கரோனா நேரத்திலும் அரசியலா; முன்னுதாரணமாக இருக்க வேண்டிய தலைவருக்கு அழகா?-ஸ்டாலினுக்கு  டிடிவி தினகரன் கேள்வி

By செய்திப்பிரிவு

ஊரடங்கு அமலில் உள்ளபோது, அனைத்துக்கட்சி கூட்டம் போடுவது, நலத்திட்ட உதவிகள் வழங்குகிறேன் என்று ஒரு தலைவரே நேரில் போவது இதெல்லாம் என்ன நாடகம், மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அரசியல் கட்சித் தலைவர் செய்கிற வேலையா இவையெல்லாம் என ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

டிடிவி தினகரன் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில் ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்துள்ள அவர் திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று தொடங்கிய ஒன்றிணைவோம் வா நிகழ்வையும் விமர்சித்து இந்த நேரத்திலும் அரசியல் செய்வதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் எழுதியுள்ள கடிதம்:

"கொரோனா என்னும் பெருந்தொற்று நோயால் ஒட்டுமொத்த உலகமும் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், நமது தமிழகமும் அதில் சிக்கித் தவிப்பதை எண்ணி கனத்த இதயத்தோடு இக்கடிதத்தை எழுதுகிறேன்.

கொரோனா என்னும் இக்கொடிய நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், ஒருவரையொருவர் விலகியிருந்து சமூக விலகலைக் கடைபிடிப்பதே முதல் மருந்து என்னும் அறிவுரையை நீங்கள் ஒவ்வொருவரும் கடைபிடித்து வருகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

ஊரடங்கு முடியும் வரையிலும், இன்னும் சொல்லப்போனால் அதன் பிறகும் கூட சில காலத்திற்கு இந்த நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கொரோனா பேரிடரை நாம் எல்லோரும் இணைந்து எதிர்த்துப் போராடிவரும் இந்த நேரத்தில் அரசியல் பேசுவது பொருத்தமற்றது என்றாலும் இந்த இக்கட்டான நேரத்திலும் மாநில அரசு காட்டிவரும் அலட்சியத்தை, எதிர்க்கட்சி என்ற போர்வையில் சிலர் நிகழ்த்திவரும் அபத்தங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.

ஜனவரி 30ம் தேதி கேரள மாநிலத்தில் கால் பதித்த கொரோனா கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி மார்ச் இரண்டாவது, மூன்றாவது வாரங்களில் ஆபத்தான கட்டத்தைத் தொட்டபோது இங்கே சட்டமன்றம் நடந்துகொண்டிருந்தது.

இந்தச் சூழலில் சட்டமன்றம் கூடுவது நல்லதல்ல. இக்கூட்டத்தொடரை ஒத்திவையுங்கள் என்று கேட்டபோது, நாம் தொடர்ந்து சபையை நடத்தினால்தான் மக்களுக்கு ஒரு தைரியம் வரும், பீதி குறையும் என்று புத்திசாலித்தனமாக நினைத்து ஒரு விளக்கமளித்தார் பழனிசாமி.

சரி, சபையைத் தொடர்ந்து நடத்துகிறீர்கள். இங்கே வரும் உறுப்பினர்களுக்கு மாஸ்க் கொடுங்கள் என்று சில உறுப்பினர்கள் கேட்டபோது, எல்லோரும் மாஸ்க் அணிய வேண்டும் என்பதில்லை... கரோனா எல்லோரையும் தாக்காது. கடும் நோய்களால் பீடிக்கப்பட்டிருப்பவர்கள், எழுபது வயதுக்கு மேலானவர்களையே அது தாக்கும் என்று அபத்தமான ஒரு விளக்கத்தை முதலமைச்சரும் சுகாதாரத்துறை அமைச்சரும் சொன்னார்கள்.

அப்படி பேசிய அவர்களே சில வாரங்களில், எல்லோரும் முகக் கவசம் அணியுங்கள்; அணியாமல் வெளியே வந்தால் அபராதம் என்று அறிவித்த அவலத்தையும் நாம் கண்டோம்.

இதுபோன்ற பேரிடர் காலங்களில் அரசு அதிகாரிகளானாலும், அதிகாரத்தில் உள்ளவர்களானாலும் அவர்கள் செய்யும் பணிகள் அனைத்தும் ஓர் அரசினுடைய கூட்டுப் பொறுப்பு என்ற அடிப்படை யதார்த்தம் கூடப் புரியாமல், எல்லாவற்றையும் தானே செய்ததாக இருக்க வேண்டும், தனக்கே பெயர் கிடைக்க வேண்டும் என்ற சுயநலத்தோடு நடந்துகொண்ட முதல்வரையும் நாம் கண்டோம்.

அந்த அதிகாரத் தடுமாற்றத்தாலோ என்னவோ, ‘கரோனா என்பது பணக்காரர்களுக்கான வியாதி. ஏழைகளுக்கு அது வராது’ என்பதில் ஆரம்பித்து, ‘இன்னும் மூன்று நாட்களில் கரோனா நோய்த்தொற்றே இருக்காது’ என்ற அடிப்படையற்ற, ஆதாரமற்ற தகவல்களை மக்களுக்குத் தந்தார் பழனிசாமி. இந்த நாள்வரை நோய்த்தொற்று அதிகமாகி வருகிறதே ஒழிய குறையவில்லை.

சுகாதாரத்துறை அமைச்சர் மட்டுமே தொலைக்காட்சியில் தலை காட்டுகிறாரே என்று நினைத்தோ என்னவோ அவரை சுமார் 15 நாட்கள் தனிமைப்படுத்தி வைத்திருந்ததையும் இந்த தமிழ்நாடு பார்த்தது.

இவர்களின் இந்த அதிகார மற்றும் சுயவிளம்பர மோதலால், கரோனா சிகிச்சைப் பணியில் இருந்த மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கூட கிடைக்காத நிலையை ஏற்படுத்தியவர்கள்தான் இந்த ஆட்சியாளர்கள்.

விளைவு, பத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளிட்ட சுமார் 30 சுகாதாரப் பணியாளர்கள் இதுவரை கரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருகிறார்கள்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களை சொந்த உறவுகளே நெருங்கத் தயங்கும் நேரத்தில், அவர்களை நெருங்கி சிகிச்சையளிக்கும் உன்னதமான பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் மருத்துவர்கள். அவர்களில் ஒருவர் மரணமடைந்தபோது, அவரது உடலை தங்கள் பகுதியில் அடக்கம் செய்ய மக்கள் புரிதலின்றி எதிர்ப்பு தெரிவித்த உடனே, அரசு எச்சரிக்கை அடைந்து அதுபற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால் அதைச் செய்யத் தவறியதால், அடுத்தடுத்து இரண்டு மருத்துவர்களின் இறுதி அடக்கமும் வேதனை தரும் வகையில் நடந்தேறியதை நாம் கண்டோம்.

குறிப்பாக, இந்த பழனிசாமி அரசின் உச்சபட்ச அலட்சியத்தால் மருத்துவர் சைமனின் உடல் அடக்கத்தின்போது நடந்த நிகழ்வுகள் அகில இந்திய அளவில் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி, அதன் காரணமாக இந்திய மருத்துவர்கள் சங்கம் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் அளவுக்குப் போனதையும் நாம் கண்டோம்.

மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு உடைகள் இல்லை என்ற கூக்குரல் கண்டுகொள்ளப்படாத நிலையில், அவர்கள் அணிய வேண்டிய பாதுகாப்பு உடைகளை அணிந்துகொண்டு பத்திரப்பதிவு அலுவலக ஊழியர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுத்ததைக் கண்டு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.

பத்திரப்பதிவு மூலம் அரசுக்கு வருவாய் வரும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஊரடங்கை மே மாதம் 3 ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுவிட்டு, அதற்கு முன்பாக ஏப்ரல் 20 முதல் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று அறிவித்தது ஏற்புடையதா? பத்திர எழுத்தர்கள் அலுவலகம், டிடிபி (DTP) மற்றும் ஜெராக்ஸ் (XEROX) கடைகளை மூடிவிட்டு பத்திரப்பதிவை எப்படி நடத்த முடியும்? இப்படி செய்வது அறிவார்ந்த செயலா ?

தினசரி பதினைந்தாயிரம் பத்திரப்பதிவுகள் நடக்க வேண்டிய நிலையில் இப்போது ஒரு நாளுக்கு நூறு பதிவுகள் கூட நடப்பதில்லை. ஊரடங்கு அமலில் உள்ளபோது எப்படி நடக்கும்? இது தெரிந்தும் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறக்க வேண்டிய மர்மம் என்ன? என்றெல்லாம் மக்கள் மனதில் எழும் கேள்விகள் புறந்தள்ள முடியாதவை.

அரசியல் நடத்தாதீர்கள் என்று மற்ற கட்சிகளைப் பார்த்து சொல்லிவிட்டு, 'அம்மா உணவகங்களுக்கு நிதி தருகிறோம். நாங்களே நடத்துகிறோம்' என்றெல்லாம் ஆளும்கட்சியினர் செய்துவரும் அதுமீறல்களையும் நீங்கள் அறிவீர்கள்.

இதற்கு சற்றும் சளைக்காமல் எதிர்க்கட்சி தரப்பில், எரிகிற வீட்டில் எதைப்பிடுங்கினால் ஆதாயம் என்று பார்ப்பது போல, ஊரடங்கின் காரணமாக அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் இந்த நேரத்தில், ‘ஒன்றிணைவோம் வா’ என்று சொல்லி அழைப்பு விடுக்கும் அபத்தத்தை என்னவென்று சொல்வது?

ஊரடங்கு அமலில் உள்ளபோது, அனைத்துக்கட்சி கூட்டம் போடுவது, நலத்திட்ட உதவிகள் வழங்குகிறேன் என்று ஒரு தலைவரே நேரில் போவது இதெல்லாம் என்ன நாடகம்? மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அரசியல் கட்சித் தலைவர் செய்கிற வேலையா இவையெல்லாம்?

திருமணவீட்டில் மணமகனாக இருக்க வேண்டும்; துக்க வீட்டில் பிணமாக இருக்க வேண்டும் என்பது இவர்களின் இயல்பாக இருக்கலாம். ஆனால் இந்தப் பேரிடர் காலத்திலாவது அந்த குணத்தை கொஞ்சம் தள்ளிவைக்கக் கூடாதா என்று மக்கள் மத்தியில் எழுகிற கேள்வியிலும் நியாயம் இல்லாமல் இல்லை.

இந்த அபத்தங்கள், அவலங்கள். எதைப்பற்றியும் கவலைப்படாமல், கழகத்தின் சார்பில் விடுக்கப்பட்ட என்னுடைய அன்பு வேண்டுகோளை ஏற்று, ஊரடங்கின் முதற்கட்டத்தில் மாநிலம் முழுக்க உங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் செய்தீர்கள்.

இப்போதும் ஊரடங்கு தொடர்கிற சூழலில், உங்களின் உதவிகளும் தொடரட்டும். ஒவ்வொரு தொண்டரும் குறைந்தது ஓர் ஏழை குடும்பத்தையாவது அடையாளம் கண்டு அவர்களும் இந்தத் துயரிலிருந்து மீண்டுவர கைகொடுக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

தனித்திருப்போம்... விழித்திருப்போம்... ஆரோக்கியமான எதிர்காலத்தைப் படைக்க துணை நிற்போம். தகவல் தொடர்பு மூலம் எப்போதும் உங்களுடன் நான் இணைந்திருப்பேன்".

இவ்வாறு டிடிவி தினகரன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்