3 நாளில் கரோனா ஒழியும் என்றவர் 4 நாள் முழு ஊரடங்கை அவசர கதியில் அறிவித்தது ஏன்? உரிய முன்னெச்சரிக்கை இல்லாமல் பொதுமக்களை அல்லாட வைப்பதா?-  ஸ்டாலின் விமர்சனம்

By செய்திப்பிரிவு

பேரிடர் காலத்தில் பொதுமக்களின் நலன் காப்பதுதான் முக்கியமே தவிர, அதையே ஒரு வாய்ப்பாகக் கருதி, வெற்று விளம்பர அரசியல் செய்வது, இறுதியில் எந்தப் பயனையும் தராது என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். ‘அரசியல்’ விளம்பரத்துக்காக, பொதுமக்களின் உயிரோடு விளையாட வேண்டாம் என ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

“ஊரடங்குக்குக் கட்டுப்பட்டு வீட்டுக்குள் இருப்பதே கரோனா நோய்த் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான முதல்கட்ட நடவடிக்கை என்பதால் மத்திய - மாநில அரசுகள் இரண்டு கட்டமாக நடைமுறைப்படுத்தியுள்ள 40 நாள் ஊரடங்கை மதித்து, பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில், சென்னை –மதுரை - கோவை உள்ளிட்ட மாநகரங்களில் 4 நாட்கள் ‘முழுமையான ஊரடங்கு’ என, எவ்வித முன் தயாரிப்புகளுமின்றி, திடீரென யாரும் எதிர்பாராத நிலையில் அரசு அறிவித்தது, பொதுமக்களை பெரும் அச்சத்துக்கும் குழப்பத்திற்கும் பரபரப்பிற்கும் உள்ளாக்கியது.

நான்கு நாட்களுக்கு என்ன செய்வது என்ற பதற்றத்திலும், அவசர ஆத்திரத்திலும், அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக நேற்று (ஏப்ரல் 25) மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியே வந்து, அதனால் எங்கும் நெரிசல் ஏற்பட்டு, இத்தனை நாளும் மக்கள் காத்துவந்த சமூக ஒழுங்கு பாதிக்கப்பட்டு, நோய்த் தொற்றுப் பரவல் குறித்த சந்தேகம் அனைத்துத் தரப்பிலும் அதிகரித்துள்ளது என்பது வேதனைக்குரிய செய்தி ஆகும்.

ஏற்கெனவே, அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் திறந்திருக்கும் நேரம் குறித்த கட்டுப்பாட்டுடன் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், அதில் ஏப்ரல் 26 முதல் 29 வரையிலான நான்கு நாட்கள் ‘முழு ஊரடங்கு’ என 24-ம் தேதி மாலையில் அறிவிக்கப்பட்டதால், இத்தனை நாட்களாக அரசு இயந்திரம், ‘அரைகுறை ஊரடங்கை’, ‘கட்டுப் படுத்தப்படாத ஊரடங்கை’ பின்பற்றியதா என்ற பெரும் சந்தேகத்துடன், இடையில் உள்ள ஒரு நாளான ஏப்ரல் 25 அன்று, பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு விரைந்து வெளியே வருவது இயல்பான ஒன்றுதான்.

நோய்த்தொற்று பரவாமல் தடுக்க மத்திய - மாநில அரசுகள் எடுத்து அறிவிக்கும் முடிவுகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்புத் தரவேண்டும் என்பதை, திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதே நேரத்தில், இப்படிப்பட்ட நெருக்கடி மிகுந்த காலகட்டங்களில், மக்களின் தேவைகள் - நலன்கள் கருதி, மக்களை முதலில் மனரீதியாகத் தயார் செய்து, அரசுகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும்.

‘முழு ஊரடங்கு’ நடைமுறைக்கு வருவதால், ஏப்ரல் 25 - ஒருநாள் மட்டும் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக்கான நேரத்தை மாலை வரை நீட்டிப்பு செய்தால், பொதுமக்கள் கூட்டம் கூடாமல் வாங்கிச் செல்ல வசதியாக இருக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தேன்.

பேரிடர் காலத்திலும்கூட, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதேச்சதிகார பாணியில், எந்த ஆலோசனையையும் பொருட்படுத்தாமல், எல்லாவற்றையும் விளம்பரமாகக் கருதி, தன் பெயரை முன்னிறுத்திக் கொள்ள முயற்சிக்கும் மலிவான அரசியல் நோக்கத்துடன் “மூன்று நாட்களில் தமிழகத்தில் கரோனா ஒழிந்துவிடும்”என்று ஒரு வாரத்திற்கு முன் சொன்ன ‘டாக்டர்’ எடப்பாடி பழனிசாமி, தற்போது 4 நாள் முழு ஊரடங்கு என அறிவித்தது, அவரது முன்யோசனையற்ற ஆட்சி நிர்வாகத்தையே காட்டியது.

அதனால், மக்கள் பதற்றமடைந்து, தேவையான பொருள்கள் கிடைக்குமோ தீர்ந்துவிடுமோ என்ற கவலையில், நேற்று காலையிலேயே கடைகள் முன்பாகக் குவிந்துவிட்டனர். காய்கறி - மளிகைப் பொருட்கள் - பால் விற்பனையகம் - இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவை உள்ள பகுதிகள் அனைத்திலும் பெருங்கூட்டம் கூடியதால், இந்த ஊரடங்கின் நோக்கமே சிதைந்து சின்னாபின்னமாகும் சூழல் உருவாகிவிட்டது.

நிலைமை கைமீறிப் போனதற்குப் பிறகு, சென்னை மாநகராட்சி ஆணையரிடமிருந்து, மதியம் 3 மணி வரை கடைகள் திறந்திருக்கலாம் என அறிக்கை வெளியாகிறது. அதற்குள் சென்னையில் பெரும்பாலான கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் தீர்ந்துவிடவே, மக்கள் இங்குமங்குமாக ஓடி அலைந்து, எங்கேயாவது காய்கறி - மளிகைப்பொருட்கள் கிடைக்கிறதா என அல்லலுற வேண்டியதாயிற்று. “ஹாட் ஸ்பாட்” எனச் சொல்லப்படுகிற நோய்த்தொற்று மிகுந்த சென்னையின் பல பகுதிகளிலும் ஒரே மாதிரியான நிலைமைதான்.

மதுரை, கோவை, தமிழகத்தின் பிற நகரங்களிலும் இதே பதற்றம்தான், ஓட்டமும் நடையும்தான், உரசல்தான், மிரட்சிதான்! காட்சி ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் மக்கள் கூட்டம் தொடர்பான படங்களும் செய்திகளும் வெளியான பிறகு, முழு ஊரடங்கு நாட்களிலும் காய்கறிக் கடைகள் - பால் விற்பனையகங்கள் திறந்திருக்கும் என அரசுத் தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

4 நாட்கள் முழு ஊரடங்கு என அறிவிப்பதற்கு முன்பே, இதுகுறித்தெல்லாம் முறையாக ஆலோசித்து முடிவெடுத்து வெளிப்படையாக அறிவித்திருந்தால், மக்களும் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, பதற்றமின்றி, வழக்கம்போல, சமூக ஒழுங்கைக் கடைப்பிடித்து தங்களுக்குத் தேவையான பொருட்களை எவ்வித நெரிசலுமின்றி, பொறுமையாக வாங்கிச் சென்றிருக்க முடியும்.

பேரிடர் காலத்தில் பொதுமக்களின் நலன் காப்பதுதான் முக்கியமே தவிர, அதையே ஒரு வாய்ப்பாகக் கருதி, வெற்று விளம்பர அரசியல் செய்வது, இறுதியில் எந்தப் பயனையும் தராது என்பதை ஆட்சியாளர்கள் நினைவில்கொள்ள வேண்டும். விளம்பர வெளிச்சத்திற்காக ஏங்கி, மக்களின் உயிரோடு விளையாடும் விபரீதப் போக்கை இப்போதாவது நிறுத்திக் கொண்டு, முன்யோசனை நிறைந்த விவேகத்துடன் விரைந்து செயல்படுமாறு அன்புடன் வலியுறுத்துகிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்