துடியலூரில் கரோனா வைரஸ் பாதித்த நபருடன் தொடர்பு; 40 போலீஸாருக்கும் பரிசோதனை

By டி.ஜி.ரகுபதி

கோவை மாவட்டம் துடியலூரில் கரோனா வைரஸ் பாதித்த நபருடன் தொடர்பில் இருந்த 40 போலீஸாருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவை துடியலூரைச் சேர்ந்த 61 வயது நபர், கடந்த 23-ம் டெல்லியில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்தார். அவருக்கு இருமுறை நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை எனத் தெரிந்தது.

பின்னர் அவர் கடந்த சில தினங்களாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள துடியலூர் போலீஸாருக்கும், அங்குள்ள சிலருக்கும் உணவு விநியோகித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அந்த 61 வயது நபருக்கு 3-வது முறையாக நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா வைரஸ் பாதிப்புள்ளது உறுதியானது.

இதையடுத்து, அவர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் தொடர்பில் இருந்த துடியலூர் போலீஸார் 40 பேருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என இன்று (ஏப்.14) முதல் பரிசோதித்து வருகின்றனர். துடியலூர் ஆரம்ப சுகாதார மையத்தில் இந்தப் பரிசோதனை நடைபெறுகிறது.

மேலும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் என 120 பேருக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE