மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுகிறதா என்று பார்ப்பதற்கு இது சரியான நேரம் இல்லை என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் இன்று (ஏப்.17) கரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடத்தில் பேசியதாவது:
"பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் தங்கள் துறைகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இந்தக் கூட்டத்தில் தெளிவாக எடுத்துக் கூறினர். சேலம் மாவட்ட ஆட்சியர் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகிறார்.
சேலம் மாவட்டத்தில் 9 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக உள்ளன. 4 மாநகராட்சி பகுதிகள், 5 புறநகர் பகுதிகளாகும். அந்தப் பகுதிகளில் 24 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மாவட்டத்தில் சமூக இடைவெளியை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அனைவரும் முகக் கவசங்கள் அணிய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
ரேஷன் கடைகளில் பொருட்கள் மக்களுக்கு உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும். சேலம் மாவட்டத்தில் 85 சதவீதத்திற்கும் மேலாக அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டுள்ளன. 95% அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு இன்னும் 3 நாட்களில் அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும். அரசு அறிவித்த நிவாரணத் திட்டங்கள் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்குக் கொண்டு சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு 5 நாட்களுக்குள் நிவாரணப் பொருட்கள் கிடைத்துவிடும்.
சேலம் மாவட்டத்தில் அம்மா உணவகத்தின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 11 ஆயிரத்து 500 பேர் உணவருந்துகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 15 அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. இதன் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை உணவருந்தியுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 78 பெரிய மளிகைக்கடைகள் மூலமாக, மளிகைப் பொருட்கள் வீட்டுக்கே நேரடியாக டெலிவரி செய்யப்படுகின்றன. 23 ஆயிரம் பேருக்கு இதுவரை அவ்வாறு மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கென தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
150 நடமாடும் வாகனங்கள் மூலமாக சேலம் மாவட்டத்தில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. விவசாயிகள் தாங்கள் விளைவித்தவற்றை விற்பனை செய்ய எந்தத் தடையும் இல்லை.
எந்தெந்தத் தொழில்கள் மீண்டும் இயங்கலாம் என்பது திங்கள்கிழமை அறிவிக்கப்படும். இதற்கென நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கரும்பு பயிரிட்ட விவசாயிகளைக் காப்பாற்றும் விதமாக, சர்க்கரை தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
இதையடுத்து ரேபிட் கிட் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த முதல்வர், "தமிழகத்திற்கு இன்றைக்கு 24 ஆயிரம் ரேபிட் கிட் வந்துள்ளன. மத்திய அரசு 12 ஆயிரம் ரேபிட் கிட் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். அது போதாது. எங்களுக்கு 50 ஆயிரம் ரேபிட் கிட் வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். ஏற்கெனவே முன்னெச்சரிக்கையாக சீனாவிடம் இருந்து 1 லட்சத்து 25 ஆயிரம் ரேபிட் கிட் வாங்க ஆர்டர் செய்திருந்தோம். பணமும் செலுத்தியிருந்தோம். ஆனால், காலதாமதமாகி விட்டது. இன்று தான் 24 ஆயிரம் டெஸ்ட் கிட் வந்துள்ளன.
மத்திய அரசு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் 4 லட்சம் ரேபிட் கிட் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தான் 24 ஆயிரம் கிட் வந்துள்ளது. தமிழக தலைமைச் செயலாளர் அதிகமான டெஸ்ட் கிட் வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். அதனைப் பரிசீலிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார்" என்றார்.
இதையடுத்து மாநிலங்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுகிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர், "பாரபட்சம் என்று பார்ப்பதற்கு இது சரியான நேரம் இல்லை. அவர்கள் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றுவது தமிழக அரசின் கடமை" எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago