மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு பாதுகாப்புக் கவசங்கள் வழங்க வேண்டும், கரோனா தடுப்புப் பணியின்போது அவர்கள் இறந்தால் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், அவர்களைப் பாதுகாக்க மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 22-ம் தேதி, மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் நாடு தழுவிய முறையில் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி நேற்று இரவு 9 மணி அளவில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பணியில் இருந்த மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் மெழுகுவர்த்தி ஏந்தினார்கள். மதுரை, சிவகங்கை, தேனி போன்ற மருத்துவக் கல்லூரிகளிலும் இந்நிகழ்வு நடந்தது. அதேபோல, மற்ற மருத்துவப் பணியாளர்கள் வீட்டில் இருந்தபடியே மெழுகுவர்த்தி ஏந்தினர்.
மதுரை நீதிநாயகம் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அரங்கத்தில் உள்ள நீதிநாயகம் பி.என்.பகவதி சிலை முன்பு இதே கோரிக்கைகளை வலியுறுத்தியும், கரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்கள் சைமன், லட்சுமி நாராயண ரெட்டி, ஜெயபாலன் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் ‘சோகோ’ அறக்கட்டளை அறங்காவலர் மகபூப் பாட்சா தனது குடும்பத்தினருடன் மெழுகுவர்த்தி ஏந்தினார்.
"மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று, கரோனாவால் இறக்க நேரிடும் மருத்துவ பணியாளர்களுக்கு 50 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. மத்திய அரசும் சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறதே இவை உங்களுக்குத் திருப்தி தருகிறதா?" என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்திடம் கேட்டோம்.
"மத்திய அரசு அறிவித்துள்ள தொற்று நோய்ச் சட்டத்தில் அவசர சட்டத் திருத்தம், தொற்று நோய்க் காலங்களில், தொற்று நோய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு மட்டுமே பொருந்தும். எனவே மருத்துவர்களையும், மருத்துவப் பணியாளர்களையும், மருத்துவமனைகளையும் பாதுகாத்திட மத்திய அரசு, ஏற்கெனவே ஏற்றுக் கொண்டது போல் தனிச் சட்டம் கொண்டு வரவேண்டும். தமிழக முதல்வர் 22-ம் தேதியன்று அறிவித்துள்ள மருத்துவ பணியாளர்களுக்கான அறிவிப்புகளை வரவேற்கிறோம். இருப்பினும் இன்னும் சில கோரிக்கைகளை வலியுறுத்துகிறோம்.
மருத்துவர்கள், மருத்துவத்துறைப் பணியாளர்களுக்குத் தரமான, பாதுக்காப்புக் கவச உடைகள், முகக் கவசங்கள், தங்கும் வசதிகள் உணவு முதலியவற்றை வழங்க வேண்டும். கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்கள் இறந்தால், அவர்களது குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு என்பதை, ரூ.1 கோடியாக உயர்த்த வேண்டும். இந்த இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசுத்துறைகளில் பணிபுரியும் தற்காலிக, ஒப்பந்த, அவுட்சோர்ஸிங் பணியாளர்களின் இறப்புக்கும் வழங்கிட வேண்டும். அதேபோல இழப்பீட்டுத் தொகையை தனியார் மருத்துவர்களுக்கும், தனியார் மருத்துவமனை ஊழியர்கள் இறப்புக்கும் வழங்கிட வேண்டும்.
இந்த இழப்பீட்டைப் பெற கரோனாவால் இறப்பு என்பதற்குப் பதில், கரோனா தடுப்புப் பணியில் இறந்தால் என மாற்ற வேண்டும். ஏனெனில், கரோனா நோய்த் தொற்றால் இறப்பு நிகழ்ந்தது என்பதை சில நேரங்களில் நிரூபணம் செய்ய முடியாத நிலை ஏற்படலாம்.
தமிழக அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட நான்கு அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தமிழக மருத்துவத் துறையில் பணிபுரியும் அனைத்து தற்காலிக, ஒப்பந்த மற்றும் அவுட்சோர்ஸிங் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" என்றார் அவர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
59 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago