தமிழகத்தில் அதிவேக பரிசோதனை கிட் மூலம் கரோனா பரிசோதனையை அதிகமாக்குக; வாசன்

ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனையை அதிகமாக்கி விரைவில் நோய் தொற்றின் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஏப்.17) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, நோயின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்க தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருவது நம்பிக்கை கொடுத்துக்கொண்டிருக்கிறது.

கடந்த சில நாட்களாக நோய் தொற்றின் பரவல், பரிசோதனை முடிவுகள், குணம் அடைந்தவர்கள், வீடு திரும்பியவர்கள் என்று பார்க்கும் போது விரைவில் நோய் தொற்றில் இருந்து தப்பிவிடலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. இதற்கு காரணம் மத்திய, மாநில அரசுகளின் ஊரடங்கு அறிவிப்பும், அமல்படுத்திய விதமும், கண்டிப்பும், கட்டுப்பாடும், மக்கள் கொடுத்த ஒத்துழைப்பும் தான்.

குறிப்பாக, கரோனா அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி, பரிசோதனைக்கு உட்படுத்தி, குணப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை எடுத்து வருவதால் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழக சுகாதாரத்துறை பிசிஆர் முறையில் ஆண்ட்டிபாடி டெஸ்டுகளை செய்தும் பரிசோதனையை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் கரோனா ஒழிப்புக்காக தேவையான மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள், பரிசோதனை உபகரணங்கள் போன்றவை இருப்பதால் படிப்படியாக நோயின் தாக்கத்தை குறைக்க முடியும். இருப்பினும், பரிசோதனையை வேகப்படுத்த ரேபிட் டெஸ்ட் கிட் தேவைப்படுவதால் அதனையும் கொள்முதல் செய்ய தமிழக அரசு சீனாவிடம் ஆர்டர் கொடுத்தது.

இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட்கள் சீனாவில் இருந்து இந்தியா வந்தடைந்துள்ளது. இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி எந்தளவுக்கு இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு அதன்பிறகு பிசிஆர் டெஸ்ட் மூலம் துல்லியமாக கரோனா தொற்று இருக்கிறதா என்பதை அறிய முடியும்.

எனவே, தமிழக அரசு ரேபிட் டெஸ்ட் கிட்களை தமிழகத்துக்கு உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும். மத்திய அரசும் தமிழகத்துக்குத் தேவையான ரேபிட் டெஸ்ட் கிட்களை உடனடியாக வழங்க வேண்டும்.

எனவே, தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை குணப்படுத்தவும், நோய் பரவலை கட்டுப்படுத்தவும், ரேபிட் டெஸ்ட் கிட்கள் மூலம் பரிசோதனையை விரைவுப்படுத்தவும் தமிழக அரசின் தொடர் முயற்சிகள் வெற்றி பெற்று தமிழக மக்கள் கரோனா அச்சத்தில் இருந்து விரைவில் மீள வேண்டும் என்பது தான் தமாகாவின் எதிர்பார்ப்பாகும்" என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE