கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு; அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.5000 நிவாரணம்: திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

By செய்திப்பிரிவு

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக நடந்த அனைத்துக்கட்சிக்கூட்டத்தில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தேர்ச்சி அறிவிப்பது, வங்கிக் கடன்களை ரத்து செய்வது, கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இன்று திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘அனைத்துக் கட்சிக் கூட்டம்’ காணொலிக் காட்சி வழியாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம் வருமாறு:

இரங்கல் தீர்மானம்:

“கோவிட்-19” என்ற கொடுமையான “கொரோனா நோய்த்” தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை ஒட்டுமொத்தமாக உலக நாடுகளில் 1,34,720 பேரும், இந்தியாவில் 414 பேரும், தமிழ்நாட்டில் மட்டும் 14 பேரும் மரணமடைந்துள்ளனர். மரணமுற்றோர் அனைவர்க்கும்; அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும்; அவர்தம் குடும்பத்தார்க்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

கரோனாவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம்

இயற்கைப் பேரிடரா அல்லது மனிதப் பேரிடரா என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு, ஒட்டுமொத்த மனித குலத்தையே சவாலுக்கு அழைத்து, பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பறித்துக் கொண்டிருக்கும் கொரோனா நோய்த் தொற்றினால் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 1242 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்; இந்த நோயால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பரிவுத் தொகையாக தலா 1கோடி ரூபாய் வழங்கி மனித நேயம் காத்திட வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம், ஊதிய உயர்வுகள்; உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம்

வரலாறு காணாத இந்தக் கொடிய நோயின் கோரப் பிடியிலிருந்து மக்களை மீட்டுப் பாதுகாக்க, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள், கூட்டுறவுப் பணியாளர்கள், காவல்துறையினர் என தங்களின் இன்னுயிர் பற்றிக் கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் தன்னலமற்ற சேவை புரிந்து வருவோருக்கு அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் மனப்பூர்வமான நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

தூய்மைப் பணியாளர்களை வாகனங்களில் அழைத்துச் செல்லும் போது உரிய சமூக இடைவெளி விட்டு அமர வைப்பதில்லை என்றும், அவர்களுக்கு முகக்கவசம் உள்ளிட்ட உரிய தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுகிறது.
எனவே, கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் உரிய - தரமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு சிறப்பூதியம் மற்றும் சிறப்பு ஊதிய உயர்வுகள் வழங்கப்பட வேண்டும் .
, பணியின் போது உயிரிழக்க நேரிடும் ஒவ்வொரு ஊழியரின் குடும்பத்திற்கும் தற்போது அரசு அறிவித்துள்ள 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை மிக மிக குறைவு என்பதால் - ஒரு கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

உபகரணங்கள் கொள்முதலில் மேலும் தாமதத்தைத் தவிர்த்திடுக!

நாளுக்கு நாள் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து - மக்கள் அச்சத்தில் இருப்பதால், தற்போது முதலமைச்சர் கூறியுள்ள 32,371 தனிமை வார்டுகளும், 5,934 அவசரச் சிகிச்சை வார்டுகளும் போதாது என்றும், மேலும் இந்த நோயின் பிரச்சினையே “மூச்சுத்திணறல்” என்பதால் 3,371 வென்டிலேட்டர்கள் முற்றிலும் போதாது என்றும் இக்கூட்டம் கருதுகிறது.

மருத்துவ உட்கட்டமைப்பு குறித்து மருத்துவர்களும், நிபுணர்களும்கூட இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்த வண்ணம் இருக்கிறார்கள். ஆகவே மாவட்டந்தோறும், காலியாக உள்ள பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் கொரோனா நோய்த் தொற்று படுக்கைகள் தயார் நிலையில் வைப்பது மிக அவசியமும் - அவசர முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகிறது.

ஜனவரியில் கொள்முதல் செய்யப்பட்ட மருத்துவ உபகரணங்களையும், ஆரம்ப கட்ட நோய் அறிகுறியைக் கண்டுபிடிக்கும் “விரைவு பரிசோதனை கருவிகள்” (Rapid Test Kits)”களையும் இதுவரை அரசு பெற முடியவில்லை என்பதும் - அந்தக் கொள்முதலில் ஏற்படும் காலதாமதம் நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முழுமையாக முடக்கியுள்ளது என்பதும் வேதனையளிக்கிறது.

“தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்தல்” “தனிமைப்படுத்திக் கொள்ளுதல்” “ஊரடங்கு” போன்றவை மட்டும் கொரோனா நோய்த் தொற்றுக்கான தீர்வல்ல என்பதையும் - “அதிக எண்ணிக்கையில் பரிசோதனை - நோயால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பு கொண்டவர்களை முழுவதுமாகக் கண்டறிவது” ஆகியவையும் நோய்ப் பரவல் தடுப்பிற்கு உரிய தீர்வு என்பதையும் உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால் இரண்டாவது கட்டமாக 03.05.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையிலும், மருத்துவ உபகரணங்களுக்காகவும், நோய் கண்டறியும் கிட்ஸ்களுக்காகவும் தமிழக அரசு மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்து கால வரையறையின்றிக் காத்திருப்பதும் - அதை மத்திய அரசும் வேடிக்கை பார்ப்பதும் மிகுந்த கவலையளிக்கிறது.

ஆகவே தமிழகத்திற்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை, போர்க்கால அடிப்படையில் மாநில அரசே கொள்முதல் செய்யவும், இதுவரை கொள்முதல் செய்யப்பட்டவற்றை உடனே பெறவும் மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் சிறப்பு நிவாரணமாக 5,000 ரூபாய் வழங்கிடுக!

கொரோனா நோய்த் தொற்று அண்டை மாநிலமான கேரளாவில் முதலில் ஜனவரி 30-ஆம் தேதியும் - தமிழ்நாட்டில் முதல் கொரோனா நோய்த் தொற்று மார்ச் 07 அன்றும் கண்டுபிடிக்கப்பட்டும், அதிமுக அரசு இந்த நோய்த் தொற்றின் கடுமை குறித்து எவ்வித கவலையும் கொள்ளாமல் - மார்ச் மாதம் முதல் மாவட்டந்தோறும் கூட்டத்தைக் கூட்டி அரசு விழாக்களை நடத்துவதில் ஆர்வம் காட்டி வந்தது.

பிரதான எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்தும், “சுய ஊரடங்கு” கடைப்பிடிக்கப்பட்ட பிறகும்கூட - அரசு, பல லட்சம் மாணவர்களை “பிளஸ் டூ” தேர்வு எழுத வைத்தது. நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஜனவரி மாதத்திலிருந்து அரசுக்குப் போதிய கால அவகாசம் இருந்தும் அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வந்தது வேதனைக்குரியது. பின்னர், மார்ச் 22-ஆம் தேதியன்று கடைப்பிடிக்கப்பட்ட “சுய ஊரடங்கு”, மார்ச் 25-ஆம் தேதி முதல் “21 நாட்கள் ஊரடங்காக”த் தொடரப்பட்டது.

ஊரடங்கு காலத்தில் முதல்வரின் கணக்குப்படி 35.89 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மற்ற வெளி மாநிலத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு ஏற்பட்ட வருமான, வாழ்வாதார இழப்பு, ஏழை - எளிய - நடுத்தர மக்கள் படும் இன்னல்கள், சிறு குறு தொழில்கள் உள்ளிட்ட அனைத்து வகை தொழில்களுக்கும் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு - இவற்றால் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் ஏற்பட்டுள்ள பேராபத்து - பெரும் பின்னடைவு ஆகியவற்றை இந்த அரசு உரிய அளவு புரிந்து கொள்ளவில்லை என்பதை அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் மிகுந்த வேதனையுடன் பதிவு செய்கிறது.

கடந்த காலப் பேரிடர்களில் நிதி கேட்டு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி விட்டு, எப்படி அ.தி.மு.க அரசு “வரும்போது வரட்டும்” என்று அமைதி காத்ததோ அதைப்போலவே, கொரோனா நோய்த் தொற்று விஷயத்திலும், பாய்ந்து காரியம் ஆற்றுவதை விடுத்து, மத்திய பா.ஜ.க. அரசிடம் பயந்து பதுங்கி ஒடுங்கியிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.

மத்திய அரசிடம் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகளுக்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் “சிறப்பு மானியமாக”க் கோரி விட்டு, வெறும் 870 கோடியே 88 லட்சம் ரூபாய் மட்டும் அளித்துள்ள மத்திய அரசிடம் “கோரிய நிதியைப் பெற முடியாமலும்” - நியாயத்தைத் தட்டிக் கேட்க முடியாமலும் தவிப்பதற்கு இந்தக் கூட்டம் வருத்தம் தெரிவிப்பதுடன்; தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து - கலந்தாலோசனைக் கூட்டத்தை நடத்தி - மத்திய அரசிடமிருந்து போதிய நிதியைப் பெறுவதற்கும் - நோய்த் தடுப்புப் பணிகளில் அனைவரையும் அரவணைத்து ஒற்றுமையுடனும் முனைப்புடனும் செயல்படுவதற்கும் கூடத் தாமதித்துத் தயங்கி நிற்கும் அதிமுக அரசின் செயலுக்கு இந்தக் கூட்டம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

முதல் ஊரடங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கே முழு நிவாரணமும் போய்ச் சேராத சூழலில், தற்போது 03.05.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கினால் விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் மேலும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

ஆகவே அவர்களின் குறைந்தபட்ச வாழ்க்கைத் தேவையை ஈடுகட்ட அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் தலா 5,000 ரூபாய் சிறப்பு நிவாரண உதவியாக வழங்கிட வேண்டுமென்றும், ஊரடங்கினைச் சரியாக நடைமுறைப்படுத்திடும் வகையில் அனைவருக்கும் அத்தியாவசியப் பொருட்களை வீட்டிற்கே கொண்டு சென்று வழங்கிட வேண்டும் என்றும் இந்த கூட்டம் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

மாநில அரசு கோரியுள்ள 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை உடனடியாக மத்திய அரசு வழங்கிட வேண்டும் என்றும்; அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிவாரண உதவி வழங்குவதற்கு ஏற்ற நிதி உதவியை மத்திய அரசு வழங்கிட முன்வர வேண்டுமென்றும்; அனைத்துக் கட்சிகளின் இந்தக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

உணவு வழங்க அனுமதித்த உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு வரவேற்பு!

“உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொது நல அமைப்புகள், அரசியல் கட்சிகள் வழங்கலாம்” என்று உயர்நீதிமன்றம் அளித்துள்ள மனித நேய உத்தரவினை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் மனதார வரவேற்கிறது. பொதுவாக, பேரிடரின் போது பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது மனித குணம். “உடுக்கை இழந்தவன் கைபோல” மற்றவர் இடுக்கண் களைவது தமிழர் பண்பு.

அரசு அறிவித்த நிவாரணங்கள் ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கான குறைந்தபட்ச தேவைகளைக்கூட நிறைவு செய்ய இயலாத சூழலில், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், பொதுநல அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், பாதிக்கப்படும் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்வது நம் நாட்டில் தொடரும் நடைமுறை. இந்நிலையில், “உணவுப் பொருட்கள், அத்தியாவசிய சமையல் பொருட்கள் எதையும் நேரடியாக வழங்கக்கூடாது” என்று அரசு தடுப்பதும், மீறி வழங்கினால் “நடவடிக்கை” என்று அச்சுறுத்துவதும் மனிதநேயம் ஆகாது.

ஜனநாயகம் அனுமதிக்காது. அதிமுக அரசின் உள்நோக்கம் கொண்ட இந்த செயலை ஒரு போதும் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏப் 12 அன்று பிறப்பித்த தடையுத்தரவிற்கு “விளக்கம்” என்ற பெயரில் முதலமைச்சர் ஏப் 13 அன்று ஒரு அறிக்கை வெளியிட்டாலும், ஏற்கனவே போட்ட தடையையே அந்த அறிக்கையும் சுட்டிக்காட்டிய நிலையில், கருணை அடிப்படையிலான உதவியைச் செய்திட உயர்நீதிமன்றத்தை அணுகியதன் அடிப்படையில், தற்போது வெளிவந்துள்ள தீர்ப்பு- அல்லல்படும் மக்களை அரவணைக்கும் அருமருந்தாகும்.

அரசியல் கட்சிகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், உயர்நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை மனதில் நிலை நிறுத்தி - குறிப்பாக கொரோனா தொற்றின் தன்மை உணர்ந்து - மக்களின் பாதுகாப்பு விஷயத்தில் வழக்கத்தைவிட மிக அதிகமான கவனத்துடன் “தனிமனித விலகலை” (Physical Distancing) கடைப்பிடித்து உணவு மற்றும் அத்தியாவசிய சமையல் பொருட்களைத் தேவைப்படும் இடங்களில் வழங்கிட வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அனுமதி மறுத்ததற்கு கண்டனம்.

முதல்வரும், அமைச்சர்களும், அதிகாரிகளும், ஆய்வு - ஆலோசனைக் கூட்டங்கள் என்ற பெயரில், “கூட்டம் கூட்டமாக” அமர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்; கேட்டால் அரசு தலைமைச் செயலகம் என்பார்கள்; அங்கே மட்டும் நோய்த் தொற்றுக்குத் தடை விதிக்கப் பட்டிருக்கிறதோ! ஆனால் அதே நேரத்தில் “ஊரடங்கை”யும், கொரோனா தொற்றையும் காரணம் காட்டி, திமுக தலைமையில் நடைபெறவிருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குத் தடை விதித்திருப்பதற்கு, இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

உரிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, கூட்டம் நடைபெறும் என்று உத்தரவாதம் கொடுத்ததையும், உள்நோக்கத்துடன் ஏற்க மறுத்து- கூட்டத்திற்கு அனுமதி மறுத்தது, வன்மம் நிறைந்த, ஜனநாயக விரோத செயலாகும். கடந்த காலங்களில் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற “2015 சென்னை பெருவெள்ளம்” “2016 வர்தா புயல்” “2017 ஒகி புயல்” “2018 கஜா புயல்” உள்ளிட்ட பேரிடர்களின்போது செய்த மலிவான “அரசியலை” , இந்த “கொரோனா பேரிடரிலும்” அதிமுக தொடர்ந்து செய்துவருகிறது.

ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஒரே காரணத்தினாலே, “ஊரடங்கு உத்தரவு தனக்கோ, தன் அமைச்சர்களுக்கோ, அதிமுகவிற்கோ இல்லை; அது எதிர்க்கட்சிகளுக்கு மட்டும்தான்” என்ற அடிப்படையில் - சர்வாதிகார மனப்பான்மையுடன் முதலமைச்சர் செயல்படுவது, யாராலும் ஏற்றுக் கொள்ளமுடியாத, ஆரோக்கியமற்ற அணுகுமுறை ஆகும். ஆகவே முதல்வர், பேரிடர் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளில்- அரசியலை நுழைக்காமல்- அனைத்துக் கட்சிகளையும், பொதுநல அமைப்புகளையும், தொண்டு நிறுவனங்களையும் - அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்து, ஒற்றுமையுடன் ஒரே நோக்கில், மக்கள் பணியாற்றிட வேண்டும் என்று இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

“கரோனாவின் கோரப் பிடியிலிருந்து விரைந்து விடுபடுவீர்” தமிழக மக்களுக்கு வேண்டுகோள்!

கடந்த மூன்று வாரங்களை அடுத்து, இரண்டாவது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் - “தனிமனித சுகாதாரப் பாதுகாப்பு” “சமுதாயப் பாதுகாப்பு” ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில், “ஊரடங்கு உத்தரவினை முழுமையாகக் கடைப்பிடித்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குவது”, “நோய்த் தொற்று அறிகுறி இருந்தால் உடனே மருத்துவர்களுக்குத் தெரிவிப்பது”.

“சோப்பு மற்றும் சோப்பு நீர் கொண்டு கை கால்களை தொடர்ந்து சுத்தம் செய்வது”, “வெளியில் செல்லும் போது தவறாமல் முகக்கவசம் அணிந்து கொள்வது” “ரேசன் கடை, காய்கறி, மளிகைக் கடைகளுக்கும், அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பொது வெளியில் செல்லும் போதும், தங்கள் இல்லத்தில் உள்ள சுப துக்க நிகழ்வுகளிலும் கட்டாயம் தனிநபர் இடைவெளியை கடைப்பிடிப்பது” .

உள்ளிட்ட அனைத்துப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், கரோனா நோய்த் தொற்று குறித்து மத்திய - மாநில அரசுகள் அவ்வப்போது வழங்கிடும் நல்வாழ்வுக்கான அறிவுரைகளையும் முழுமையாகக் கடைப்பிடித்து தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும், நாட்டையும் கொரோனா நோயின் கோரப்பிடியிலிருந்து விடுவித்துப் பாதுகாத்திட முன்வர வேண்டும் என்று தமிழக மக்கள் அனைவரையும் அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது”.

இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்