கரோனா நிவாரணம்: கட்டிடத் தொழிலாளர்களுக்கு ரூ.2,000; அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1,000; புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு 

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் கட்டிடத் தொழிலாளர்களுக்கு ரூ.2,000, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1,000 கரோனா நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (ஏப் 21) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"கரோனா பாதிப்புக்குள்ளான 3 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுடன் தொடர்புடைய 42 பேரைப் பரிசோதித்ததில், அவர்களுக்கு கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.

கரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவைக் கடுமையாக அமல்படுத்தி வருகிறோம். இந்நிலையில், தொழிற்சாலைகளை அவசர அவசரமாகத் திறக்க வேண்டிய அவசியமில்லை. சுகாதார உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏற்கெனவே இயங்கி வருகின்றன.

மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, விவசாயத் தொழிலுக்கான தளர்வு அளிக்கப்பட்டு, விவசாயம் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலைத்திட்டம் நேற்று (ஏப் 20) முதல் தொடங்கப்பட்டு, மாநிலத்தில் 10 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். ஏற்கெனவே புதுச்சேரி அரசு அறிவித்தபடி, அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2,000 வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டத்தின்கீழ் அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரியில் 10 தொகுதிகளிலும், காரைக்காலில் 2 தொகுதிகளிலும் அரிசி போடப்படுகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கு விரைவில் அரிசி வழங்கப்படும். மஞ்சள் அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்குவதற்கான கோப்பை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளோம். ஒப்புதல் கிடைத்ததும், மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் அரிசி வழங்கப்படும்.

கரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா ரூ.1,000 வழங்கப்படும். இதன் மூலம் 28 ஆயிரத்து 160 தொழிலாளர்கள் பலனடைவர். இதேபோல, கட்டிடத் தொழிலாளர்களின் வைப்பு நிதியில் இருந்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2,000 வழங்கப்படும். இதன் மூலம் 42 ஆயிரத்து 357 கட்டுமானத் தொழிலாளர்கள் பலனடைவர்.

இந்தத் தொகை நாளை (ஏப் 22) முதல் அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். மத்திய அரசு, புதுச்சேரி மாநிலத்துக்கான கரோனா நிவாரண நிதியை வழங்காவிட்டாலும், மாநிலத்துக்கான நிதி ஆதாரத்தைக் கொடுக்கவில்லை என்றாலும், மாநில அரசு மக்களுக்கு உதவிகளைச் செய்து வருகிறது. இது கடுமையான நிதி நெருக்கடி காலம்.

மார்ச் மாதத்திலிருந்து அரசின் வரி வருவாய் குறைந்துவிட்டது. புதுச்சேரி மாநிலத்தின் வருமானமே வணிக வரி மற்றும் கலால் வரிதான். கரோனா ஊரடங்கால் மதுக்கடைகள் உள்பட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இதனால் மாநில வருமானம் வெகுவாகக் குறைந்துவிட்டது. பல மாநிலங்களில் அரசு ஊழியர்களின் சம்பளத்தைப் பாதியாகக் கொடுத்துள்ள இக்காலத்தில், மார்ச் மாதத்துக்கான ஊதியத்தை புதுச்சேரி அரசு முழுமையாக வழங்கியுள்ளது. மாநில நிதியாதாரத்தை உருவாக்கி, நம்முடைய மாநிலத்தில் மக்களுக்கு பட்டினியால் வாடக்கூடாது என்பதற்காக பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

இந்நேரத்தில்தான் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உதவ வேண்டும். மத்திய அரசிடம் மிகப்பெரிய அளவில் அரிசி, கோதுமை இருப்பில் உள்ளது. ரிசர்வ் வங்கியில் ரூ.10 லட்சம் கோடி உபரியாக உள்ளது. அந்நிய முதலீடுகள் இருக்கின்றன. அந்நிய செலவாணி கையிருப்பு 730 பில்லியன் டாலர் இருக்கிறது. இவ்வளவு இருக்கும் நிலையில் மத்திய அரசு, ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு தொழில்கள் நடைபெறவில்லை. தொழிலாளர்களுக்கு வேலையில்லை. அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மத்திய அரசு அரிசி கொடுத்தால் மட்டும் போதாது. நிதியுதவி வழங்க வேண்டும். இதே போல, தொழில் நிறுவனங்களுக்கும் உதவிட வேண்டும்.

புதுச்சேரியில் சுற்றுலா முழுமையாக முடங்கிவிட்டது. புதுச்சேயின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதைச் சரிசெய்ய பல மாதங்களாகும். இதற்கு மத்திய அரசு உதவினால்தான் உண்டு. இதைத் தவிர புதுச்சேரி மாநிலத்துக்கு வேறு எந்த நிதி வசதியும் கிடையாது. பிரதமரிடம், நான் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேசியபோது, உரிய உதவி செய்வதாகத் தெரிவித்தார். அவர் உதவுவார் என்ற நம்பிக்கையுள்ளது.

தொழிற்சாலைகளைத் திறக்க பல்வேறு கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுவரை தொழிற்சாலைகளைத் திறக்க 250 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதுவரை விதிமுறைகளைக் கடைப்பிடித்த ஆதாரங்களைக் காட்டினால்தான் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்படும். ஒரு தொழிற்சாலைக்குக் கூட இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்ட புதுச்சேரி முதல்வர், அமைச்சர்களுக்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதுச்சேரியில் கரோனா ஊரடங்கு உத்தரவுக்கு 90 சதவீத மக்கள் ஒத்துழைக்கின்றனர். மீதமுள்ள 10 சதவீத மக்களும் முழுமையாக ஒத்துழைத்தால்தான், புதுச்சேரியில் கரோனா தொற்று ஏற்படாமல் காக்க முடியும். கட்டுக்குள் வைத்துள்ள இந்த நிலையைத் தளர்த்த முடியாது.

அரசுக்கு வருமானம் எப்போது வேண்டுமானாலும் வரும். ஆனால், புதுச்சேரி மக்களுடைய உயிர்தான் முக்கியம். அதனால் பொருளாதாரத்தில் எத்தகைய இழப்பு ஏற்பட்டாலும், நெருக்கடி வந்தாலும் அதனைச் சந்தித்து, புதுச்சேரி மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுப்போம்".

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்