தேவையின்றி ஊரடங்கை மீறுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று (ஏப்.16) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் இரண்டாம் கட்ட ஊரடங்கு நடைமுறைக்கு வந்து, இன்றுடன் இரண்டு நாட்களாகிவிட்ட நிலையில், அதை மதிக்காமல் பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவது அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. ஊரடங்கை மீறுவோர் மீது தொற்றுநோய் சட்டப்படி தொடரப்படும் வழக்குகள் சம்பந்தப்பட்டோரின் எதிர்காலத்தை பாழாக்கிவிடும் என்பதால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கத்துடன் நாடு முழுவதும் கடந்த மாதம் 24-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஆணை, மே மாதம் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. உள்ளூர் காவலர்கள் முதல் மாநில முதல்வர், பிரதமர் வரை அனைவரும் ஊரடங்கை மதித்து நடக்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.
நானும் இது தொடர்பாக தொடர்ந்து அறிவுரைகளை வழங்கி வருகிறேன். ஆனால், ஊரடங்கை மீறி சாலைகளில் சுற்றுவோர் எண்ணிக்கையும், பொது இடங்களில் குவிவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று காலை காய்கறி வாங்குவதற்காக பெருமளவில் மக்கள் குவிந்திருக்கின்றனர். அவர்களிடையே சமூக இடைவெளி என்ற உணர்வு சிறிதும் இல்லை. நாட்டில் வேறு எங்குமே காய்கறி இல்லை என்பது போல, கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்க மக்கள் முண்டியடித்தது அச்சத்தை ஏற்படுத்துகிறது.
சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களிலும் இதே நிலை தான் காணப்படுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இவர்கள் காய்கறிகளை வாங்குவதுடன், கரோனாவையும் சேர்த்து வாங்குகின்றனர் என்பது தான் உண்மை.
சென்னையில் கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளை மக்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்க சென்னை மாநகராட்சியும், பெருநகர வளர்ச்சிக் குழுமமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. தனியார் வணிக நிறுவனங்களும் காய்கறிகளை வீடுகளுக்கு கொண்டு சென்று வழங்குகின்றன.
» கரோனாவுக்கு நிதி திரட்டுவதாக கூறி மோசடி: ஈரோட்டில் மூன்று பேர் கைது; 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு
தமிழகத்தின் மற்ற நகரங்களிலும் இதே போன்ற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு விற்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் சந்தை விலையை விட குறைவாக உள்ளன. இவ்வளவுக்குப் பிறகும் சந்தையில் தான் காய்கறிகளை வாங்குவோம் என்று மொத்தமாக பொதுமக்கள் குவிந்தால், அவர்களை கரோனா வைரஸிடமிருந்து எவராலும் காப்பாற்ற முடியாது.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சாலைகளில் சுற்றும் இளைஞர்களின் எண்ணிக்கையும் குறையவில்லை. முக்கிய சாலைகளில் காவல்துறையினரின் கெடுபிடி அதிகமாக இருந்தால், உட்புற சாலைகளில் அதிக அளவில் வலம் வருகின்றனர். இது ஊர் சுற்றும் காலமல்ல... கரோனாவிலிருந்து மக்களைக் காப்பதற்காக ஊரடங்கும் காலம் என பல முறை எச்சரித்தாலும் அவர்களுக்கு விழிப்புணர்வும், பொறுப்புணர்வும் வரவில்லை.
ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1.60 லட்சத்துக்கும் கூடுதலான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதன்பிறகும் வீட்டுக்குள் அடங்காமல் ஊர் சுற்றுவோர் அவர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பெரும் தீங்கை விளைவிக்கின்றனர்.
ஊரடங்கை மீறியதாக கைது செய்யப்படும் இளைஞர்கள் உடனுக்குடன் பிணையில் விடுவிக்கப் படுகின்றனர். அவ்வாறு செய்வதாலேயே பிரச்சினை முடிந்து விட்டதாக இளைஞர்கள் கருதக்கூடாது. இத்தகைய வழக்குகள் அனைத்தும் தொற்றுநோய் சட்டம், பொது சுகாதார சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன.
இச்சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி செய்பவர்களாக இருந்தால், இந்த வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படும் வரை பணிக்கு செல்ல முடியாது; புதிதாக எந்தப் பணிக்கும் விண்ணப்பிக்கவோ, ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அந்த பணியில் சேரவோ முடியாது; பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களை பெற முடியாது என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்திருப்பதை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுவதால் கரோனா நோற்றுத் தொற்றுக்கு ஆளாகும் ஆபத்தும், மற்றவர்களுக்கு நோயை தொற்ற வைக்கும் ஆபத்தும் உள்ளது. இவற்றைக் கடந்து ஊரடங்கை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டால் நீங்கள் உங்களின் எதிர்காலத்தையே இழக்க நேரிடும்.
எனவே, தமிழக மக்கள் அனைவரும் உங்களின் சொந்த நலன் கருதியும், பொது நலன் கருதியும் ஊரடங்கு காலத்தில் வீடுகளை விட்டு வெளியே வருவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோல், காவல்துறையினரும் கோயம்பேடு சந்தை உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் அதிக எண்ணிக்கையில் தடுப்பரண்களை அமைத்து மக்கள் கூடுவதை தடுக்க வேண்டும்; தேவையின்றி ஊரடங்கை மீறுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago