ஊரடங்கு உத்தரவு காரணமாக சிரமப்படும் பொதுமக்களுக்கு உணவு, அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை நேரடியாக வழங்க தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்பாடு விதித்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்த வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள், அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை அரசியல் கட்சிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.
‘‘இவ்வாறு வழங்குவது சமுதாய விலகலுக்கு எதிராக உள்ளது. இதனால் கரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது. இனி உணவுப் பொருட்களையும், அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களையும் வழங்க அரசியல் கட்சிகளுக்கும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. அரசு, மாநகராட்சி, போலீஸார் மூலமே விநியோகிக்க வேண்டும்’’ என தமிழக அரசு உத்தரவிட்டது.
இதை சென்னை மாநகராட்சி ஆணையரும் உத்தரவாகப் பிறப்பித்து மீறி யாராவது உணவு, நிவாரணப் பொருட்கள் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். இந்த உத்தரவை அரசியல் கட்சித் தலைவர்கள், தன்னார்வலர்கள் எதிர்த்தனர். இதையடுத்து தமிழக அரசுத் தரப்பில், தடை என்பதைக் கட்டுப்பாடுகளாக மாற்றி உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்டோர் சார்பில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அவர்களது மனுக்களில், பாதிக்கப்பட்டுள்ள விளிம்பு நிலை மக்களுக்கும், தினக்கூலிகளுக்கும் உதவும் வகையில், அவர்களுக்கு உணவு மற்றும் மளிகைப் பொருட்களையும், மருந்துப் பொருட்களையும் வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவ்வாறு வழங்கும்போது சமூக விலகல் பின்பற்றப்படுவதாகவும், முகக் கவசம், கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தே உதவிகள் வழங்கப்பட்டு வந்ததாகவும் குறிப்பிடப்பட்டது.
ஒரு புறம் வசதியான மக்களுக்கு ஆன்லைன் மூலம் பொருட்கள் கிடைக்க அனுமதியளித்துள்ள அரசு, ஏழை மக்களுக்கு நேரடியாக உணவுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
“130 கோடி மக்களை அரசால் மட்டுமே முழுமையாக அணுக முடியாது. உதவி வேண்டுபவர்களுக்கு தேவையானவற்றை சக குடிமகன்கள் வழங்க வேண்டுமென பிரதமரே அறிவுறுத்தியுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்படிச் சென்று வழங்கும்போது கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது” என திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார்.
கட்சிகளும் தன்னார்வலர்களும் உதவிகளை வழங்கும்போது இரண்டு நாட்களுக்கு முன்பாக உரிய அனுமதி பெற வேண்டும் என்ற அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும், உதவிகள் வழங்குவது குறித்து உள்ளாட்சி அமைப்புகளிடம் தெரிவித்தால் போதும் என்று திருத்தி அமைக்கக் கோரிக்கை வைத்தார்.
அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, “மற்ற இக்காட்டான காலகட்டங்கள் போலவோ அல்லது இயற்கை பேரிடர் காலம் போன்றோ தற்போதைய நிலை இல்லை. மிகவும் ஆபத்தான கொடிய பேரிடராக கரோனா தொற்று உள்ளதால் அவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு தன்னார்வலர் உணவு வழங்கச் சென்றால் அதை வாங்க 300-க்கும் அதிகமான மக்கள் கூடுகிறார்கள். அவ்வாறு கூடும்போது நோய்த் தொற்றுக்கு அதிக வாய்ப்புள்ளதால் இதை அனுமதிக்கக்கூடாது” என்று கூறினார். அதற்கான புகைப்பட ஆதாரங்களையும் தாக்கல் செய்த அவர், பதில் மனுத் தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து அரசு பதிலளிக்க அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள், இந்த வழக்குகளில் இன்று (16/4) தீர்ப்பளிப்பதாகத் தெரிவித்தனர்.
அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. “தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் நிவாரணப்பொருட்கள் வழங்க எந்த தடையும் இல்லை, அவ்வாறு வழங்கப்படும் பொருட்களை அரசு சோதித்து வழங்க அனுமதிக்கும், புயல் வெள்ளம் போன்ற பேரிடர் காலம் போன்றது அல்ல இந்த காலக்கட்டம்.
நிவாரணப்பொருட்கள் வழங்கும்போது சமூக விலகல் மீறப்படுகிறது. அதனால்தான் அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை அளித்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு, “அரசின் விதிமுறைகளைப்பின்பற்றி தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு நிதி வழங்கலாம். தமிழக அரசு, சுகாதாரத்துறை வழங்கியுள்ள சுகாதார நெறிமுறைகளை பின்பற்றி தான்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கலாம், வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் நிவாரணப் பொருட்களை வழங்கலாம். தகவல் தெரிவித்தால் போதும் அனுமதி கேட்கத்தேவை இல்லை.
நிவாரணப்பொருட்கள் வழங்கும் முன் 48 மணி நேரத்துக்கு முன் அரசுக்கு தெரிவிக்க வேண்டும், நிவாரணப்பொருட்களை கொண்டுச் செல்லும் வாகனங்களில் அதிகப்படியாக 3 பேருக்கு மேல் செல்லக்கூடாது” .
என்கிற நிபந்தனையுடன் அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago