கலாம் வழியில் இலவச ஆம்புலன்ஸ் சேவை; ஊரடங்கு காலத்திலும் அயராது உழைக்கும் புதுச்சேரி இளைஞர்; பொதுமக்கள் பாராட்டு

By அ.முன்னடியான்

கரோனா ஊரடங்கு காலத்திலும் கலாம் வழியில் இலவச ஆம்புலன்ஸ் சேவையாற்றி வரும் புதுச்சேரி இளைஞரின் அயராத பணியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

சட்டை பாக்கெட்டில் கலாம் படம், மொபைல் ரிங்டோனிலும் கலாமின் பெயர், மனதில் கலாமின் கொள்கைகள் என அவர் காட்டிய வழியில் வலம் வருகிறார் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் மணிகண்டன். இவரது சொந்த ஊர் புதுச்சேரி பத்துக்கண்ணு அருகே உள்ள ராமநாதபுரம் கிராமம்.

கடந்த 4 ஆண்டுகளாக கலாம் அறக்கட்டளையை நிறுவி நடத்தி வருகிறார். இதில் 50 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர் தனது சொந்த செலவில் தலா இரண்டு ஆம்புலன்ஸ், இறந்தவர்களை எடுத்துச் செல்லும் வாகனத்தை வாங்கி 'கலாம் அறக்கட்டளை' என்ற பெயரில் மக்களுக்கு இலவசமாக சேவையாற்றி வருகிறார். விபத்து, பிரசவம் என எதுவாக இருந்தாலும் தகவல் வந்த அடுத்த கனமே ஆம்புலன்ஸை அனுப்பி உதவி செய்கிறார்.

இந்த ஆம்புலன்ஸ் மற்றும் இறந்தவர்களை எடுத்துச் செல்லும் வாகன சேவைக்காக மாதந்தோறும் ரூ.45 ஆயிரம் வரை தனது சொந்த பணத்தில் செலவிடுகிறார். இந்நிலையில், கரோனா ஊரடங்கு காலத்திலும் வீட்டுக்குச் செல்லாமல் ஆம்புலன்ஸிலேயே தங்கியபடி அயராது சேவை புரிந்து வருகிறார். இவருடைய இந்த சேவையை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இது குறித்து மணிகண்டன் கூறும்போது, "பத்துக்கண்ணு பகுதியில் நடந்த ஒரு சாலை விபத்தில் எனது உடன்பிறந்த சகோதரர் உயிரிழந்தார். விபத்து நிகழ்ந்து பல மணிநேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் சகோதரன் எங்களை விட்டுப் பிரிய நேர்ந்தது.

பத்துக்கண்ணு சந்திப்பு பல ஊர்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. பல இடங்களில் வளைவான சாலைகள் என்பதால் அடிக்கடி விபத்துகள் நிகழும். ஆனால் தொடர்பு கொள்ளும் வகையில் அருகிலேயே ஆம்புலன்ஸ் சேவை கிடையாது. ஒருவேளை ஆம்புலன்ஸ் வர வேண்டும் என்றால், அது நகர பகுதியில் இருந்துதான் வர வேண்டும் என்ற நிலை உள்ளது.

எனவேதான் ஆம்புலன்ஸ் வாகனத்தை வாங்கி மக்களுக்கு இலவசமாக இயக்க வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி, பத்துக்கண்ணு, வில்லியனூர் ஆகிய பகுதிகளில் இரண்டு புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை வாங்கி மக்களுக்காக அர்ப்பணித்துள்ளேன். நானும் என்னுடன் 3 நபர்களும் ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறோம். இதுவரை பிரசவம் விபத்து என 650-க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனையில் காலத்தோடு சேர்த்திருக்கிறோம்.

குறிப்பாக, இவற்றில் 78 பேரை பிரசவத்துக்கு அழைத்துச் சென்றுள்ளோம். மேலும், அந்த இரண்டு பகுதிகளிலும் இறந்தவர்களை எடுத்துச் செல்ல, ஏழை எளிய மக்களுக்காக இறந்தவர்களை எடுத்துச் செல்லும் வண்டி வசதியும் ஏற்படுத்தியுள்ளேன். பத்துக்கண்ணு மற்றும் வில்லியனூர் சுற்றியுள்ள பகுதிகளில் விபத்து நிகழ்ந்து ஆம்புலன்ஸ் சேவைக்காக ஜிப்மர் மற்றும் 108-ஐ தொடர்பு கொண்டால் அவர்கள் என்னுடைய தொலைபேசி எண்ணை கொடுக்கின்றனர். அந்த அளவுக்கு மக்களுக்குத் துரித சேவை செய்கிறோம்.

தற்போது கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் அவசர தேவைக்கு மருத்துவமனை செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காமல் பலர் தவிக்கின்றனர். இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்ல முடியாமல் இருக்கின்றனர்.

ஆகவே, வீட்டுக்குக் கூட செல்லாமல் ஆம்புலன்ஸிலேயே தங்கிக்கொண்டு ஓட்டி வருகிறேன். என்னுடன் 3 நபர்கள் பணியாற்றி வருகின்றனர். இறந்தவர்களை எடுத்துச் செல்லும் வண்டி தேவையானவர்கள் கேட்கும்போது, அதனை ஒரு நபரை வைத்து ஓட்டுகிறேன். எனக்கு போலீஸார் உணவு வழங்குகின்றனர்.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 29 நாட்களில் மட்டும் 24 பேரை துரிதமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளேன். இதில் 6 பெண்களை பிரசவத்துக்காக அழைத்துச் சென்றுள்ளேன். இறந்தவர்களை எடுத்துச் செல்லும் வண்டியில் இதுவரை 13 பேரின் உடல்களை அடக்கம் செய்ய கொண்டு சென்றுள்ளோம்.

இதற்காக மாதம் ரூ.45 ஆயிரம் சொந்த பணம் செலவிடுகிறேன். ஊரடங்கு காலத்தில் தான் பலவிதமான விஷயங்களை தெரிந்து கொண்டுள்ளேன். மக்களுக்காக தொடர்ந்து சேவை புரிவது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என மணிகண்டன் தெரிவித்தார்.

படவிளக்கம்: ஆம்புலன்ஸ் ஓட்டும் மணிகண்டன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்