28 நாட்கள் வெற்றிகரமாக கடந்துவிட்டோம்: மதுவிலக்கை தொடர  மன்றாடிக்கேட்டுக் கொள்கிறேன் : கே.எஸ் அழகிரி வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

28 நாட்கள் கள்ளச்சாராயம், மது இல்லாமல் வெற்றிகரமாக கடந்துவிட்டோம், இதையே வாய்ப்பாக வைத்து, வாராது வந்த மாமணிபோல மக்கள் ஊரடங்கை பயன்படுத்தி மதுவிலக்கை உடனடியாக கொண்டு வரவேண்டும் என கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று விடுத்துள்ள அறிக்கை:

கடந்த 28 நாட்களாக நடைமுறையில் உள்ள மக்கள் ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு சமூகத்தில் ஆரோக்கியமான ஒரு மாற்றம் தென்படுவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 90 சதவீதம் கள்ளச்சாராயம் தடுக்கப்பட்டு விட்டதாக காவல்துறை உயர் அதிகாரி கூறியிருப்பது கூடுதல் மனநிறைவை தருகிறது.

பல ஆண்டுகளாக தமிழ் சமுதாயத்தை கவ்விக்கொண்டிருக்கும் மது அரக்கனிடமிருந்து விடுபடுவதற்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கரோனா என்கிற கொடிய தொற்றுநோயை ஒழிக்க நாம் நடத்திக்கொண்டிருக்கிற கடுமையான போரைப்போல, மது அரக்கனை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் இல்லை.

தமிழக முதல்வர் ஒரு துளி மையை செலவிட்டு ஆணையில் கையொப்பமிட்டாலே தமிழகத்தில் உள்ள 5300 டாஸ்மாக் கடைகளை மே மூன்றாம் தேதியிலிருந்து மூடிவிடலாம். தமிழக மக்கள் மீது ஆட்சியாளர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், வாராது வந்த மாமணிபோல மக்கள் ஊரடங்கை பயன்படுத்தி மதுவிலக்கை உடனடியாக கொண்டுவரவேண்டும்.

குடிப்பழக்கத்தால் வாழ்க்கை இழந்து கண்ணீரும் கம்பளையுமாக நிற்கிற லட்சக்கணக்கான அபலைப்பெண்கள், விதவைகள் சார்பாக தமிழக முதல்வரை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நடத்துவதற்கு என்ன காரணம்? அதனால் மக்கள் பயனடைகிறார்களா? பாதிக்கப்படுகிறார்களா?

குடிப்பழக்கத்தால் மக்கள் மனித வளத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை முற்றிலும் அறிந்த ஆட்சியாளர்கள் டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து நடத்துவது ஏன்? டாஸ்மாக் கடைகள் மூலம் ஒரு நாளைக்கு ரூபாய் 100 கோடி, ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக அரசின் கஜானாவில் நிரம்பி, நிதி ஆதாரத்திற்கு அதிக வாய்ப்பாக இருக்கிற ஒரே காரணத்திற்காக தான் அதிமுக ஆட்சியாளர்கள் டாஸ்மாக் கடைகளை நாடுமுழுவதும் நடத்தி வருகிறார்கள்.

ஒரு பக்கம் டாஸ்மாக் கடைகளை நடத்தி மக்கள் வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னொருபக்கம் இலவச திட்டங்களை நிறைவேற்றி மக்களின் வாக்குகளை தேர்தலில் பறிப்பதற்கு பயன்படுத்துகிறார்கள். இத்தகைய இரட்டைவேட ஆட்சியை நடத்துபவர்கள் மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களா? மக்கள் விரோதிகளா? என அறிய தமிழக மக்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது .

டாஸ்மாக் கடைகளை மூடினால், தமிழ் சமுதாயத்தின் மனித வளம் ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்பட்டு வாழ்க்கையில் முன்னேறுவதற்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என்பதை தமிழக முதலமைச்சருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கடந்த 40 ஆண்டுகளாக மது குடிப்பழக்கத்திற்கு ஏறத்தாழ ஒன்றரைக்கோடி பேர் ஆளாகியுள்ளனர் என்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது.

இதன்மூலம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதும் இவர்கள் தான் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். தற்போது மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கிற நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மனரீதியாக பாதிப்பிற்கு உள்ளாகிற நிலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

மன அழுத்தம், மன ரீதியாக - உடல்ரீதியாக சோர்வு, மன விரக்தி, அலைபாயும் எண்ணங்கள் - சிந்தனைகள், எரிச்சல், தூக்கமின்மை, ஆகியவற்றால் அவதிப்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. இவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தருவதற்கும், உளவியல் ஆலோசனை வழங்குவதற்கும் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மனநல மையங்களை உடனடியாக தொடங்கவேண்டும்.

இந்த மனநல மையங்களில் இவர்களுக்கு உரிய சிகிச்சையும், ஆலோசனையும் வழங்கினால் இவர்களை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்க முடியும். இதன்மூலம் இவர்களுக்கு மறுவாழ்வு அளித்து சமூகத்தில் செயல்படுகிற மனிதர்களாக மாற்றுவதற்கு மிகப்பெரிய வாய்ப்பு தமிழக அரசுக்கு கிடைத்திருக்கிறது. எத்தனை இலவச திட்டங்களோ, சமூக நல திட்டங்களோ நிறைவேற்றினாலும் அதன் மூலம் முழுமையாக பயன்பெறாமல் தடுப்பது பெரும்பாலான மக்களின் குடிப்பழக்கம் தான்.

எனவே சமூகத்தில் புற்று நோய்போல பரவிவரும் மதுப்பழக்கத்தில் இருந்து மது இல்லாத தமிழகம் என்ற லட்சியத்தை அடைய அனைத்து அரசியல் கட்சிகளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஓரணியில் திரண்டு குரல் கொடுக்க வேண்டும் என அன்போடு வேண்டுகிறேன்”.

இவ்வாறு அழகிரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

22 hours ago

மேலும்