புதுச்சேரியில் துப்புரவுப் பணியாளர், ஏழை எளிய மக்களுக்கு முகக் கவசம் இலவசம்: கூலி வேலைக்குச் செல்லும் பெண்களின் முயற்சிக்கு வரவேற்பு

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் துப்புரவுப் பணியாளர், காவலர், சுகாதாரப் பணியாளர், ஏழை எளியவர்களுக்காக முகக்கவசம் தயாரித்து கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் இலவசமாக வழங்கி வருவது பலரது வரவேற்பைப் பெற்றுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க பலரும் பயன்படுத்த வேண்டிய பொருளாக முகக்கவசம் மாறியுள்ளது. வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் முகக்கவசம் அணிந்துகொள்ள புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது.

மீறி முகக்கவசம் அணியாமல் வெளியே வருவோரிடம் காவல்துறையினர் ரூ.100 அபராதம் வசூலித்து வருகின்றனர். இதனால் மக்கள் முகக்கவசம் அணியத் தொடங்கியுள்ளனர்.

தேவையைக் கருத்தில்கொண்டு அவற்றின் விலையை உற்பத்தியாளர்கள் உயர்த்தியுள்ளனர். இந்நிலையில், புதுச்சேரி பூமியான்பேட்டை பகுதியைச் சேர்ந்த கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் ஒன்று சேர்ந்து முகக்கவசம் தயாரித்து, துப்புரவுப் பணியாளர், காவலர், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கும், ஏழை, ஏளிய மக்களுக்கும் இலவசமாக முகக்கவசம் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் இந்த முயற்சி பலரது வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து முகக்கவசம் தயாரிக்கும் பெண்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் ரத்னா என்பவர் கூறும்போது, "கரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் உள்ளது. வைரஸ் தொற்றால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இதனால் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். கரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தலை நாங்களும் உணர்ந்துள்ளோம். எனவே கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள என்ன செய்யலாம் என்று கேட்டபோது எங்கள் பகுதி பெண்கள் சில வழிமுறைகளைத் தெரிவித்தனர்.

முதலில் மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினோம். அதன்பிறகு புதுச்சேரி உழவர்கரை நகராட்சியில் இருந்து கிருமி நாசினி வாங்கி வந்து எங்கள் பகுதி முழுவதும் தெளித்தோம்.

இச்சூழலில் முகக்கவசம் அணிவது கட்டாயம், மீறினால் அபராதம் வசூலிக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

இதனால் அதன் அவசியத்தை உணர்ந்த நாங்கள், முகக்கவசம் தயாரிக்க முன்வந்தோம். இங்குள்ள பெண்கள் அனைவரும் தினமும் கூலி வேலைக்குச் செல்பவர்கள். வேலைக்குச் சென்றால்தான் சாப்பிட முடியும். இருந்தாலும் மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், துணியில் முகக்கவசம் செய்து இலவசமாக வழங்க முடிவு செய்தோம்.

இதற்காக செவிலியர் மாணவி, மாற்றுத்திறனாளி பெண் உட்பட 11 பேர் ஒன்றிணைந்து எங்களுடைய சொந்தச் செலவில் காட்டன் துணி வாங்கி வந்து, வீடுகளில் தையல் தொழிலில் ஈடுபடும் பெண்களிடம் இருந்து தையல் இயந்திரத்தைக் கேட்டுப் பெற்று ஒரே இடத்தில் வைத்து முகக்கவசம் தயாரித்து வருகிறோம்.

நாங்கள் தயாரிக்கும் முகக் கவசத்தை துப்புரவுப் பணியாளர், காவலர், சுகாதாரக் கடைநிலை ஊழியர், சாலையோரம் வசிப்போர், ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம். இதுவரை 1,500 முகக்கவசம் வழங்கியுள்ளோம். இது எங்களுக்கு மன நிறைவாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து செய்வோம்" என்றார்.

செவிலியர் மாணவி சண்முகப்பிரியா கூறும்போது, "மருத்துவத்துறையில் இருப்பதால் முகக்கவசத்தின் அவசியம் குறித்து நான் அறிந்துள்ளேன். மருத்துவமனைக்குப் பலர் முகக்கவசம் அணியாமலேயே வருகின்றனர். அதனை வாங்கவும் பலர் கஷ்டப்படுகின்றனர்.

ஆகவே, எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முகக்கவசம் தயாரித்து இல்லாதோருக்கு இலவசமாக வழங்கி வருகிறோம். யாரும் முகக்கவசம் இல்லாமல் வெளியே செல்லக்கூடாது என்பதுதான் எங்களின் எண்ணம்" என சண்முகப்பிரியா தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்