ரம்ஜான் நோன்பு காலத்தில் வீடுகளுக்குச் சென்று கஞ்சி வழங்க அனுமதி வேண்டும்: கோவில்பட்டி ஜமாத் நிர்வாகிகள் வலியுறுத்தல்

By எஸ்.கோமதி விநாயகம்

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ரம்ஜான் நோன்பு காலம் கடைபிடிப்பது தொடர்பான ஜமாத் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கோவில்பட்டி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரம்ஜான் நோன்பு காலம் கடைபிடிப்பது தொடர்பாக ஜமாத் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

கோட்டாட்சியர் விஜயா தலைமை வகித்தார். கூட்டத்தில், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் ஜெபராஜ், பீர்முகைதீன், வட்டாட்சியர்கள் மணிகண்டன், ராஜ்குமார், அழகர், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரகுபதி மற்றும் ஜமாத் அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், ஜமாத் நிர்வாகிகள் பேசுகையில், தற்போது தண்ணீர் தட்டுப்பாடு போன்ற பொதுப்பிரச்சினைகள் ஏதுமில்லை. பாங்கு அழைப்புக்கு அனுமதி வழங்க வேண்டும். ரம்ஜான் நோன்பு காலத்தில் பொது இடத்தில் நோன்பு கஞ்சி தயார் செய்து உரிய பாதுகாப்புடனும், சமூக இடைவெளியுடனும் வீடுவீடாகச் சென்று மக்களுக்கு தர அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும், தங்களுக்கு அரசு மூலம் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கின்றன என்றும், கரோனா வைரஸை ஒழிக்க அரசு தெரிவிக்கும் அனைத்து உத்தரவுகளையும் கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்போம் என்றும் ஜமாத் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கூட்டத்தில், பாங்கு அழைக்க தடை இல்லை. ரம்ஜான் காலத்தில் பொது இடத்தில் நோன்பு கஞ்சி தயார் செய்து உரிய பாதுகாப்புடனும், சமூக இடைவெளியுடனும் வீடுவீடாகச் சென்று மக்களுக்கு தருவதற்கான அனுமதி குறித்து மாவட்ட ஆட்சியர் மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அத்தியாவசிய தேவைகள் வழங்கப்பட்டன

தொடர்ந்து, ஜமாத் நிர்வாகிகள் பேசுகையில், கோயம்புத்தூரில் இருந்து எட்டயபுரம் வட்டம், அய்யாக்கோட்டையூர் வந்து திரும்பிச் செல்ல இயலாத நிலையில் உள்ள 43 பேருக்கு வருவாய் துறை மற்றும் தன்னார்வலர்கள் மூலம் உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசியத் தேவைகள் செய்து கொடுக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE