உலகத்தின் பல நாடுகள் சீனாவிடமிருந்து கொள்முதல் செய்யப்பட ரேபிட் டெஸ்ட் கருவிகளைத் திருப்பி அனுப்பியதை அறியாமல் அதே நிறுவனத்திடமிருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகளை இந்திய அரசு கொள்முதல் செய்தது ஏன்? கொள்முதல் செய்வதற்கு இந்திய சுகாதாரத்துறை பொறுப்பா? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பொறுப்பா? என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கை:
“இந்தியாவில் கரோனா தொற்று கடுமையாக பாதிக்கப்பட்டதும் அதைப் பரிசோதனை செய்வதற்கு உரிய கருவிகளும், ஆய்வகங்களும் இல்லாத நிலை ஏற்பட்டது. நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத்துறைக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.8 சதவீதம் மட்டுமே மத்திய பாஜக அரசு நிதி ஒதுக்கியதால் பெருகிவரும் மக்கள் எண்ணிக்கையை ஈடுகட்டுகிற வகையில் மருத்துவர்களையோ, கட்டமைப்பு வசதிகளையோ பெருக்கிக்கொள்ள முடியவில்லை.
கரோனா தொற்றுநோயை துல்லியமாக சோதனை செய்து கண்டறிய போதிய பிசிஆர் ஆய்வகங்கள் இல்லாத நிலையில் பெருகிவரும் நோயாளிகளைப் பரிசோதிக்க முடியவில்லை. உலக நாடுகளிலேயே மிகக் குறைவான எண்ணிக்கையில் சோதனை செய்யும் நாடாக இந்தியா இருந்தது. இந்நிலையில் துரிதப் பரிசோதனைக் கருவி மூலம் அரை மணிநேரத்தில் கரோனா தொற்றை எதிர்கொள்ளக்கூடிய எதிர்ப்பு சக்தி உடலில் உள்ளதா என்பதை முதலில் கண்டறிந்துவிட்டு பிறகு பிசிஆர் சோதனை செய்யலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவெடுத்தது.
அதன் ஒப்புதலின் பேரில் அரை மணிநேரத்தில் சோதனை செய்யக்கூடிய 7 லட்சம் துரித சோதனைக் கருவிகள் சீனாவில் உள்ள தனியார் நிறுவனத்திடமிருந்து இந்திய அரசு கொள்முதல் செய்தது. அதேபோல தமிழக அரசும் 4 லட்சம் கருவிகளுக்கு கொள்முதல் ஒப்பந்தம் போட்டு 24 ஆயிரம் கருவிகளை முதல் தவணையாகப் பெற்றுள்ளது. மத்திய அரசு மூலமாக 12 ஆயிரம் கருவிகள் தமிழகத்திற்கு கிடைத்தன.
இந்நிலையில் மத்திய அரசு வழங்கிய கருவிகளை ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை நோயாளிகளிடம் சோதனை செய்ததில் 5 சதவீதம்தான் சரியான முடிவு வெளிவந்தது. அந்தக் கருவியின் துல்லியத்தன்மை கேள்விக்குறியாக்கப்பட்டது. நீண்ட சோதனைகளுக்குப் பிறகு துரித பரிசோதனைக் கருவிகள் மூலம் துல்லியமாக சோதனைகளைச் செய்ய முடியவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் ராஜஸ்தான் அரசு முறையிட்டது.
இதைப்போல கேரளாவும், தமிழ்நாடும் கருவிகளின் துல்லியத்தன்மை குறித்து புகார் தெரிவித்துள்ளன. இதையொட்டி ரேபிட் டெஸ்ட் கருவி சோதனைகளை ஐ.சி.எம்.ஆர். இரண்டு நாட்களுக்குத் தடை செய்தது.
சீனாவிடமிருந்து இந்தியா ரேபிட் டெஸ்ட் கருவிகளை கொள்முதல் செய்ததைப் போல ஓரிரு மாதங்களுக்கு முன்பே ஸ்பெயின் நாடு 6 லட்சம் கருவிகளையும், செக்கோஸ்லோவாகியா 3 லட்சம் கருவிகளையும், பிரிட்டன் அரசு 1 லட்சம் கருவிகளையும் கொள்முதல் செய்தது. ஆனால் அவை நோயாளிகளின் சோதனைக்குத் தகுதியற்றவை என்று அறிந்த பிறகு சீனாவுக்கே திருப்பி அனுப்பிவிட்டன.
அதற்காக ஏற்கெனவே செலுத்திய பணத்தையும் அந்தந்த அரசுகள் திரும்பப் பெற்றுக்கொண்டன. இதுகுறித்த செய்திகள் ஊடகங்களில் பரவலாக வெளிவந்தன. இதை இந்திய அரசு அறியாதது வினோதமாக இருக்கிறது.
உலகத்தின் பல நாடுகள் சீனாவிடமிருந்து கொள்முதல் செய்யப்பட துரித சோதனைக் கருவிகளின் தரத்தை தெரிந்துகொண்டு திருப்பி அனுப்பியதை அறியாமல் அதே நிறுவனத்திடமிருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகளை இந்திய அரசு கொள்முதல் செய்தது ஏன் என்று தெரியவில்லை. இந்தக் கருவிகளை கொள்முதல் செய்வதற்கு இந்திய சுகாதாரத்துறை பொறுப்பா? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பொறுப்பா? என்பது புரியாத புதிராக உள்ளது.
ஆனால், பிரதமரின் அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள அதிகாரக்குவியலின் காரணமாக மத்திய சுகாதாரத்துறை எந்த முடிவுகளையும் தன்னிச்சையாக எடுக்க முடியவில்லை. சீன நாட்டிலுள்ள குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திடமிருந்து அதிக விலை கொடுத்து ரேபிட் டெஸ்ட் கருவிகள் மத்திய அரசு வாங்கியதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.
ஏனெனில் தரமும் துல்லியத்தன்மையும் மிக்க 75 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை சத்தீஸ்கர் மாநில அரசு இந்தியாவிலுள்ள தென்கொரியா நிறுவனத்திடமிருந்து ரூபாய் 337 விலைக்கு கொள்முதல் செய்துள்ளது. அந்தக் கருவிகளின் துல்லியத்தன்மையில் எந்த குறைபாடும் இல்லை.
ஆனால் இந்த நிறுவனத்திடம் கருவிகளை வாங்காமல் ரூபாய் 600 அதிக விலை கொடுத்து சீனாவில் உள்ள தனியார் நிறுவனத்திடம் தரம் குறைந்த ரேபிட் டெஸ்ட் கருவிகளை இந்திய அரசு கொள்முதல் செய்தது ஏன்? இதற்கான விளக்கத்தை நாட்டுமக்களுக்கு வழங்கவேண்டிய பெரும் பொறுப்பு பிரதமர் மோடிக்கும், சுகாதாரத்துறைக்கும் இருக்கிறது.
எனவே, கரோனா நோயாளிகளை தரம் குறைந்த துல்லியமாக சோதிக்க முடியாத துரித சோதனைக் கருவிகளைப் பயன்படுத்துவது குறித்து உரிய ஆலோசனைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மத்திய, மாநில அரசுகளுக்கு வழங்கவேண்டும். இந்த உபகரணங்கள் மூலம் நோயாளிகளை துல்லியமாக சோதனை செய்யமுடியுமா என்பதை ஆய்வு செய்ய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழுவை அமைத்து ஆய்வு செய்யவேண்டும்.
அத்தகைய ஆய்வுகளின் முடிவுகள் வரும் வரை ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலமாக நோயாளிகளைப் பரிசோதிப்பதை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்”.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago