6 காவலர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி: போத்தனூர் காவல் நிலையம் மூடல்

By டி.ஜி.ரகுபதி

கோவை மாநகர காவல்துறை தெற்கு உட்கோட்டத்துக்கு உட்பட்ட 75 காவலர்களுக்கு நேற்று கரோனா வைரஸ் நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3 பெண்கள் உட்பட 6 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது.

இதில் ஒருவர் மாநகர ஆயுதப் படையிலும், ஒருவர் குனியமுத்தூர் காவல் நிலையத்திலும், ஒருவர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவிலும், மற்ற மூவர் போத்தனூர் காவல் நிலையத்திலும் பணியாற்றுகின்றனர். இவர்கள் 6 பேரும் போத்தனூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குடியிருப்புப் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

காவல் ஆணையர் சுமித் சரண் கூறுகையில், ''போத்தனூர் காவல்நிலையம் மூடப்பட்டது. அங்கு பணியாற்றிய காவலர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. போத்தனூர் காவல் நிலையம் தற்காலிகமாக வேறு கட்டிடத்தில் இயங்கும்'' என்றார்.

மேலும், வெளிஆட்கள் காவல் ஆணையர் அலுவலகத்துக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE