கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கத்தான், ஊரடங்கு உத்தரவு. ஆனால், கட்டுப்பாடுகளைப் பற்றிக் கவலைப்படாமல் வெளியில் சுற்றிக்கொண்டிருப் பவர்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் போன்றோரால் கரோனா பீதி, நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இது ஒருபுறம் என்றால், வெளியில் சுற்றுபவர்களுக்கு வித்தியாசமான தண்டனை எனும் பெயரில் போலீஸார் நடந்துகொள்வது, கரோனா பரவலுக்கு இன்னொரு காரணமாகிவிடுமோ என்ற கவலையும் எழுந்திருக்கிறது.
கரோனா பாதிப்பில் தமிழகத்திலேயே இரண்டாவது மாவட்டமாக உள்ளது கோவை. ‘காலை 6 மணி முதல் மதியம் 12 வரை மளிகைக் கடைகள் திறந்திருக்கும். காய்கறிகள் நகரின் பெரிய பேருந்து நிலையங்களான உக்கடம், காந்திபுரம், கவுண்டம்பாளையம் பேருந்து நிலையங்களில் கடை விரிக்கப்பட்டிருக்கும்’ என்று மாவட்ட நிர்வாகமே அறிவித்திருப்பதால் காலை 6 மணி முதல் 10 மணி வரை மக்கள் வீதியில் இறங்கிவிடுகிறார்கள். குறிப்பாக, ரங்கே கவுடர் வீதி, உக்கடம், கருப்ப கவுண்டர் வீதி, காந்திபுரம் 8-ம் நம்பர், கவுண்டம்பாளையம் எம்.ஜி.ஆர் மார்க்கெட் பகுதிகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் குவிந்துவிடுகிறார்கள். இவர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுகிறார்களோ இல்லையோ, அவரவர் ‘மவுத் மாஸ்க்’ அணிந்தோ, கர்ச்சீப், துண்டை வாயில் கட்டிக்கொண்டோ, பொருட்களை வாங்கிக்கொண்டு மற்றவர்களை உரசிவிடாமல் உஷாராக நகர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்து பறந்துவிடுகிறார்கள்.
வெளியில் வரும் மக்கள் இப்படி ஓரளவுக்கேனும் சமூக விலகலைக் கடைப்பிடித்தாலும், போலீஸார் ஒவ்வொரு இடத்திலும் அவர்களை ஒன்றாக நிறுத்திவைத்து விடுகிறார்கள். குறிப்பாக, உக்கடம், ஆத்துப்பாலம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான வாகனங்களை அரை மணிநேரம், ஒரு மணிநேரம் என்று நிறுத்திவைத்து, அவர்களுக்கு ஒட்டுமொத்தமாக ‘லெக்சர்’ எடுத்தே அனுப்புகிறார்கள்.
இன்று காலையில் 9 மணிக்கு உக்கடம் பேருந்து நிலையம் அருகே 5 முக்கு சாலையில் அதுதான் நடந்து கொண்டிருந்தது. ஆத்துப்பாலத்திலிருந்து தெற்குப் புறம் பெரிய குளக்கரை சாலையில் வந்த 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஓரிடத்தில் தேங்கியிருந்தன.
மேற்குப்புறம் கோவைபுதூர், பேரூர் சாலையில் வந்த வாகனங்கள் நூற்றுக்கணக்கில் தேங்கி நின்றன. அதில் ஆவின் பாலக வண்டி, கேஸ் சிலிண்டர் ஏற்றிய வாகனம், காய்கறி ஏற்றிய வாகனங்கள் எல்லாம் அடக்கம். உக்கடம் பஸ் நிலையம் அருகே உள்ள சாலையில் குப்பை வண்டிகள், மாநகராட்சி வண்டிகள் பத்து பதினைந்து நின்றிருக்க, அவற்றுக்குள்ளாக ஊடுருவியபடி 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள்.
அவற்றையெல்லாம் நான்கைந்து போலீஸார் மற்றும் தன்னார்வலர்கள் தடுத்து நிறுத்தியிருந்தனர். வடக்குப்புறம் இருநூறுக்கும் மேற்பட்ட வாகனங்கள். அதன் முன்னே ஒரு பெண் இன்ஸ்பெக்டர், கூடவே நான்கைந்து போலீஸார். ஒருவர் கையில் செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். பெண் இன்ஸ்பெக்டர், அங்கே தடுத்து நிறுத்தப்பட்டிருந்த வாகன ஓட்டிகளுக்கு சிறப்பு லெக்சர் கொடுத்துக் கொண்டிருந்தார்.
“ஒரு நாளைக்கு எத்தனை தடவைதான் வீட்டை விட்டு வெளியே வருவீங்க. நீங்க சும்மா வந்துட்டு போக மாட்டீங்க. இங்கிருந்து கரோனாவைக் கொண்டு போவீங்க. அதையே திரும்பக் கொண்டு வந்து ஊரெல்லாம் பரப்புவீங்க. நாங்க எல்லாம் புள்ளை குட்டிகளை வூட்ல வுட்டுட்டு எதுக்காக இப்படி நின்னுட்டு காவல் காத்துட்டு இருக்கோம் தெரியுமா?”
இப்படி போய்க்கொண்டே இருக்கிறது விழிப்புணர்வுப் பிரச்சாரம். அப்போது, வீடியோ எடுத்துக்கொண்டிருந்த போலீஸ்காரரிடம் ஒரு நடுத்தர வயதுக்காரர் வந்து கெஞ்சுகிறார். “சார்… சார்… நான் ஆஸ்பத்திரிக்கு காலையில சுகர் டெஸ்ட்டுக்குப் போயிட்டு வர்றேன். நேரத்துக்குப் போய் சாப்பிடணும். இல்லைன்னா மயக்கம் வந்துடும்னு டாக்டர் சொல்லியிருக்கார். தயவுசெஞ்சு என்னைப் போக விடுங்களேன்” என்கிறார்.
அப்போது, இன்னொரு போலீஸ்காரர் ஓடி வருகிறார். “ஏய்யா உன்னை மட்டும் விட்டா ஆச்சா? எத்தனை பேர்தான்யா சுகர், பி.பி.ன்னுட்டு வந்துட்டு போயிட்டே இருப்பீங்க? உங்களைத்தான் முதல்ல கரோனா அட்டாக் பண்ணும் தெரியுமா. போய் நில்லுய்யா” என்று விரட்டுகிறார்.
அந்த மனிதர் பரிதாபமாக ஓடிப்போய் தன் ஸ்கூட்டர் முன்னால் நிற்கிறார். தென்புறம் உள்ள கூட்டத்தினர் தங்கள் வாகனங்களை முட்டி மோதிக்கொண்டு நிறுத்துகிறார்கள். “மினிஸ்டர் யாராவது வர்றாங்களா? ஏன் நிறுத்தி வச்சிருக்காங்க?” என அருகில் இருந்த போலீஸ்காரரிடம் ஒருவர் கேட்கிறார். பதிலுக்கு ஒரு தன்னார்வலர் தன் கையில் பிரம்பை வைத்துக்கொண்டு சொல்கிறார்: “இன்னும் ஒரு மணிநேரம் நில்லுங்க. அதுதான் உங்களுக்கெல்லாம் தண்டனை!”
அதே நேரம் அந்த பெரிய குளக்கரை சாலையில் தேங்கி நின்ற வாகனங்களுக்கு பின்னே ஒரு ஆம்புலன்ஸ் சைரன் சத்தத்துடன் வருகிறது. முன்னால் நிற்கும் இருசக்கர வாகனங்கள் முன்னும் பின்னும் நகர்ந்து அதற்கு வழிவிடுகின்றன. அதற்காகவே ஆம்புலன்ஸ் 5 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. அப்போதும் அந்த ஆம்புலன்ஸை விட்ட போலீஸார், மற்ற வாகனங்களை விடவில்லை.
சரியாக அரை மணிநேரம் கழித்தே ஒவ்வொரு பாதையாக விட்டார்கள். “தினந்தோறும் இங்கே இதுதான் நடந்துட்டு இருக்கு. இங்கேதான் காய்கறி, அரிசி மண்டி, பழ மண்டி எல்லாம் இருக்கு. காலையில 6 மணியிலிருந்து 10 மணி வரைக்கும்தான் கடை திறந்திருக்கும்னு எல்லாரும் டூவீலரை எடுத்துட்டு கிளம்பி வர்றாங்க. ஆனா, அதையெல்லாம் துளியும் சட்டை செய்யாம இப்படி போலீஸார் இங்கே அவங்களை நிறுத்தி பிரசங்கம் பண்றாங்க. சும்மா விட்டா 30 அடி இடைவெளியில எல்லா வண்டியும் போய்ட்டு இருக்கும். இவங்க எல்லாரையும் ஒண்ணா நிக்க வச்சி இம்சை பண்றாங்க. அப்போ கரோனா பரவாதுன்னு என்ன நிச்சயம்?” என்று ஆதங்கப்பட்டார் அரிசிக் கடைக்காரர் ஒருவர்.
அதேபோல கோவை ஆட்சியர் அலுவலகத்தில், காலை 9.45 மணிக்கே நீண்ட வரிசை. வெளியூர் செல்கிறவர்கள். துக்க காரியத்துக்குச் செல்பவர்கள், வெளியூரிலிருந்து தங்கள் பிள்ளைகளைக் கூட்டி வர முயல்பவர்கள் என ஆட்சியரிடம் அனுமதிக் கடிதம் பெற பெருங்கூட்டம் நிற்கிறது. இங்கேயும் சமூக இடைவெளி துளியும் முறைப்படுத்தப்படவில்லை.
அடுத்தது போகிற வழியில் தோட்டங்காட்டுக்கு வேலைக்குப் போகிறவர்களை ஒரு மினி ஆட்டோ ஏற்றிச் சென்றது. இதில் இருபதுக்கும் குறையாதவர்கள் நெருக்கியடித்து ஒருவர் மடிமீது ஒருவர் அமராத குறையாகவே அமர்ந்து சென்றனர். அடுத்தது வைசியாள் வீதி. அங்கே ஒரு வங்கி. நீண்ட வரிசை. அங்கேயும் முட்டி மோதிக்கொண்டு பெருங்கூட்டம். ஒரு போலீஸ் இல்லை.
“போலீஸ்காரர்கள், அங்கங்கே இந்த டூவீலர் ஆசாமிகளை நெரிசலுடன் நிறுத்திவைத்து மணிக்கணக்கில் காத்திருக்க வைப்பதற்குப் பதில் இங்கே வந்து இந்த ஜனங்களை முறைப்படுத்தலாமே. சமூக இடைவெளி பேணச் செய்யலாமே?” என்று பேசிக்கொண்டிருந்தார் ஒருவர். அநேகமாக அவர் உக்கடம் முக்கில் போலீஸாரிடம் மாட்டி ஒரு மணிநேரம் லெக்சர் கேட்டவராக இருக்கும்!
தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து சாலைகளில் ராப்பகலாக பணியில் இருக்கும் போலீஸார் இதுபோன்ற சர்ச்சைகள் தங்களைச் சுற்றாமல் தவிர்க்கலாமே!
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago