சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு முதியவர் உயிரிழந்து அடக்கமும் நடந்து 2 நாள் கழித்து அவரது மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டதில் அவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் வசித்த தெரு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை தமிழகத்தில் கரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மாவட்டம். சென்னையில் 228 பேருக்கு கரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளது. சென்னையில் 3 மண்டலங்களில் அதிக தொற்று உள்ளது.இதில் 5 வது மண்டலமான ராயபுரம் மண்டலத்தில் அதிக அளவில் பாதிப்பு உள்ளது.
இதே மண்டலத்தில் உள்ள சிந்தாரிப்பேட்டை வேதகிரி தெருவில் வசித்து வந்த 55 வயது நபர் டெல்லி சென்று வந்த நிலையில் அரசின் வேண்டுகோளை அடுத்து தன்னை சிகிச்சைக்கு உட்படுத்திக்கொண்டார். கடந்த 1-ம் தேதி அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொற்று இல்லை என தெரிந்து வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தி அவரை 9-ம் தேதி அனுப்பி வைத்தனர்.
டெல்லி திரும்பிய நபரின் வீட்டிலுள்ளவர்களை தனிமைப்படுத்துதலில் வைத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களுக்கு சோதனை எதுவும் நடத்தவில்லை. இதன் விளைவு 55 வயது நபரின் தந்தையான 95 வயது முதியவர் கடந்த 13-ம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
முதியவரை அவரது மகன் அருகிலேயே இருக்கும் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் சளி மாதிரியை எடுத்து விட்டு வீட்டுக்கு அனுப்பி விட்டனர். அவரை மருத்துவ மனையிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் வீட்டிலிருந்த முதியவருக்கு மறுநாள் மீண்டும் உடல் நலம் பாதிக்கப்படவே மீண்டும் ஓமந்தூரார் மருத்துவ மனைக்கு கொண்டுச் சென்று அங்கும் அனுமதிக்காமல், அங்கிருந்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று அங்கும் அனுமதிக்காமல் மீண்டும் ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை வீட்டுக்கு கொண்டு வந்த மகன் அருகிலுள்ள மருத்துவர் ஒருவரிடம் ஒரு சான்றிதழைப் பெற்று அதை காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.
டெல்லி சென்று திரும்பியவரின் தந்தை என்கிற ஜாக்கிரதை உணர்வு இல்லாமல் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சில உறவினர்களுடன் சென்று உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் பின்னர் 2 நாட்கள் கழித்து முதியவர் மாதிரி ஆய்வு முடிவில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தகவலையடுத்து சுகாதாரத்துறையினர் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
முதியவர் உயிரிழந்து அடக்கமும் முடிந்துவிட்டது என்ற தகவலால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அவர் வசித்த தெரு முழுவதையும் சீல் வைத்துள்ளனர். முதியவரின் மகன், பேரன் இருவரையும் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். அவரது மனைவி மற்ற உறவினர்கள் ஊரடங்குக்கு முன்னரே ராமநாதபுரத்தில் சிக்கிக் கொண்டதால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
முதியவர் உடலை ஆம்புலன்ஸில் கொண்டுச் சென்ற ஓட்டுனர், உதவியாளர், உடன் மயானத்துக்குச் சென்ற உறவினர்களை தனிமையில் இருக்க அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பல கேள்விகள் எழும் நிலையில் மேற்கண்ட கேள்விகளுடன் ஓமந்தூரார் மருத்துவமனை டீன் நாராயண பாபுவை தொடர்பு கொண்டபோது, அதுகுறித்த தகவல் எனக்கு இல்லை, இதுகுறித்து விசாரித்து பதில் சொல்கிறேன் என முடித்துக்கொண்டார்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்தியிடம் தொடர்புக்கொள்ள முயன்றபோது அவர் தொடர்புக்கு வரவில்லை.
தற்போது கரோனா பாதிப்பால் உயிரிழந்த முதியவர் உடல் அடக்கத்துக்குச் சென்ற உறவினர்கள், சான்றிதழ் கொடுத்த தனியார் மருத்துவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளரா என்பது குறித்த தகவல் இல்லை.
இதேபோன்ற சம்பவம் கடந்த சில வாரங்களுக்கு முன் ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்தது. ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவர் உயிரிழக்க அவரது உடலை மாவட்டம் விட்டு மாவட்டம் அனுப்ப அனுமதித்தனர்.
ராமநாதபுரத்திற்கு கொண்டுச் செல்லப்பட்ட அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டப்பின் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதற்காக முதியவரின் மகன்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேள்விக் கேட்கப்படவில்லை.
தனிமைப்படுத்தப்பட்டவர்களையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கை வலுத்து வரும் நிலையில் அந்தக்கோரிக்கை சரியானதுதான் என்பதை வலுப்படுத்தும் விதமாக மேற்கண்ட சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.
* டெல்லி சென்று வந்தவர் தாமாக மருத்துவமனைக்கு வந்தப்பின்னர் அவரை மருத்துவமனையில் 9 நாட்கள் மட்டுமே வைத்திருந்தது ஏன்? 28 நாள் தனிமைப்படுத்துதல் என்ன ஆனது?
* முதியவர்களை அதிகம் தாக்கும் என தெரிந்தும் வீட்டில் உள்ள முதியவருக்கு தனி சிகிச்சை, கண்காணிப்பு அளிக்காதது ஏன்?
* 13-ம் தேதி மருத்துவமனைக்கு உடல் நலமில்லாமல் வந்த முதியவரை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்காமல் சளி மாதிரியை எடுத்துவிட்டு வீட்டு அனுப்பியது ஏன்?
* மீண்டும் 14-ம் தேதி உடல்நல பாதிப்புடன் வந்தபோதும் அனுமதிக்காதது ஏன், ராஜீவ் காந்து அரசு பொது மருத்துவ மனையிலும் அனுமதிக்காமல், கரோனா சிறப்பு வார்டுகள் இல்லாத ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது ஏன் ?
என்ற கேள்விகளை முன்வைக்கிறார்கள் சமுக ஆர்வலர்கள். விடை தருமா சுகாதாரத்துறை ?
முக்கிய செய்திகள்
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago