இந்தியாவிலேயே முதலாவதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது தமிழகம்தான்; எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் பழனிசாமி பதிலடி

By செய்திப்பிரிவு

எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலர் தவறாக விமர்சனம் செய்கின்றனர் என, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (ஏப்.16) மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:

"கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் எப்படி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன, அரசு அறிவித்த அனைத்துத் திட்டங்களும் எப்படி செயல்படுத்தப்படுகின்றன என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டன. அரசு அறிவித்த அறிவிப்புகளை மாவட்ட நிர்வாகம் முழுமையாகப் பின்பற்றி, வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றன.

நோய்த் தடுப்புப் பணிதான் மிகவும் முக்கியம். அதற்குத்தான் தமிழக அரசு முழு கவனம் செலுத்தியிருக்கிறது. அனைத்து மாநில முதல்வர்களுடனும் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் ஆலோசித்தபோதும் இதனைத்தான் வலியுறுத்தினார். அதன்படி, தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள்:

இந்நோய்த் தடுப்புப் பணிகளுக்காக மருத்துவ உபகரணங்கள் வாங்க 31.01.2020 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கான மருந்துகள் வாங்க பிப்ரவரி முதல் வாரத்தில் ஆணை வழங்கப்பட்டது. இதற்காக ரூ.146 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 23.01.2020 அன்றே விமான நிலையங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 07.03.2020 அன்று தமிழகத்தில் முதல் கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

திருச்சி, கோயம்புத்தூர், மதுரை மற்றும் பூந்தமல்லியில் தனிமைப்படுத்தும் வசதிகள் 15.03.2020 அன்று தொடங்கப்பட்டன. 15.03.2020 அன்று பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்கவும், எல்லையோர மாவட்டங்களில் திரையரங்குகள், மால்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அன்றே பள்ளிகளும் மூடப்பட்டன.

16.03.2020 அன்று மாநில எல்லைகளில் பரிசோதனைகள் தொடங்கப்பட்டன. 23.03.2020 அன்று தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மத்திய அரசுக்கு முன்பாகவே தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. அதையடுத்து 24.03.2020 அன்று 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என, மத்திய அரசு அறிவித்தது.

12 முறை என் தலைமையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. காணொலிக் காட்சி மூலமாக 3 முறை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வுக்கூட்டங்கள் நடைபெற்றன. பிரதமர் இருமுறை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். தடுப்புப் பணிகளை துரிதப்படுத்த தமிழகத்தில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு குழுக்களுக்கும் தனித்தனியாகப் பணிகள் ஒதுக்கப்பட்டன. இந்தக் குழுக்கள் துறைச் செயலாளர் தலைமையில் நிர்வகிக்கப்பட்டது. ஒவ்வொரு பணிக்குழுவிலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர். இந்தக் குழுக்களுடன் 2 முறை ஆய்வுக்கூட்டங்கள் என்னுடைய தலைமையில் நடைபெற்றன.

தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழுவும் அமைக்கப்பட்டது. தலைமைச் செயலாளர் 12 குழுக்களுடன் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர்களுடன் தொடர்ந்து 4 முறை தலைமைச் செயலாளர் ஆய்வுப்பணி மேற்கொண்டார். அனைத்து மதத் தலைவர்களுடனும் தலைமைச் செயலாளர் கூட்டம் நடத்தினார்.

நோய்ப்பரவலைத் தடுப்பதற்காக 19 பேர் கொண்ட மருத்துவக் குழுவும் அமைக்கப்பட்டது. அவர்கள் அளித்த ஆலோசனைகளை தமிழக அரசு பெற்றது. அந்த ஆலோசனைகளின் அடிப்படையில் நோய்த் தடுப்புப் பணிகளில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மார்ச் மாத இறுதியில் 530 மருத்துவர்கள், 1,000 செவிலியர்கள், 1,500 ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்களை மருத்துவப் பணியில் தமிழக அரசு ஈடுபடுத்தியது. 334 சுகாதார ஆய்வாளர்கள், 2,715 பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் 13.04.2020 அன்று நியமிக்கப்பட்டனர். இந்த நோயைத் தடுப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இந்த நோய் எளிதாகப் பரவக்கூடியது.

நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா, மருத்துவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறதா என்பதைக் கண்டறிய 12 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளனர்.

அரசு, தனியார் சேர்ந்து, தமிழகத்தில் 3,371 வென்டிலேட்டர்கள் உள்ளன. இதில், 2,501 வென்டிலேட்டர்கள் அரசின் கையிருப்பில் உள்ளன. 870 வென்டிலேட்டர்கள் தனியாரின் கையிருப்பில் உள்ளன. 65 லட்சம் மூன்று மடிப்பு முகக்கவசங்கள் உள்ளன. 3 லட்சம் என்-95 முகக்கவசங்கள் உள்ளன. 2 லட்சம் பிபிஇ முழு உடல் பாதுகாப்புக் கவசங்கள் உள்ளன.

ஆய்வக உபகரணங்கள் பிசிஆர் தொகுப்புகளுள், ஐசிஎம்ஆர் 20 ஆயிரம், இப்போது டாடா நிறுவனம் 40 ஆயிரம், டிஎன்எம்எஸ்சி 1 லட்சத்து 35 ஆயிரம் என மொத்தம் 1 லட்சத்து 95 ஆயிரம் கிட் நம்மிடம் உள்ளன. இதில் 68 ஆயிரம் பிசிஆர் கிட் அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனைக்காக வழங்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கையாக, 2,571 வென்டிலேட்டர்கள், பிசிஆர் தொகுப்பு 35 ஆயிரம் கிட், 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கவும் கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலர் விமர்சனம் செய்கின்றனர். இப்போதுதான் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக விமர்சிக்கின்றனர். அது தவறு, ஏற்கெனவே அரசிடம் போதுமான அளவில் உள்ளது. மேலும் என்னென்ன தேவை என்ற கோரிக்கைகளையும் பிரதமரிடம் முன்வைத்துள்ளோம். முன்னெச்சரிக்கையாக, இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்