எதிர்க்கட்சிகளும் உள்ளடங்கியது தான் ஜனநாயக அரசியல் அமைப்பு:  முதல்வர்  நிதானம் இழந்து பேசக்கூடாது:  முத்தரசன் விமர்சனம்

By செய்திப்பிரிவு

ஜனநாயக அரசியல் அமைப்பில் எதிர்கட்சிகளும் உள்ளடங்கி இருப்பதை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும், இதையெல்லாம் மறந்து விட்டு, அதிகார போதையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதானம் இழந்து பேசுவது’ முதல்வர் என்ற மாண்பமைந்த பொறுப்புக்கு தீராக்களங்கம் ஏற்படுத்தும் செயலாகும்.என முத்தரசன் விமர்சித்துள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“சேலத்தில் நேற்று (17/4)செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எதிர்கட்சிகளுக்கு, குறிப்பாக எதிர்கட்சித் தலைவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என சீறிப் பாய்ந்துள்ளார்.

எதிர்கட்சிகள் கோவிட்19 தொற்று நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் செய்வதாக கற்பனையில் கட்டமைத்த குற்றச்சாட்டு கூறியுள்ளார். முதல்வரின் பேட்டி செய்திகளை ஏடுகளில் பார்த்த போது அவர் ‘நிதானத்தில் தான் இருக்கிறாரா?’ என்ற கேள்வி எழுகிறது.

கோவிட் 19 தொற்று நோய் பரவலைத் தடுக்கவும், நாடு முடக்கம் (lockdown)நடவடிக்கையால் பாதிக்கப்படுவோருக்கு நிவாரண உதவிகள் வழங்கவும். ரூபாய் 15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் முதல்வர் கோரிக்கை வைத்தார்.

இந்தக் கோரிக்கையை ஆதரித்து, முதல்வர் கேட்டுள்ள பேரிடர் நிவாரண நிதியை முழுமையாக தாமதமின்றி வழங்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தின. கோவிட் 19 தொற்று நோய் பரவல் தடுப்பு பெரும் சவாலாகியுள்ளது. இதனை எதிர் கொள்ள அனைவரும் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என முதல்வர் கேட்டுக் கொண்டார்.

எதிர்கட்சிகள் அதனதன் சக்திக்கு தக்கபடி உடனடியாக முதல்வர் நிவாரண நிதி பங்களிப்பு செலுத்தின. மேலும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மாத ஊதியத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார்கள்.

கோவிட் 19 தொற்று நோய் பாதித்தவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க இடவசதி அரசுக்கு தேவை எனில் கட்சி அலுவலகங்களை பயன்படுத்தி கொள்ள ஒப்புதல் கடிதங்களை வழங்கியுள்ளன.

இது தவிர கோவிட் 19 தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நோய் தடுப்புக் கருவிகள், முகக்கவசம், கைதுடைப்பான் (Sanitizer) ,குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை எதிர்கட்சிகள் தங்கள் செலவில் வழங்கி வந்தன.

கோவிட் 19 தொற்று நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையில் பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நாடு முடக்கம் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், அமைப்புசாரத் தொழிலாளர்கள், சாலையோர வியாபாரம் செய்வோர் உள்ளிட்ட அனைவருக்கும் நிவாரண நிதி உள்ளிட்ட உதவிகளை விரைந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

இவையெல்லாம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளாக தெரியவில்லையா? ஜனநாயக அரசியல் அமைப்பில் எதிர்கட்சிகளும் உள்ளடங்கி இருப்பதை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும்.
இதையெல்லாம் மறந்து விட்டு, அதிகார போதையில் எடப்பாடியார் ‘நிதானம் இழந்து பேசுவது’ முதல்வர் என்ற மாண்பமைந்த பொறுப்புக்கு தீராக்களங்கம் ஏற்படுத்தும் செயலாகும்.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவரது எதிர்மறை அணுகுமுறையை உடனடியாக கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது”.

இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

43 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்