மதியம் 1 மணி. ஊரே அடங்கிக்கிடக்கிறது. கோவை காந்திபுரம் சிக்னலின் அகண்ட சாலையில் பத்துப் பதினைந்து ஓவியர்கள் பெயின்ட், பிரஷ்ஷூடன் களமிறங்குகிறார்கள். அவர்களுக்கு உதவியாய் மாநகரப் போலீஸ். சாலையின் மீது தூரிகைகளின் நர்த்தனம் தொடங்குகிறது.
இரவு ஏழு மணிக்கு ஓவியப் பணி பூர்த்தியாகிறது. கை, கால் முளைத்த கரோனா வைரஸ் ராட்சத சைஸில் வண்ணக் கலவையாய் மிரட்டுகிறது. உடன், ‘தனித்திரு, விழித்திரு, வீட்டிலிரு’, ‘கரோனாவை ஒழிப்போம், கோவை மாநகரக் காவல் துறை, கோவை மாவட்ட ஓவியர் சங்கம்’ எனும் வாசகங்களும் எழுதப்பட்டிருக்கின்றன. அதைப் பார்ப்பவர்களின் கண்கள் ஆச்சரியத்தில் விரிகின்றன.
அடுத்ததாக, ஜி.பி. 100 அடி சிக்னல், லட்சுமி மில்ஸ் ஜங்ஷன், பா.நா.பாளையம், ராமகிருஷ்ணா மருத்துவமனை முகப்பு என வெவ்வேறு சாலையில் இந்தக் குழு ஓவியங்களை வரைகிறது. இப்படி ஒரு நாள் விட்டு ஒரு நாள், ஏதோ சபதம் எடுத்தது போல் கோவை நகர வீதிகளில் கரோனா விழிப்புணர்வு ஓவியங்களை இவர்கள் வரைந்து தள்ளுகிறார்கள். இந்தக் குழுவின் தலைவர் எம்.மணிராஜ் முத்துவிடம் பேசினேன்.
» ரேபிட் டெஸ்ட் ‘கிட்’ மூலம் யார் யாருக்கு ‘கரோனா’ பரிசோதனை?
» இனி 6 மணி நேரத்தில் பரிசோதனை முடிவு பெறலாம்: தூத்துக்குடியில் கரோனா ஆய்வகம் தொடக்கம்
ஃப்ளெக்ஸ் போர்டு காலத்திலும் இத்தனை ஓவியர்கள் இயங்கிக்கொண்டிருக்கிறீர்களா?
இருக்கிறோமா..! இப்போது இந்தப் பணியில் ஈடுபடுவது என்னவோ 15 -25 ஓவியர்கள்தான். இன்னமும் பதிவு செய்யப்படாத எங்கள் சங்கத்தில் 175 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அத்தனை பேரும் 20 முதல் 40 ஆண்டுகள் வரை தேர்ந்த பயிற்சி பெற்ற ஓவியர்கள். ஆப்செட் பிரின்ட், டிஜிட்டல் ஃப்ளெக்ஸ் எல்லாம் வந்த பிறகு பிழைப்புக்காகக் கட்டிடங்களுக்கு பெயின்ட் அடிக்கவும், காய்கறி, பழ, செருப்பு வியாபாரம் செய்யவும் சென்றுவிட்டனர் பல ஓவியர்கள். இருந்தாலும் இன்னமும் அவர்களுக்குள் ஓவியக் கலை உயிர்ப்புடன் இருக்கிறது.
‘கரோனா சூழலில் நாம் நம் பங்குக்கு ஏதாவது செய்வோம். வர முடியுமா?’ என்று ஓவியக் கலைஞர்களிடம் கேட்டோம். அதில் வந்தவர்கள்தான் இப்படி விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்துகொண்டிருக்கிறோம்.
சாலைகளில் ஓவியங்கள் தீட்ட வேண்டும் என்று எப்படி தோன்றியது..?
மற்ற மாவட்டங்களிலும் சில ஓவியர்கள் இதைச் செய்துகொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்து நாமும் செய்தால் என்னன்னு தோணுச்சு. உள்ளூர் போலீஸ்கிட்ட பேசினோம். அவங்க உடனே சம்மதிச்சாங்க. ‘பெயின்ட், பிரஷ் வாங்க எங்ககிட்ட காசில்லை. தவிர, கடைகள் எல்லாம் பூட்டியிருக்கு. பெயின்ட் கடையில போய்க் கேட்டா கொடுக்கவும் மாட்டாங்க. அதை நீங்களே செஞ்சு கொடுத்தீங்கன்னா பரவாயில்லை’ன்னோம். உடனே அவங்களே பெயின்ட் கடைக்காரர்கிட்ட போய்ப் பேசி, பெயின்ட், பிரஷ்களை வாங்கிக் கொடுத்தாங்க. எங்க உழைப்பை மட்டும் இங்கே இலவசமாக் கொடுக்கிறோம்.
இப்படி ஓவியங்கள் மூலமா மக்களுக்கு விழிப்புணர்வு வரும்னு நம்பறீங்களா?
என்ன இப்படி கேட்டுட்டீங்க... அந்தக் காலத்துல பிளேக், காலரா, பெரியம்மை, சின்னம்மை, குடும்பக் கட்டுப்பாடு, டெங்கு, மலேரியான்னு எந்த விழிப்புணர்வுன்னாலும் நகராட்சியில எங்களை மாதிரி ஓவியர்களைத்தான் கூப்பிடுவாங்க. தெருவெங்கும் சுவர்களில் ஓவியம் போடச் சொல்லுவாங்க. அதுக்காகத் தனியா டெண்டர் விடுவாங்க. அதுல ஓவியர்களுக்கு வருமானமும் கிடைக்கும். எய்ட்ஸ் வந்தபோதுகூட ‘புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?’ விளம்பரம் எங்க ஓவியர்கள் பிரபலப்படுத்தியதுதான். அதுக்கப்புறம்தான் அது டிவி, பத்திரிகைகளுக்கு வந்தது.
ஏற்கெனவே நொந்து போனவங்க ஓவியர்கள். இப்ப இப்படி வந்து வேகாத வெயில்ல கூலிகூட இல்லாம வரைகிறீர்களே, வலியாக, வருத்தமாக இல்லையா?
வலிதான். வருத்தம் இல்லை. ஆனா, யாராவது எங்க கஷ்டத்தைப் பார்த்து ஏதாச்சும் ஊதியம் கொடுக்க மாட்டாங்களான்னு ஏக்கமும் இருக்கு. அதுக்காக அரசாங்கத்துகிட்ட போய், ‘நாங்க ஓவியர்கள் ஏழ்மை நிலையில இருக்கோம். ஓவியத்தை விட்டுட்டு வேற தொழில் பார்த்ததும் எங்களுக்குக் கைகொடுக்கலை. இதுக்காவது ஏதாவது சம்பளம் கொடுங்க’ன்னு கேக்கிறது நல்லாவா இருக்கும்?
எங்களுக்குச் சம்பளம் இல்லாவிட்டாலும் நாங்க ஒவ்வொரு மூலையிலிருந்து வர்றோம். பெட்ரோல் செலவுக்காவது காசு வேணும்தானே? அதுக்காக ஒருத்தர்கிட்ட பேசி ஸ்பான்சர் வாங்கி ஒரு நாள் மட்டும் பதினைஞ்சு பேருக்குப் பெட்ரோல் செலவுக்கு கொடுத்தோம். ஏதோ ஒரு கூலி கொடுக்கிறோம்னா இன்னும் நிறைய பேர் வருவாங்க. அப்படி சொல்ல இங்கே யார் இருக்கா சொல்லுங்க?
இப்படி ஓவியம் வரையறதைப் பார்த்து வழியில போறவங்க வர்றவங்க உங்ககிட்ட ஏதாச்சும் பணம் கொடுத்துட்டுப் போன அனுபவம் ஏதும் உண்டா?
ம்கூம். இங்கே வேகாத வெயில்ல கொதிக்கிற தார் ரோட்டுல நின்னு வரையறதைப் பார்த்து ஒரு ஜவுளிக் கடைக்காரர் டீ, காபி, பிஸ்கெட் எல்லாம் கொடுத்தார். மத்தபடி எதுவும் இல்லை.
- ஏக்கப் பெருமூச்சுடன் முடிக்கிறார் ஓவியர் மணிராஜ் முத்து.
முக்கிய செய்திகள்
தமிழகம்
33 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago