அரசியல் சுயநலத்துக்காகவும், லாபத்திற்காகவும் கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு தயவுசெய்து விளையாடிவிட வேண்டாம் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.17) வெளியிட்ட அறிக்கையில், "வெறும் கையைத் தட்டி, விளக்கேற்றி, மணி அடித்து, கரோனாவை விரட்டி விடலாம் என்று மத்திய அரசு நினைக்கிறது. பேட்டி கொடுத்தே, அதில் தவறான செய்திகளைப் பேசி அரசியல் செய்தே, கரோனாவை ஒழித்துவிடலாம் என்று மாநில அரசு நினைக்கிறது. இவை இரண்டுக்கும் மத்தியில்தான் மக்களின் வாழ்க்கை ஊசலாடிக்கொண்டு இருக்கிறது.
தொடர்ந்து துறைச் செயலாளர், துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், அது போதாதென்று மற்றொரு அமைச்சர் ஆகியோரின் கரோனா குறித்த பேட்டிகளுக்குப் பிறகு, அடுத்து 'கிளைமேக்ஸ்' காட்சி போல, நேற்றைய தினம், தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனாவை ஒழித்துவிட்டதாக தனக்குத் தானே முதுகில் தட்டி முறுவலித்துக் கொள்கிறார்.
'இன்னும் இரண்டு மூன்று நாளில் கரோனாவே இருக்காது' என்று ஆரூடம் சொல்லி இருக்கிறார். இதற்கு இவர் காட்டிய புள்ளிவிவரத்தைப் பார்க்கும் போது, இவர் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றித் திசைதிருப்புகிறாரா, அல்லது தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறாரா எனத் தெரியவில்லை.
”நேற்றைய தினம் 36 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள், இன்றைய தினம் 25 பேர்தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அப்படியானால் கரோனா பாதிப்பு குறைந்து வருவதாகத்தானே அர்த்தம்” என்று கேட்கும் அவரைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
அவரே சொல்கிறார்; இதுவரை 17 ஆயிரத்து 835 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, அதில் 1,383 பேரின் முடிவுகள் வரவில்லை என்கிறார். சுமார் 18 ஆயிரம் என்பது தமிழ்நாட்டு மக்கள்தொகையில் எத்தனை சதவிகிதம் என்பதை அவருக்கு அருகில் விவரம் தெரிந்தவர்கள் இருந்தால் சொல்ல வேண்டும்.
ஆரம்பத்திலிருந்தே உரிய கருவிகளைப் பெற்று பரிசோதனைகளை விரிவுபடுத்தி, விரைவுபடுத்துங்கள் என்று அனைவரும் திரும்பத் திரும்ப சொன்ன பிறகும், அடிப்படையான அந்த நடவடிக்கையில் போதிய கவனம் செலுத்தாமல் இருந்துவிட்டு, இப்போது திடீரென்று கரோனாவே இல்லை என்று முதல்வர் சொல்வது, 'பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டுவிட்டதாக எண்ணுவதைப் போன்றது'.
ஒருவேளை முதல்வர் தனது கையில் மந்திரக்கோல் ஏதாவது வைத்திருப்பாரோ என்று இந்த நாட்டு மக்கள் நினைக்கிறார்கள்!
மார்ச் முதல் வாரத்தில் தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில்தான் கரோனா நோய்த் தாக்கம் இருக்கிறது என்று மத்திய அரசு அறிவித்தது. இப்போது 22 மாவட்டங்களுக்கு அதிகமாகப் பரவிவிட்டது என்றும், மூன்றே மூன்று மாவட்டத்தில் தான் கரோனா பாதிப்பு இல்லை என்றும் மத்திய அரசு சொல்கிறது என்றால், இதுதான் கரோனாவை காலத்தே கட்டுப்படுத்திய செயலா? தட்டித் தட்டி எழுப்பியும் மறுத்து, மிகவும் தாமதமாக விழித்தெழுந்துவிட்டு, மருத்துவ ரீதியாக முறையான தடுப்பு மற்றும் சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்களைப் பெறுவதில் அலட்சியம் காட்டிவிட்டு, இப்போது கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொன்னால், தமிழக மக்கள் இதை நம்புவதற்கு என்ன இளித்த வாயர்களா?
கரோனாவின் தாக்கம் ஜனவரி மாதம் இறுதியில் கேரளாவில் கண்டறியப்பட்டு, அந்த மாநிலம் பிப்ரவரி 4-ம் தேதி மாநிலப் பேரிடராக கரோனாவை அறிவித்தது. ஆனால், மாநில எல்லையை மார்ச் 16-ம் தேதி மூடியதாக அதே பேட்டியில் முதல்வர் சொல்கிறார் என்றால், 46 நாட்கள் கழித்து நடவடிக்கை எடுத்ததுதான் துரிதமான நடவடிக்கையா? கரோனாவின் தீவிரத் தன்மையை உணர்ந்த செயலா?
பிப்ரவரி மாத இறுதியிலும், மார்ச் தொடக்கத்திலும் என்ன செய்து கொண்டு இருந்தார் முதல்வர்? சட்டப்பேரவையில் நான் குரல் எழுப்பியபோது, "தமிழகத்தில் ஒருவருக்குக் கூட கரோனா வராது, வரவிடமாட்டோம்" என்று மார்தட்டினார். "70 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் வருந்த வேண்டாம், அவருக்கு வந்தாலும் சிகிச்சை அளிப்போம்" என்று கொடூரமான கிண்டல் அடித்துக் குதூகலம் கொண்டார்.
"வயதானவர்களுக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் மட்டும்தான் வரும்" என்றார், அனைத்தையும் ஐயம் திரிபற அறிந்த சுகாதார அமைச்சர்!
கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து ரகசியமாக வைத்திருப்பதைப் போலவும், யாருக்கு வந்தாலும் அடுத்த நிமிடமே அதை வெளியிட்டுக் காப்பாற்றிவிடுவோம், என்பது மாதிரியும் அல்லவா முதல்வரும், அமைச்சரும், கிண்டலும் கேலியும் பேசினார்கள்!
ஆனால், இன்றைக்கு நிலைமை என்ன? கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவில் மூன்றாவது இடம் தமிழகம். விலை மதிப்பில்லாத 15 உயிர்களை இழந்திருக்கிறோம்; 1,264 பேர் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்கள்; இதில் 30-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள்.
அனைத்துக்கும் மேலாக சிகிச்சை கொடுத்து வந்த மருத்துவர்களில் பத்து பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பல்லாயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள். இன்னும் எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற தரவுகளே தெரியவில்லை; திரைமறைவு ரகசியமாக உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் உண்மை நிலையை உணர்ந்து மக்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறையுடன், மற்றவர் உயிர்மீது நெஞ்சில் கொஞ்சம் ஈரத்துடன் செயல்படாமல், "கரோனா இன்னும் 3 நாளில் ஒழிக்கப்பட்டு ஜீரோவாக ஆகிவிடும்" என்று, “ஏதோ, சூ...மந்திரக்காளி' போல, முதல்வர் சொல்கிறார் என்றால், இவருக்கு இன்னமும் நோயின் தீவிரம் புரியவில்லையா, அல்லது அருகில் இருப்போர் சரியான தகவல்களை எடுத்துச் சொல்லிப் புரிய வைக்கவில்லையா, என்றுதான் மருத்துவ நிபுணர்கள் கேட்பார்கள்.
முதல்வரும் தமிழக அரசுக்கும் இந்த கரோனா நோயின் அடிப்படை குணத்தை உணர்த்துவதற்காகவும், மக்களின் எதிர்பார்ப்புகளையும் ஏக்கங்களையும் உரிய முறையில் சொல்வதற்காகவும்தான், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டச் சொல்லி மன்றாடினேன். அனைத்து காரியங்களிலும் பிரதமர் சொல்வதற்குத் தலையாட்டி அவரைப் பின்பற்றி நடக்கும் முதல்வர் ஏனோ இதை மறுத்துவிட்டார்!
எனவே, நேரில் சொல்ல வேண்டிய ஆலோசனைகளைக் கடிதமாக அவருக்கு அனுப்பினேன். அந்த ஆலோசனைகளைத் திறந்த மனதோடு முதல்வர் பரிசீலித்திருக்க வேண்டும்; சுட்டிக்காட்டிய கருத்துகளில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்; அல்லது பதில் சொல்லாமலாவது அமைதியாக இருந்திருக்க வேண்டும்.
ஆனால், "மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார், நாடகம் ஆடுகிறார், அரசியல் செய்கிறார்" என்று என்னைத் தாக்கி அறிக்கை வெளியிடுவதில் தனி இன்பம் கண்டார். கரோனா விவகாரத்தில், ஆரம்பம் தொட்டே அரசியல் பேசியது அவர்தானே!
அவர் எடுக்கும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு நான் தடை போட நினைப்பதாகச் சொல்லி இருக்கிறார் முதல்வர். இந்த அரசு எடுத்த எந்த நடவடிக்கைக்கும் நான் தடையாக இருந்தது இல்லை. "ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் அனைத்துக்கும் உறுதுணையாக இருப்பேன்" என்றுதான் அன்றும் சொன்னேன்; இன்றும் சொல்கிறேன். இதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்தால் தானே ஆதரிக்க முடியும்? அரைகுறை நடவடிக்கைகளை நான் எப்படி வேடிக்கை பார்க்க முடியும்?
ரேபிட் டெஸ்ட் பரிசோதனைக் கருவிகள் மார்ச் 9-ம் தேதி வந்துவிடும் என்றார், 10-ம் தேதியே ஒரு லட்சம் பேருக்குப் பரிசோதனை செய்துவிடுவோம் என்றார். அப்படி எந்த பரிசோதனையும் நடக்கவில்லை. மத்திய அரசிடம் இருந்து 13 ஆயிரம் கோடி பணம் கேட்டார். வந்ததோ வெறும் 800 கோடி.
ஆனால், மத்திய அரசிடம் இருந்து பணம் பெற தைரியமும் இல்லை, தட்டிக் கேட்கும் நெஞ்சுரமும் இல்லை. இந்த கோழைத்தனத்தை மறைக்க, 'திமுக எம்.பி.,க்கள்தானே வாதாடி வாங்கித்தர வேண்டும்? மத்திய அரசை வற்புறுத்தினார்களா? ஏதாவது ஸ்டெப் எடுத்தார்களா?" என்று வக்கணையாகக் கேட்டுள்ளார் முதல்வர்.
தமிழக அரசு கேட்ட நிதியைத் தர வேண்டும் என்று மூன்று அறிக்கைகளை நான் வெளியிட்டுள்ளேன். பிரதமர் நடத்திய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பேசிய திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு இதனைக் கோரிக்கையாக வைத்து வலியுறுத்தினார். எழுத்து மூலமாகவும் அனுப்பி வைத்துள்ளார். இதை எல்லாம் முதல்வர் மறந்துவிட்டாரா? மறைக்கிறாரா?
நோயில் நான் அரசியல் செய்வதாக முதல்வர் சொல்லி இருக்கிறார். அடையாளம் காணப்படாத 'கூவத்தூர் நோயினால் நடந்த அரசியல் விபத்தால்' முதல்வர் ஆனவர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதை நாடு மறந்துவிடாது.
கரோனாவில் நான் அரசியல் செய்வதாக இருந்தால், முதல்வருக்கு எந்த ஆலோசனையும் சொல்லாமல் வாய்மூடி இருந்திருக்க வேண்டும், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொகுதி வளர்ச்சி நிதியை ஒதுக்காமல் இருந்திருக்க வேண்டும், தமிழக அரசுக்கு மத்திய அரசு நிதி தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்காமல் மவுனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்திருக்க வேண்டும். இப்படி எல்லாம் நான் இருந்தால்தான் அரசியல் செய்வதாக அர்த்தம்.
மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கி, உதவிகள் செய்து, மத்திய அரசிடம் வாதாடுவதற்குப் பேர் அரசியல் அல்ல; அக்கறை.
தமிழ்நாட்டு மக்கள் மீதான தணியாத அக்கறையில்தான் திமுக எப்போதும் செயல்படுகிறது. அந்த நல்லெண்ணத்தையும் உயர்ந்த நோக்கத்தையும் புரிந்துகொள்ளும் பக்குவம் இன்றைய முதல்வருக்கு இல்லை; என்ன செய்வது தமிழகம் செய்த தவப்பயன்!
ஆரம்பத்தில் இருந்தே, "தமிழகத்தில் கரோனா நோய் இல்லை" என்று மறைக்கும் திசைதிருப்பல் அரசியலை எடப்பாடி பழனிசாமி செய்தார். பொய்யும் புரட்டும் நிறைந்த அந்த நடவடிக்கையின் விளைவுகளைத் தான் தமிழகம் இன்று கண்டு கொண்டிருக்கிறது.
மற்ற மாநிலங்களில் எல்லாம் எதிர்க்கட்சிகள் அந்த மாநில அரசுக்கு ஒத்துழைப்பு செய்வதாகவும், தமிழகத்தில்தான் அது இல்லை என்றும் சொல்லி இருக்கிறார் முதல்வர். மற்ற மாநில முதல்வர்கள், அனைத்துக்கட்சிக் கூட்டங்களைக் கூட்டி, அனைவரையும் ஒருங்கிணைத்து அழைத்து கலந்தாலோசனை செய்துதான் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
பிரதமரே அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்திவிட்டுத் தான் செயல்படுகிறார். ஆனால், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரை எல்லா வாசல்களையும் அடைத்துக் கொண்டு விட்டார்; தன்னைப் பற்றியே நினைத்து கணக்குப் போட்டுக் கொண்டு தனி அறையில் இருந்து விட்டார். எல்லாம் தனக்குத் தெரியும், தன்னால் எல்லாம் முடியும் என்ற தன்முனைப்பு கொண்டவராக மாறிவிட்டார்.
அதனால்தான் எதிர்க்கட்சிகள் நித்தமும் நெடுஞ்சாலைகளிலே நின்றுகொண்டு ஆலோசனைகளைச் சொல்ல வேண்டிய நெருக்கடியான நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.
குறை சொல்வதற்காகவே, திமுகவை நடத்துவதாகச் சொல்லி இருக்கிறார் முதல்வர். 'காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பதைப் போல', நாங்கள் சொல்லும் ஆலோசனைகள் கூட அவருக்குக் குறைகளாகத் தெரிகின்றன. நாங்கள் இன்னும் குறைகள் சொல்ல ஆரம்பிக்கவில்லை.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையிலிருந்த தாமதம், மெத்தனம், அலட்சியம், அரசு நிர்வாகத்தின் மீதான புகார்கள், ஜனவரி இறுதியிலிருந்து சுகாதாரத் துறை கொள்முதல்களில் அரங்கேறிய மர்மங்கள், மத்திய அரசிடம் எதையும் வாதாடிப் பெற முடியாமல் போவதற்கான உண்மையான காரணங்கள், பலவீனங்கள், கரோனாவை வைத்து ஆளும் அமைச்சரவைக்குள் நடக்கும் கீழ்மையான அரசியல் எதிர்வினைகள், அவை குறித்தெல்லாம் நாங்கள் இன்னும் பேசவில்லை; எப்போதும் பேசத்தயார்!
ஆனால், இப்போது வேண்டாம், அரசின் கவனத்தை திசைதிருப்பிடக் கூடாது, அதனால் ஏழை - எளியோர் பாதிக்கப்படக் கூடாது என்று அமைதி காத்து வருகிறோம்.
மீண்டும் முதல்வருக்குச் சொல்வது, அரசியல் செய்யும் நேரம் இதுவல்ல!
நோயை மறைக்காதீர்கள்; பொய்க்கணக்குக்கான தவறான புள்ளிவிவரங்களை அள்ளிவீசாதீர்கள். பரிசோதனைகளை அதிகப்படுத்துங்கள். உபகரணங்கள், கருவிகளை உடனடியாக வாங்குங்கள். பிழையான, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் தராதீர்கள். எப்படியாவது மக்களைக் காப்பாற்றுங்கள்.
நோயை மறைப்பது என்பது உங்களை ஏமாற்றிக் கொள்வது மட்டுமல்ல; நாட்டு மக்களை ஏமாற்றுவதுமாகும்.
உங்களது அரசியல் சுயநலத்துக்காகவும், லாபத்திற்காகவும் கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு தயவுசெய்து விளையாடிவிட வேண்டாம் என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொள்கிறேன்.
'கரோனா என்பது பணக்கார வியாதி, ஏழைகளுக்கு வராது' என்ற அரிய வர்க்க பேதக் கண்டுபிடிப்பை வெளியிட்டு நகைச்சுவை பரிமாறுவதை நிறுத்திவிட்டு, கரோனா தொற்றை உண்மையில் தடுத்த நிறுத்தப் பாருங்கள்!
என்னுடைய இந்த விளக்கத்தைக் கண்டு பதறாமல், 'பார் இதற்கும் பதிலளிக்கிறேன் பேர்வழி' என்று, இருக்கும் நேரத்தையும் வீணாக்காமல், கரோனா தடுப்பு- உபகரணங்கள் கொள்முதல் - பரவலான பரிசோதனை - பாங்கான சிகிச்சை - சிறந்த நிவாரணம் - சீரான மறுவாழ்வு ஆகிய ஆக்கபூர்வமான அணுகுமுறைகளைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து, செம்மையாகச் செயலாற்றி, தமிழ் மக்களைப் பாதுகாத்திட வேண்டும் என்று மிகுந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago