தமிழக மக்கள் வழக்கத்தை விட தீவிரமாக ஊரடங்கு ஆணையைக் கடைப்பிடிக்க வேண்டும்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

கரோனா இல்லாத தமிழகத்தை விரைந்து உருவாக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஏப்.15) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா வைரஸ் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு ஆணை மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கு ஆணை நீட்டிக்கப்பட்டிருப்பதால் மட்டுமே கரோனா பரவலைத் தடுத்து விட முடியாது; மாறாக, அந்த ஆணை கடைப்பிடிக்கப்படுவதை பொறுத்தே வெற்றி அமையும்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்படுவதன் நோக்கமே மக்கள் ஒருவரை ஒருவர் நெருங்கி விடக் கூடாது என்பதற்காகத் தான். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரு மீட்டருக்கும் குறைவான இடைவெளியில் இருக்கும்போது, அவர்களில் எவருக்கேனும் கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால் அது மற்றவர்களுக்கும் தொற்றிக் கொள்ளும் ஆபத்து உள்ளது.

அதைத் தடுப்பதற்காகத்தான் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை முதற்கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அந்த ஊரடங்கு பெரும்பான்மையான மக்களால் கடைப்பிடிக்கப்பட்டது; அதனால் கரோனா வைரஸ் பரவல் குறிப்பிடத்தக்க அளவில் கட்டுப்படுத்தப்பட்டது என்பது உண்மை; அதேபோல், கணிசமான எண்ணிக்கையிலானோர் ஊரடங்கை மதிக்காமல் வெளியில் சுற்றியதும் உண்மை.

தமிழ்நாட்டில் ஊரடங்கு காலத்தில் வெளியில் சுற்றியதாக சுமார் 2 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; ஒன்றரை லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்ற புள்ளி விவரம் இதை உறுதி செய்யும். அதுமட்டுமின்றி, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 42 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் 21 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

இதற்கு அவர்கள் ஊரடங்கை மதிக்காமல் வெளியில் நடமாடியதுதான் காரணம் என்று கூறப்படும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை மறுக்க முடியாது. ஊரடங்கு ஆணை இன்னும் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டிருந்தால், கரோனா வைரஸ் பரவலை இன்னும் கூடுதலாகக் கட்டுப்படுத்தியிருக்கலாம் என்ற கருத்து நம்பத் தகுந்ததாகவே உள்ளது.

கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட பலர் அதற்கான அறிகுறி கூட இல்லாமல் நடமாடக்கூடும் என்று கூறப்படும் நிலையில் ஊரடங்கை 99 விழுக்காட்டினர் பின்பற்றி ஒரே ஒரு விழுக்காட்டினர் கடைப்பிடிக்காமல் இருந்தால் கூட அவர்கள் மூலமாக கரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது.

அதுமட்டுமின்றி, வரும் ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணிகளைத் தொடங்கலாம், ஏற்றுமதி வாய்ப்புள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களைத் தொடங்கலாம், ஊரகப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளை இயக்க அனுமதிக்கலாம் என்பன உள்ளிட்ட ஏராளமான தளர்வுகளை மத்திய அரசு இன்று அறிவித்திருக்கிறது. இத்தகைய சூழலில் தமிழ்நாட்டு மக்கள் வழக்கத்தை விட தீவிரமாக ஊரடங்கு ஆணையை கடைப்பிடிப்பது கட்டாயமாகும்.

அதேநேரத்தில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டிய விஷயங்களும் உள்ளன. ஊரடங்கின் மூலம் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த முடியுமே தவிர குணப்படுத்த முடியாது. நோய் பாதித்த பகுதிகளில் வாழும் மக்களை சோதித்து அவர்களுக்கு பாதிப்பு இருந்தால், மருத்துவம் அளித்து குணப்படுத்த வேண்டும். அதன்பிறகு தான் ஊரடங்கு ஆணையைத் தளர்த்த முடியும். அதற்கு கரோனா நோய் பாதித்த பகுதிகளில் அதிவேக ரத்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான கருவிகளை உடனடியாக இறக்குமதி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவில் முதல்கட்டமாக 21 நாட்கள், இரண்டாம் கட்டமாக 19 நாட்கள் என ஒட்டுமொத்தமாக 40 நாட்கள் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் நிலையில், அது மீண்டும் நீட்டிக்கப்படாமல் இருப்பது அரசு மற்றும் பொதுமக்கள் கைகளில்தான் உள்ளது.

பொதுமக்கள் அனைவரும் ஊரடங்கை முழுமையாக மதித்து நடக்க வேண்டும்; தவிர்க்க முடியாமல் வெளியில் வந்தால் கூட முகக்கவசம் அணிய வேண்டும். மத்திய, மாநில அரசுகளும் அவற்றின் பங்குக்கு அதிவேக ரத்தப் பரிசோதனைகளை விரைந்து நடத்த வேண்டும். அதன் மூலம் கரோனா இல்லாத தமிழகத்தை விரைந்து உருவாக்க வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்