ஊரடங்கு உத்தரவையும், சமூக இடைவெளியையும் முழுமையாகக் கடைப்பிடித்து வருகிறார் மதுரை ஆதீனம் குருமகா சந்நிதானம். வழக்கமாக தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு காட்சி ஊடகங்களுக்கு மட்டுமாவது நேர்காணல் தருகிற அவர், இந்த ஆண்டு பக்தர்கள், பத்திரிகையாளர்கள் யாரையுமே சந்திக்கவில்லை. அதே நேரத்தில், வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
அந்த வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
'' 'சார்வரி' ஆண்டு என்றால் 'எல்லோரும் வீறுகொண்டு எழுந்து தீயவற்றை ஒழிப்போம்' என்று பொருள். தமிழ் ஆண்டுகள் மொத்தம் அறுபது. அதில் 34-வது ஆண்டாக வருவது 'சார்வரி'. ஒவ்வொரு தமிழ் ஆண்டின் பெயருக்கும் ஒரு பொருளுண்டு. 'பிரபவ' என்பதற்கு 'நல்தோன்றல்' என்றும், 'விபவ' என்பதற்கு 'உயர்தோன்றல்' என்றும், நிறைவான ஆண்டாக வருகிற 'அட்சய' ஆண்டிற்கு 'வளம் கொண்ட கலன்கள்' என்றும் பொருள்.
இந்த சார்வரி ஆண்டில், மக்களாகிய நாம் அரசியல், சாதி, சமயம், மொழி, பதவி, பணம் ஆகியவற்றை ஒரு பக்கம் தள்ளிவைத்துவிட்டு, பொறாமை, பேராசையை விட்டொழித்து மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் உற்ற துணையாக இருந்து சைவ உணவு மாத்திரமே உண்டு, திருக்குறள் வழி நடந்து, பெரியோர்களை மதித்து நடந்து எதுவும் நிலையற்றது என்பதை உணர்ந்து உண்மையான கடவுள் பக்தியுடன் திகழ்ந்து, மாதம் மூன்று முறை மழை பெய்விக்குமாறு செய்து விவசாயத்தை செழிக்கச் செய்து, நமது நாட்டை மிக வலிமையுடைய நாடாக மாற்றி, மற்ற நாடுகளுக்கு இந்தியாவே முன்மாதிரி நாடு என்பதை உருவாக்கி, கரோனா போன்ற கொடூர நோய்கள் வராத நிலையை ஏற்படுத்தி எல்லோரும் நிம்மதியாக வாழ்வோம்''.
இவ்வாறு மதுரை ஆதீனம் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.