சிங்கப்பூர் நிலை தமிழகத்துக்கு வந்துவிடக்கூடாது என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று (ஏப்.22) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் தமிழகத்தின் நிலைமையை துல்லியமாக வர்ணிக்க வேண்டுமென்றால், 'சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது' என்று தான் கூற வேண்டும். கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து இரு நாட்களுக்குக் குறைந்தால், நான்கு நாட்களுக்கு அதிகரிக்கிறது. கரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வராதது இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்கிறது.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்தாலும், கடந்த மாத இறுதியில் தீவிரமாக பரவத் தொடங்கியது. மார்ச் 31 ஆம் தேதி முதல் ஏப்ரல் 13 வரையிலான இரு வாரங்களில் ஒரே ஒரு நாளைத் தவிர மீதமுள்ள 13 நாட்களும் கரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50-க்கும் கூடுதலாகவே இருந்தது.
அந்த கால கட்டத்தில் இரு நாட்களில் பாதிப்புகளின் எண்ணிக்கை நூறைக் கடந்தது. மார்ச் 14, 15, 16 ஆகிய தேதிகளில் இந்த எண்ணிக்கை 50-க்கும் கீழ் குறைந்தது ஓரளவு நிம்மதியளித்தாலும் கூட, அதற்கு பிறகு இந்த எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதற்கு காரணம் தமிழக மக்களின் அலட்சியம், அலட்சியம், அலட்சியம் தான்.
ஊரடங்கு என்றால் என்ன? என்பதன் பொருளை நமது மக்கள் உணராமல் ஊர் சுற்றி வருவது தான் நோய்பரவலுக்கு முக்கியக் காரணம் ஆகும். ஊரடங்கு என்பது மக்கள் வெளியில் வருவதைத் தடுக்க செய்யப்படும் ஏற்பாடு ஆகும். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக ஓரிரு மணிநேரம் மட்டுமே பொதுமக்கள் வெளியில் வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
"ஊரடங்கை மக்கள் கடுமையாக கடைபிடிக்க வேண்டும்; வீட்டை விட்டு ஓர் அடி வெளியில் எடுத்து வைத்தால் கூட, கரோனா வைரஸை வீட்டுக்குள் அழைத்து வந்து விடுவீர்கள்" என்று பிரதமரே எச்சரித்திருந்தார். அதை மதிப்பதாக இருந்தால், அரசே கெடுபிடி காட்டத் தவறினாலும் கூட, மக்கள் சுயக்கட்டுப்பாடு விதித்துக் கொண்டு வீடுகளில் அடங்கியிருப்பது தான் பொறுப்புணர்வின் அடையாளமாக இருந்திருக்கும்.
ஆனால், அதற்கு மாறாக அரசு கெடுபிடி காட்டினாலும், காவலர்களை ஏமாற்றி மக்கள் ஊர் சுற்றியதன் விளைவு தான் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 23 மாவட்டங்கள் கரோனா பாதிப்பு அதிகமுள்ள சிவப்பு ஹாட்ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் ஊரடங்கு மீறல் மிகவும் அதிகமாக உள்ளது. முதற்கட்ட ஊரடங்கில் ஓரளவாவது அடங்கியிருந்த மக்கள், இரண்டாம் கட்ட ஊரடங்கில் பொறுப்பே இல்லாமல் வலம் வருகின்றனர். முதல்கட்ட ஊரடங்கில் இருசக்கர ஊர்திகளில் இளைஞர்கள் வலம் வந்தனர் என்றால், இப்போது சாலைகளில் கட்டுப்பாடின்றி கார்கள் வலம் வருகின்றன.
படித்தவர்கள், பணக்காரர்கள், உயர்பதவிகளில் இருப்பவர்கள் நிறைந்த நகரம் என்று போற்றப்படும் சென்னை இந்த அளவுக்கு பொறுப்பின்றி செயல்படுவது வேதனையளிக்கிறது. அவர்களின் பொறுப்பற்ற செயல்களால் சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
கடந்த 14 ஆம் தேதி தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,204; அவர்களில் சென்னைவாசிகள் 211. நேற்றைய நிலவரப்படி இந்த எண்ணிக்கை முறையே 1,596, 358 ஆகும். அதாவது, கடந்த ஒரு வாரத்தில் புதிதாக ஏற்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை 393. அவற்றில் சுமார் 40% சென்னையில் ஏற்பட்டவையாகும்.
தமிழ்நாட்டில் ஊரடங்கால் கரோனா வைரஸ் பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது உண்மை தான். ஆனால், கரோனாவை வெற்றி கொள்ள நாம் பயணிக்க வேண்டிய தொலைவு மிக அதிகமாகும். இப்போதே நாம் வெற்றி பெற்று விட்டதாக நினைத்து சுதந்திரத்தை அனுபவிக்க நினைத்தால், இன்னும் அதிக காலம் ஊரடங்கு சிறையை அனுபவிக்க நேரிடும். அதற்கு சிறந்த உதாரணம் சிங்கப்பூர் ஆகும்.
சிங்கப்பூரில் ஜனவரி 23 ஆம் தேதி முதல் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்துதல், சோதித்தல் என அதிரடியாக சிங்கப்பூர் அரசு நடவடிக்கை எடுத்தது. அதனால் பிப்ரவரி இறுதி வரை மொத்தமே 98 பேர் தான் பாதிக்கப்பட்டிருந்தனர்; அவர்களிலும் 72 பேர் குணப்படுத்தப்பட்டிருந்தனர்.
அதுமட்டுமின்றி ஊரடங்கை நடைமுறைப்படுத்தாமலேயே இதை சிங்கப்பூர் சாதித்து இருந்தது. அதனால் கரோனாவை ஒழிப்பதில் சிங்கப்பூர் முன்மாதிரி நாடு என உலகமே கொண்டாடியது. ஆனால், அங்கு ஊரடங்கு இல்லாததால் இரண்டாம் சுற்று கரோனா பரவத் தொடங்கியது.
தொடக்கத்தில் தினமும் இரட்டை இலக்கத்தில் புதிய தொற்றுகள் ஏற்பட்ட நிலையில், ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் மூன்று இலக்கத்தில் புதிய தொற்றுகள் ஏற்பட்டன. அதன்பின்னர் விழித்துக்கொண்ட சிங்கப்பூர் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் 4 வாரங்களுக்கான ஊரடங்கை அறிவித்தது. ஆனால், அதற்குள் நிலைமை கை மீறி சென்று விட்டது.
நேற்றைய நிலையில் சிங்கப்பூரில் 9,125 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் 6 ஆயிரம் பேரும், கடந்த 3 நாட்களில் 3 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை விட குறைவான மக்கள்தொகை கொண்ட சிங்கப்பூரில் இந்த அளவுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டிருப்பது பெரும் பின்னடைவாகும்.
தென்கிழக்கு ஆசியாவின் சிறிய நாடான சிங்கப்பூரில் தான், அந்தப் பகுதியில் மிக அதிக தொற்று ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இதற்கு காரணம் தொடக்கக் காலத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்படாததும், விடுமுறை நாட்களில் வெளிநாட்டு தொழிலாளர்கள் ஒன்று கூடி மகிழ்ந்ததை தடுக்காததும் தான் என்று அந்நாட்டின் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
இப்போது நிலைமையைக் கட்டுப்படுத்த ஜூன் 1 ஆம் தேதி வரை ஊரடங்கை சிங்கப்பூர் நீட்டித்திருக்கிறது. ஊரடங்கை தீவிரமாக கடைபிடிக்காவிட்டால் தமிழகத்திலும் அதே நிலையே ஏற்படும்.
மே 3 ஆம் தேதி ஊரடங்கு முடிவதற்குள் தமிழகத்தில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைக்கப்பட வேண்டும். அவ்வாறு கட்டுப்படுத்தப்படாவிட்டால் ஊரடங்கை மேலும் நீட்டிப்பதைத் தவிர வேறு வழியில்லை. புதிய ஊரடங்கு காலம் ராணுவக் காவலுக்கு இணையான கடுமையுடன் இருக்கக்கூடும். கரோனா பாதிப்புகளை குறைக்க அரசு அதன் கடமையை சரியாக செய்து வரும் நிலையில், மக்கள் தங்களின் கடமையை செய்யாததே நிலைமை மோசமடைந்ததற்கு காரணம் ஆகும்.
இனியும் அலட்சியம் காட்டாமல் ஊரடங்கை தீவிரமாக கடைபிடித்து, கரோனாவை விரட்ட தமிழக மக்கள் ஒத்துழைக்க வேண்டும். அதேபோல், கரோனா பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கை நடைமுறைப்படுத்தும் பணியில் இதுவரை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறையினர், இனிவரும் காலங்களில் இன்னும் கூடுதலாக இரட்டிப்பு கண்டிப்புடன் செயல்பட வேண்டும்; அதன் மூலம் தான் கரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த முடியும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
59 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago