கரோனாவை வேகமாக பரப்பும் புகையிலை பொருட்களை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, அன்புமணி ராமதாஸ் இன்று (ஏப்.23) வெளியிட்ட அறிக்கையில், "உலகம் முழுவதும் சுமார் 26 லட்சம் பேரை பாதித்து, 2 லட்சம் பேரை பலி கொண்டுள்ள கரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்கான போரில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை அத்தியாவசியப் பொருட்களாக அறிவித்து, அவற்றின் விற்பனையை அனுமதிக்க வேண்டும் என்று புகையிலை நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன என்பது தான் அந்த செய்தியாகும்.
மக்களைக் காக்க வேண்டும் என்ற முயற்சியில் உலகமே ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில், மக்களைக் கொல்லும் பொருட்களை மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியில் புகையிலை நிறுவனங்கள் ஈடுபட்டதை அம்பலப்படுத்தியுள்ள உலக சுகாதார நிறுவனம், புகையிலைப் பொருட்களை அத்தியாவசியப் பொருட்களாக அறிவிக்க முடியாது என்று கூறி அந்த முயற்சியை முறியடித்து விட்டதாகவும் கூறியுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் மக்கள் நலன் சார்ந்த இந்த துணிச்சலான நிலைப்பாடு பாராட்டத்தக்கது.
சாதாரண நாட்களிலேயே மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் புகையிலைப் பொருட்கள் கரோனா பரவல் காலத்தில் இன்னும் கூடுதலான தீமைகளை ஏற்படுத்தக்கூடும். இதை உணர்ந்து இந்தியாவில், ஊரடங்கு காலத்தில் புகையிலைப் பொருட்களை அத்தியாவசியப் பொருட்களாக அறிவிக்கக் கோரி புகையிலை நிறுவனங்களிடமிருந்து ஏதேனும் கோரிக்கைகள் வந்தால், அவற்றை ஆய்வுக்குக் கூட ஏற்காமல் மத்திய, மாநில அரசுகள் நிராகரிக்க வேண்டும்.
புகைப்பழக்கம் கரோனா பரவலைத் தீவிரப்படுத்தும் என்பதால், ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டாலும் கூட, அடுத்த சில மாதங்களுக்கு தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் புகையிலைப் பொருட்களின் விற்பனைக்கும், பயன்பாட்டுக்கும் தடை விதிக்க வேண்டும்.
புகைப்பிடிப்பதால் மனித உடலின் சுவாசக் கட்டமைப்பு பலவீனமடையும்; அத்தகைய நிலையில் உள்ளவர்களை கரோனா வைரஸ் மிகவும் எளிதாக தாக்கும் ஆபத்து உள்ளது. புகைப்பிடிப்பதற்காக கைகளை வாய்க்கு அருகில் கொண்டு சென்று இழுக்கும் போது, கைகளில் கரோனா வைரஸ் கிருமிகள் இருந்தால் அவை வாய் வழியாக நுரையீரலுக்கு சென்று முதலில் நோயையும், பின்னர் உயிரிழப்பையும் ஏற்படுத்தும்.
ஹுக்கா முறையில் புகை பிடிப்பவர்கள் ஒரே குழாயை பகிர்ந்து கொள்வார்கள் என்பதால், அவர்களில் ஒருவருக்குக் கரோனா இருந்தாலும் அது மற்றவர்கள் அனைவருக்கும் பரவி விடும் ஆபத்து உள்ளது.
அதுமட்டுமின்றி, புகைப்பிடிக்கும் வழக்கம் உள்ளோரை கரோனா வைரஸ் எளிதாக தாக்கும் என்பதுடன், அவர்களின் நுரையீரல் ஏற்கெனவே சேதமடைந்த நிலையில் இருக்கும் என்பதால், கரோனா தாக்கினால் விரைவாக உயிரிழப்பு ஏற்படும் என்றும், அதனால் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதற்கு இதுதான் மிகவும் சரியான நேரம் என்று பொதுமக்களை உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
உலக அளவில் வலிமை வாய்ந்த லாபியாக உருவெடுத்துள்ள புகையிலை நிறுவனங்களுக்கு சமூகப் பொறுப்பு என்பது அறவே இல்லை. கரோனா வைரஸ் நோய் அச்சுறுத்தலால் இப்போது உலகமே பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், புகையிலைப் பொருட்களை விற்க அனுமதி கோரியதுடன், அவற்றை வீடுகளுக்கே கொண்டு சென்று விநியோகிக்கவும் தயார் என்று புகையிலை நிறுவனங்கள் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் ஊரடங்கு ஆணை நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த ஒரு மாதத்தில் மது இல்லாததால் எவரும் பாதிக்கப்படவில்லை என்பது எந்தளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு சிகரெட் குடிக்காததால் எவரும் பாதிக்கப்படவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
கரோனாவை ஒழிப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பல பாதிப்புகள் ஏற்பட்டன என்றாலும் கூட புகையும், மதுவும் இல்லாமல் மக்களால் நிம்மதியாக வாழ முடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு புகை மற்றும் மதுப்பழக்கத்தை முற்றிலுமாக கைவிட பொதுமக்கள் முன்வர வேண்டும்.
அதேபோல், மது மற்றும் புகையிலை வணிகத்திற்கு முற்றிலுமாக தடை விதிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் மத்திய, மாநில அரசுகள் ஆராய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்" என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
4 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago