கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரி ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்கள் அங்கு குவிவதால் ஏற்பட்ட தொற்றாக இருக்கலாம். கோயம்பேடு மார்க்கெட் செயல்படுவது அவசியம். ஆகவே, சென்னைவாசிகள் நேரடியாக மார்க்கெட்டுக்கு வராமல் ஆன்லைன், நடமாடும் காய்கறிக் கடைகள் மூலம் பொருட்களை வாங்க வேண்டும் என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:
“சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்கி விற்பனை செய்து வரும் வணிகர் ஒருவர் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்து அவரது குடும்பத்தினர் 6 பேருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்றியுள்ளது. கடந்த சில வாரங்களாக கோயம்பேடு சந்தைக்கு வருபவர்களுக்கு கரோனா வைரஸ் பரவத் தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கோயம்பேடு சந்தையில் 4000 காய்கறிக் கடைகள், 3500 பழக்கடைகள், 2500 மலர்க் கடைகள் என மொத்தம் 10,000 கடைகள் உள்ளன. அந்தக் கடைகளில் மட்டும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். அங்கு மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் மட்டும் 30,000 பேர் உள்ளனர்.
வெளியிலிருந்து காய்கறி வாங்க வரும் வணிகர்கள், கோயம்பேடு சந்தையை நம்பி பிற வணிகம் செய்வோர் ஆகியோரையும் கணக்கில் கொண்டால் அங்கு மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். அத்தகைய சூழலில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாவிட்டால், கரோனா பரவுவதைத் தடுக்க முடியாது என்பதை சந்தை நிர்வாகக் குழுவினரும், வணிகர்களும் ஒப்புக்கொள்கின்றனர்.
அதேநேரத்தில் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுவது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது. கோயம்பேடு சந்தையை மூடிவிட்டால் தமிழகம் முழுவதும் உள்ள உழவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்; சென்னையில் காய்கறி மற்றும் பழங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் தமிழக அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே கோயம்பேடு சந்தையில் வணிகர்கள் தொடர்ந்து வணிகம் நடத்தி வருகின்றனர்.
அவர்களிடமும் கரோனா பரவல் அச்சம் நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் சந்தைக்கு வருவதைத் தவிர்ப்பது மட்டும்தான் கோயம்பேடு சந்தையில் கரோனா நோய்ப்பரவல் ஏற்படுவதைத் தடுக்கும்.
ஊரடங்கு ஆணை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு கிட்டத்தட்ட கோயம்பேடு சந்தைக்கு இணையான விலையில் சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் காய்கறிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் ஆர்டர் செய்தால், அரசு சார்பிலும், தனியார் சார்பிலும் இன்னும் குறைவான விலையில் வீடுகளுக்கே காய்கறிகளைக் கொண்டு சென்று வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் கோயம்பேட்டில் மக்கள் குவிவது தேவையற்ற, நோயை விலைக்கு வாங்கும் செயலாகவே அமையும்.
எனவே, சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள அனைவரும் தங்களின் குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நலன் கருதி வெளியில் சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல், சென்னைவாசிகள் கோயம்பேடு சந்தைக்குச் செல்வதைத் தவிர்த்து, அந்தந்தப் பகுதிகளுக்கு வரும் நடமாடும் கடைகளிலும், ஆன்லைனிலும் காய்கறிகளை வாங்கி, கரோனா நோய்ப்பரவலுக்கு ஆளாவதைத் தவிர்க்க வேண்டும்”.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago