கு ஓராண்டு கால நீட்டிப்பு (Moratorium) வழங்கப்பட வேண்டும்.
5) எல்லா கால முறை கடன்களுக்கும் (Term Loans) கடன் செலுத்தும் காலத்தை குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாக நீட்டிக்க வேண்டும்.
6) நடுத்தர சிறு, குறு தொழில்களுக்கு 6 சதவீத வட்டி மானியத்தை (Interest Subsidy) 31.03.2021 வரையிலான ஓராண்டிற்கு வழங்க வேண்டும். குறு தொழில்களின் ரூ.3 லட்சம் வரையிலான கடன்களுக்கு கூடுதல் விகித வட்டி மானியத்தை உறுதி செய்ய வேண்டும்.
7. 31.12.2020 வரை எந்தவொரு கடன் தவணை கட்டத் தவறுவதும் செயல்படா சொத்தாக (NPA- Non Performing Asset) கருதப்படாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அவர்களின் கடந்த காலக் கடன் செலுத்துகிற அனுபவத்தைக் கணக்கில்கொண்டு இதை மேலும் ஓராண்டிற்கு விரிவாக்க வேண்டும்.
8. அமைச்சர் நிதின் கட்கரி "நிதியின் நிதி" (Fund of Funds) என்ற ரூ.10,000 கோடி திட்டத்தை அறிவித்துள்ளார். அதிக கடன் நம்பக விகிதம் (High Credit Rating) கொண்ட நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதை நாடினால் அவற்றின் 15% பங்குகளை அரசு வாங்கி மூலதனத் தேவைகளுக்கு உதவும் என்பதே. இதன் இடர்கள் ஆய்வுக்குரியவை. பங்குச் சந்தையின் நிலையற்ற தன்மையும் மனதில் கொள்ளப்பட வேண்டும்.
9. ஜி.எஸ்.டி அறிக்கை சமர்ப்பிப்பதற்கான வழிகாட்டல் நெறிகள், கெடு தேதிகள் நெகிழ்வானதாக மாற்றப்பட வேண்டும். இந்த நிதியாண்டின் இறுதி வரை தாமதச் சமர்ப்பித்தலுக்கான தண்டத் தொகை ரத்து செய்யப்பட வேண்டும். நிலுவை பாக்கி, நடப்பு வரிகள் செலுத்தப்படுவதற்கு 6 மாத கால "வரி விடுமுறை" (Tax holiday) அறிவிக்கப்பட வேண்டும். இதனால் ஜி.எஸ்.டி பதிவு ரத்தாகாமல் இருப்பதும் உறுதி செய்யப்பட வேண்டும்.
10. ஐ.ஜி.எஸ்.டி செலுத்தும் போது Bill of entry ல் "Duty Credit Scrips" ஐ அதிலேயே கழித்துக் கொள்கிற நடைமுறையைக் கொண்டு வர வேண்டும். (தற்போது இது அடிப்படை வரி செலுத்தும் போது மட்டுமே வழங்கப்படுகிறது). இது இந்த நிறுவனங்கள் நிதிக்காக வங்கிகள்/ நிதி நிறுவனங்களை சார்ந்து இருப்பதைக் குறைக்கும்.
11. வங்கிகள்/ நிதி நிறுவனங்கள் இந்த நிவாரணத்திற்கான நிதிச் சுமையைத் தாங்க இயலாவிடில் அரசாங்கம் அதை ஏற்று ஈடு கட்ட வேண்டும்.
12. அரசு கொள்முதல் கொள்கை (Government Procurement Policy) மேலும் நடுத்தர சிறு, குறு தொழில்களுக்கு சாதகமானதாக மாற்றப்பட வேண்டும். அதன் அமலாக்கம் இதய சுத்தியோடு அமைய வேண்டும்.
உங்களின் விரைவான தனிப்பட்ட கவனத்தையும் தலையீட்டையும் வேண்டுகிறேன். உங்களின் விரைவான மறுமொழியை எதிர்பார்க்கும், தங்கள் உண்மையுள்ள, சு. வெங்கடேசன், நாடாளுமன்ற உறுப்பினர், மதுரை”.
இவ்வாறு சு.வெங்கடேசன் கடிதத்தில் வேண்டுகோள் வைத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago