புதுச்சேரியில் ரேஷன் அரிசியை பேக்கிங் செய்ய ரூ.5 கோடி செலவு; எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி கண்டனம்

ரேஷன் கடைகளை தவிர்த்து மத்திய அரசின் அரிசியை ஏழை மக்களுக்குத் தர பேக்கிங் செய்ய ரூ.5 கோடி செலவிடப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ள புதுச்சேரி எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி, அத்தொகையை ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் தந்து, ரேஷனில் தராதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக, புதுச்சேரி எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி இன்று (ஏப்.23) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் முடங்கியிருப்பதால் பலரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் புதுச்சேரியிலுள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மீண்டும் உடனடியாக ரூ. 5 ஆயிரம் புதுச்சேரி அரசு வழங்க வேண்டும்.

மத்திய அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச அரிசி தர உத்தரவிட்டு 30 நாட்களாகியும் இன்னும் புதுச்சேரியில் தரப்படவில்லை. ஏழை மக்களுக்காக 9,425 மெட்ரிக் டன் அரிசி புதுச்சேரிக்கு தரப்பட்டும், இதுவரை 2,500 மெட்ரிக் டன் அரிசி மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள 7,500 மெட்ரிக் டன் அரிசியை பேரிடர் காலத்துக்குள் எவ்வாறு வழங்குவீர்கள் என்பதைத் தெளிவுப்படுத்த வேண்டும்.

இலவச அரிசியை ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வழங்கியிருந்தால் இந்த நடைமுறை சிக்கல் இருந்திருக்காது. அத்துடன் வீடுகளுக்குத் தரும் அரிசியை பேக்கிங் செய்ய ரூ.5 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தொகையை கொண்டு ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கியிருந்தால் அவர்கள் வாழ்த்தியிருப்பார்கள். அரிசியை மூட்டையில் பேக்கிங் செய்ய ரூ.5 கோடி செலவிடப்பட்டது கண்டிக்கத்தக்கது.

சிவப்பு ரேஷன் அட்டைக்கே இந்த நிலையென்றால் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு ரேஷன் அரிசி கிடைக்க எத்தனை மாதமாகும் என்று தெரியவில்லை. அவசர காலத்தில் கூட ரேஷன் கடைகளை பயன்படுத்தாமல் இருப்பது தவறானது. இதை அரசு உணர்ந்து உடனே ரேஷனை திறக்க வேண்டும்.

அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் 70 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். அவர்களுக்கு உதவித்தொகை தருவதுபோல் பதிவு செய்யாத1.5 லட்சம் பேருக்கும் உதவித்தொகை தருவது அவசியம்.

ஊரடங்கால் மக்கள் பணமின்றி தவிக்கிறார்கள். அதனால் 3 மாதங்களுக்கு மின்கட்டணத்தையும், குடிநீர் வரியையும் ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு அறிவித்ததுபோல் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் ரூ. 50 லட்சம் காப்பீடு வழங்க வேண்டும். குப்பை வாரும் துப்புரவு தொழிலாளர்களுக்கும் காப்பீடு திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE