தமிழகத்தில் யாரும் பட்டினியாக இல்லை; நிவாரண உதவிகள் குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணங்கள் குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.

தமிழகத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணங்கள் குறித்து முதல்வர் இன்று (ஏப்.16) சென்னை, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துப் பேசியதாவது:

"அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணத்தொகை வழங்கப்படுகின்றது. இதுவரை 97.9% குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 84.25% குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதம் இருப்பவர்களுக்கு இன்னும் 2 நாட்களில் வழங்கப்பட்டு விடும்.

ரொக்க நிவாரணம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. அவர்களைக் கண்டறிந்து கொடுப்பது சிரமமாக இருக்கிறது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவித்தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டிருக்கிறது. இதர தொழிலாளர்கள் 8.6 லட்சம் பேருக்கு நிவாரணத் தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிமாநிலத் தொழிலாளர்களை 311 இடங்களில் தங்க வைத்துள்ளோம். அங்கு 13 ஆயிரத்து 407 பேர் தங்கியுள்ளனர். தமிழகத்தில் 1,371 சமுதாயக் கூடங்கள் உள்ளன. அதில் தினசரி 1.8 லட்சம் பேர் பயன் பெறுகின்றனர். மாற்றுத்திறனாளிகள் 14 ஆயிரத்து 204 பேர் இங்கு உணவருந்துகின்றனர். முதியோர் 28 ஆயிரத்து 836 பேர், ஆதரவற்றவர்கள் 54 ஆயிரத்து 258 பேர் மற்றும் இதர மக்கள் 69 ஆயிரத்து 682 பேருக்கும் இங்கு உணவு வழங்கப்படுகின்றது. யாரும் பட்டினியாக இல்லை.

10 ஆயிரத்து 819 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெளிமாநிலங்களில் பணிபுரிகின்றனர்.

அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் உணவுப் பொருட்கள் ஏப்.1 முதல் இன்று வரை வழங்கப்பட்டுள்ளன. மேலும், இரண்டாவது கட்டமாக மீதமுள்ளவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. இதில் பயன்பெற்ற குழந்தைகளின் எண்ணிக்கை 24 லட்சத்து 99 ஆயிரத்து 828 பேர். பயன்பெற்ற கர்ப்ப கால மற்றும் பேறுகால பெண்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 256. வளரிளம் பெண்கள் 596. மொத்த பயனாளிகள் 32 லட்சத்து 310. இவர்களுக்கு 8,303 மெட்ரிக் டன் சத்துணவு மாவு வழங்கப்பட்டுள்ளது. உணவுப்பொருட்கள் பெற்ற 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளின் எண்ணிக்கை 11 லட்சத்து 45 ஆயிரத்து 86.

134.64 கோடி ரூபாய் இதுவரை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பெறப்பட்டுள்ளது. நிவாரண நிதி வழங்கிய அனைவருக்கும் நன்றி.

விவசாயிகளுக்கான நிவாரண உதவிகள்

தமிழகத்தில் 138 குளிர்பதனக் கிடங்குகள் உள்ளன. அதில் 13 ஆயிரத்து 200 மெட்ரிக் டன் இருப்பு வைக்கலாம். இதுவரை 4,371 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு வாடகை கிடையாது.

விவசாய நிறுவனங்களில் 11 குளிர்பதனக் கிடங்குகள் உள்ளன. வியாபாரிகள் 93 குளிர்பதனக் கிடங்குகளை வைத்துள்ளனர். பிற விளைபொருட்களை சேமிக்கும் வேளாண் துறையின் 424 கொள்ளளவு கிடங்குகளில் 3 லட்சம் மெட்ரிக் டன் இருப்பு வைக்கலாம்.

கூட்டுறவுத்துறையில், விளைபொருட்களை சேமிக்க 3,879 கிடங்குகளில் கொள்ளளவு 5 லட்சம் மெட்ரிக் டன். விவசாயிகள் தாங்கள் விளைவித்ததை அங்கு அடுக்கி வைத்து குறைந்த வட்டியில் கடனுதவி பெற்றுக்கொள்ளலாம். 6 மாதங்களில் விளைபொருட்களை விற்று தமிழக அரசு வழங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தலாம்.

1,100 வாகனங்கள் மூலம் சென்னை மாநகராட்சியில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. 4.900 தள்ளுவண்டிகள் மூலமாகவும் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் வெளியே வராமல் இதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

நகராட்சி, மாநகராட்சி தோட்டக்கலைத்துறை மூலமாக, தமிழ்நாடு முழுவதும் 4,500 வாகனங்கள் மூலமாக, சுமார் 2,500 மெட்ரிக் டன் காய்கறிகள் விநியோகம் செய்யப்படுகின்றன. கூட்டுறவுத் துறை மூலமாக 361 வாகனங்களில் காய்கறிகள் விநியோகம் செய்யப்படுகின்றன. இதில் 42 வாகனங்கள் மூலமாக மலைக் கிராமங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன,

சிஎம்டிஏ மூலமாக 155 வாகனங்களில் சராசரியாக 50 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. நாளொன்றுக்கு சராசரியாக 6,115 மோட்டார் வாகனங்கள், 4,900 தள்ளுவண்டிகள் மூலம் 3,550 மெட்ரிக் டன் காய்கறிகள் பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு சென்று விற்பனை செய்யப்படுகின்றன. இதனால்.விவசாயமும் காப்பாற்றப்படுகின்றது.

காய்கறி விலை ஏறிவிட்டதாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அது முற்றிலும் தவறு.

சென்ற மாதம் ஒரு கிலோ தக்காளியில் விலை ரூ.20, இம்மாதம் ரூ.15. பெரிய வெங்காயம் ரூ.25க்கு விற்கப்படுகின்றது, உருளைக்கிழங்கு ரூ.25க்கு விற்கப்படுகின்றது. கேரட் ரூ.40, பீன்ஸ் ரூ.25, கத்தரிக்காய் ரூ.20க்கு விற்பனையாகின்றது. காய்கறிகளின் விலை குறைக்கப்பட்டிருக்கின்றது.

உள்ளூர் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அரசே அத்தியாவசியப் பொருட்களை நேரடியாக வழங்குகின்றது. அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக உணவு மற்றும் வேளாண் துறைச் செயலாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, 500 மெட்ரிக் டன் துவரம் பருப்பு, 500 மெட்ரிக் டன் உளுத்தம் பருப்பு, 250 மெட்ரிக் டன் கடலை பருப்பு, பொட்டுக்கடலை 250 மெட்ரிக் டன், மிளகு 100 மெட்ரிக் டன், சீரகம் 100 மெட்ரிக் டன், கடுகு 100 மெட்ரிக் டன், வெந்தயம் 100 மெட்ரிக் டன், பூண்டு 250 மெட்ரிக் டன் ஆகியவற்றை வெளிமாநிலங்களில் இருந்து வாங்கி தமிழகத்தில் விற்பனை செய்கிறோம். இதனால் விலை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

நடவடிக்கைகள்

144 தடை உத்தரவை மீறிச் செயல்பட்டதாக 1 லட்சத்து 94 ஆயிரத்து 995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2 லட்சத்து 8,139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 79 ஆயிரத்து 827 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அபராதமாக வசூலிக்கப்பட்ட தொகை 89 லட்சத்து 23 ஆயிரத்து 644 ரூபாய்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்